என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தெப்பகுளம் ஆழம் அதிகம் என்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
    • போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். இதனால் சமயபுரம் கோவில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

    இந்த கோவிலுக்கு உரிய தெப்பக்குளம், கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்த தெப்ப குளத்தில் இருந்துதான் பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்தி, பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று அம்மனை தரிசிப்பார்கள்.

    இந்த தெப்ப குளத்தில்தான் தெப்ப உற்சவம் நடைபெறும். கோவிலில இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள இந்த தெப்பகுளம் ஆழம் அதிகம் என்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

    பக்தர்கள் குளத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு எச்சரிக்கை பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த தெப்பக்குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது அங்கு சென்ற போலீசார் காக்கி சட்டை, பனியன் அணிந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதை கண்டனர்.


    இதனை தொடர்ந்து அங்கு விசாரணையை தொடங்கிய போலீசார், தெப்பகுளத்தை சுற்றி சோதனை மே ற்கொண்டனர். அப்போது அங்கு உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் மேலும் ஒரு ஆண் சடலம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த சடலத்தையும் மீட்டனர். இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அவர்கள் யார்? இது விபத்தா? தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து சமயபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் 2 ஆண் சடலங்கள் மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மக்கள் நேற்று காலை அந்த பயோடீசல் உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டனர்.
    • மக்கள் கடும் பாதிப்பு

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அண்மையில் 5 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பயோ டீசல் உற்பத்தி செய்யப்படும் ஆலையும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆலையில் இருந்து தினமும் அடர்ந்த கரும்புகை கடும் துர்நாற்றத்துடன் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு மூச்சு திணறல், தும்மல், அலர்ஜி ஏற்படு வதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

    கடந்த ஒரு மாதமாக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உயர் அதிகாரிக்கு தகவல் அளித்தும் கண்டு கொள்ள வில்லை என இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

    மேலும் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் ஏழு திங்கள்பட்டி, வாய்ப்பாடி, ஈங்கூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் பாதிப்படைத்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மிக அதிக அளவாக அடர் கரும்புகை கடும் துர்நாற்றத்துடன் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அளிப்பதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சுவிட்ச் ஆப் என்று வந்து உள்ளது.

    இதனால் கொதிப்படைந்த மக்கள் நேற்று காலை அந்த பயோடீசல் உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டனர்.

    ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் மூச்சுத் திணறலும் மயக்கமும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். உடனடியாக ஆலையை மூடி புகை வெளியேற்று வதை தடுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    முற்றுகையில் ஈடுபட்ட மக்கள் கூறும் போது, புதிதாக தொடங்கப்பட்டு உள்ள இந்த பயோ டீசல் ஆலையில் இருந்து வெளி யேறும் கரும்புகையால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைகின்றனர். ஏற்கனவே இங்குள்ள ஆலைகளால் நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதித்துள்ளன.

    தற்போது புதிதாக தொடங்கியிருக்கும் பயோடீசல் ஆலையால் காற்றும் மாசுபடுகிறது. இந்த ஆலை தொடர்ந்து இயங்கினால் பெருந்துறை சுற்று வட்டார மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கரும்புகையை பில்டர் செய்யாமல் அப்படியே வெளியேற்றுவதால் தான் இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

    இது குறித்து பலமுறை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நேற்று இரவில் இருந்து மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது. இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையி ட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    இதையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆலை நிர்வாகத்தினர் இப்போதைக்கு ஆலையை மூடி விடுவதாகவும் தகுந்த பாதுகாப்பு சாதனங்களை பொருத்திய பிறகே ஆலையை இயக்குவதாகவும் மக்களுக்கு உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    • எங்கள் கட்சியில் உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியேற மாட்டார்கள்.
    • விஜயுடன் இருக்கும் ரசிகர்கள் பாதிக்கு மேல் எனக்குதான் வாக்களிப்பார்கள்.

    தேனி:

    தேனி அருகே மதுராபுரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 4 முக்கிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்தே சந்தித்துள்ளது. இந்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்தாலும் வாக்கு சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    எனவே வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் தனித்தே போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம். அடுத்து வரும் தேர்தல்களிலும் எங்கள் நிலைப்பாடு மாறாது. தி.மு.க. இதுவரை கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டதே கிடையாது.

    கல்வியை மாநில உரிமையில் இருந்து எடுத்தது காங்கிரஸ் கட்சி, ஜி.எஸ்.டி. வரி, நீட், என்.ஐ.ஏ. ஆகியவற்றைக் கொண்டு வந்தது காங்கிரஸ். அதனை ஊட்டமாக வளர்த்தது மோடி. எனவே எங்கள் பார்வையில் காங்கிரஸ் தமிழ் இனத்தின் எதிரி. பாரதிய ஜனதா கட்சி மானுட குலத்தின் எதிரி.

    ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க முயன்ற போதும் விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கட்சி ஆரம்பித்தபோதும் ரசிகர்கள் கூட்டம் கூடினார்கள். அதே போல்தான் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்தபோதும் கூட்டம் கூடியுள்ளது.

    நடிகர்கள் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றினார். நான் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றவில்லை. விஜய்யை ரசிக்கும் வாக்காளர்கள் என்னுடைய வாக்காளர்கள் இல்லை. விஜயின் கட்சிக்கு தலைவர் அவர்தான். ஆனால் என்னுடைய கட்சிக்கு தலைவர் பிரபாகரன்.

    எனவே எங்கள் கட்சியில் உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியேற மாட்டார்கள். விஜயுடன் இருக்கும் ரசிகர்கள் பாதிக்கு மேல் எனக்குதான் வாக்களிப்பார்கள்.

    கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பதாக விஜய் குண்டு போட்டுள்ளார். இதனை நான் வரவேற்கிறேன. அந்த அறிவிப்பை ஏற்று அவரோடு கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது கொள்கை எந்த காலத்திலும் மாறாது.

    ஜனாதிபதியை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். வறட்சி வரும் போது புரட்சி வெடிக்கும். இனி வாழவே முடியாது என்ற நிலை வரும் போது மக்கள் புரட்சி செய்வார்கள். இலங்கையிலும், பங்களாதேசத்திலும் அதுதான் நடந்தது. அது போன்ற ஒரு நிலை இந்தியாவிலும் ஒரு நாள் நடக்கும்.

    சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்க கடைசி கருவி சாதிவாரி கணக்கெடுப்புதான். வகுப்பு வாத பிரதிநிதிதுவம் கொடுத்து விட்டால் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடும். ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பை தி.மு.க. எடுக்கவே எடுக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்தது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஒருநாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக ஒரு நிலையற்ற தன்மையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.7,315-க்கும், ஒரு பவுன் ரூ.58,520-க்கும் விற்பனை ஆனது.

    தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.59 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.7,375-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.109-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    29-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,000

    28-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520

    27-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,880

    26-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,880

    25-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,360

    24-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    29-10-2024- ஒரு கிராம் ரூ. 108

    28-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    27-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    26-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    25-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    24-10-2024- ஒரு கிராம் ரூ. 110

    • திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது.
    • பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிவதும், சில நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதும் வழக்கம்.

    இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) மாலையில் அமாவாசை தொடங்குகிறது. இதனால் வழக்கம் போல் நேற்று திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது.

    2-வது நாளாக இன்றும் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பாசிகள் படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. ஆனாலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர். 

    • தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று அரசியல் விழாவாக கொண்டாடப்பட்டது.

    தேவரின் அரசியல் வரலாறு, அரசியல் ஈடுபாடு குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதோடு தேவர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், லட்ச்சார்ச்சனை, அபிஷேகம் நடைபெற்றன. தொடர்ந்து ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் ஏராளமான பக்தர்கள், தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, பெருநாழி, கமுதி, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அலகு குத்தியும், காவடி எடுத்தும், இளைஞர்கள் ஜோதி ஏந்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதேபோல பலர் முடிக்காணிக்கையும் செலுத்தினர்.

    இந்த நிலையில், பசும்பொன் குருபூஜையை முன்னிட்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்காக மதுரை சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்தராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். 

    • கார் பந்தயத்தில் கலந்து கொள்வதாக அஜித் குமார் அறிவித்து இருக்கிறார்.
    • கார் பயிற்சி தொடர்பான வீடியோக்கள் வெளியிடப்பட்டன.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

    இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து 'அஜித் குமார் ரேசிங்'-ஐ துவங்கினார். அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.

    இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும், ரேசிங் பயிற்சி வீடியோவை அஜித் குமாரின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "உலக அளவில் சிறப்புக்குரிய "24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class" கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு. அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

    "நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை லோகோவை 'அஜித்குமார் ரேசிங்' யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்."

    "இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

    "மேலும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நமது #திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - #Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்."

    "விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மாணவர் பிரபு சூப்பர் ஹீரோ, சூப்பர் பவர் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்.
    • கடந்த வாரம் தான் சூனியத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தனது நண்பர்களிடம் கூறி உள்ளார்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பிரபு (19) என்ற மாணவர் கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை திடீரென கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

    4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் அவருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், தலையிலும் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

    மாணவர்கள் விடுதியின் 4வது மாடியில் இருந்து பிரபு கீழே குதிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவர் பிரபு சூப்பர் ஹீரோ, சூப்பர் பவர் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்ததுடன் அதுபோன்ற பவர் தனக்கு இருப்பதாகவும் நண்பர்களிடம் கூறியுள்ளார். தனக்கு யாரோ ஒருவர் சூனியம் வைத்ததாகவும், கடந்த வாரம் தான் சூனியத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தனது நண்பர்களிடம் கூறி உள்ளார்.

    தனக்கு சூப்பர் ஹீரோக்கள் போன்ற சூப்பர் பவர் இருப்பதாகவும், அதனால் எந்த கட்டிடத்தில் இருந்தும் தன்னால் குதிக்க முடியும் என்றும் பிரபு நம்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது.
    • கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரெயில், அரசு பஸ்களில் டிக்கெட் காலியாகிவிடுவதால், ஆம்னி பஸ்களை நாடிச்செல்கிறார்கள். ஆனால் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.

    இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தாலும் கூட, அதையும் பொருட்படுத்தால் பல மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருவதால், ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடு என்று உயர்ந்துவிட்டது. குறிப்பாக, மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பஸ்களின் கட்டணம் என்பது குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 500 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் பிடிபட்டனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள்கள் விற்பனையை தடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துணை ஆணையர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
    • அறிந்தும், அறியாதது போல ராமதாஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது.

    சென்னை:

    போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு 20 நாட்களாகியும் இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை. உடனடியாக அவர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். டாக்டர் ராமதாசின் இந்த அறிக்கைக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் இருக்கின்ற நிலையிலும், அதில் பணிபுரியும் 1,13,741 சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் தொகையாக ரூ.182.32 கோடி வழங்குவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு கடந்த 25-ந்தேதி உரிய நிதி ஒதுக்கீடு செய்து ரூ.182.32 கோடியானது போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    இதனை அறிந்தும், அறியாதது போல ராமதாஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது. நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும், வேறு அரசியல் செய்ய வழி இல்லாமலும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வழக்கின் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.
    • கணினி பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    சென்னை:

    சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.

    அப்போது, அமலாக்கத்துறை சாட்சியான தடயவியல் துறை கணினி பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். குறுக்கு விசாரணை நிறைவடையாததை அடுத்து, விசாரணையை நவம்பர் 7-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் தடயவியல் துறை கணினி பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    ×