என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னையின் பகுதிகளில் பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
- மணலி, கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை ஆகிய பகுதிகளில் 6 செ.மீ. மழை பெய்துள்ளத
இன்று சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர், கொரட்டூர், வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இந்நிலையில், அண்ணா நகரில் மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரை 9 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மணலி, கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை ஆகிய பகுதிகளில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் கனமழை எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசியல் கட்சி நடத்துபவர்கள் அந்த கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்று வந்தால் கூட்டணியில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
- அதிகார பங்கை வைத்து மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்ய முடியும் என்பதால் தான்.
மதுரை:
தேவர் ஜெயந்தி முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்து புதிதாக மாநாடு நடத்தி இருக்கிறார். தமிழகத்தில் சிறந்த நடிகர்களில் நல்ல நடிகர் அவர். அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர் விஜய் நடத்திய மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்கள்.
தற்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்து பணியாற்றி வருகிறோம். நடிகர் விஜய் கூட்டணியோ அல்லது அரசாங்கத்தில் பங்கு என்ற கோஷம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது தான்.
அரசியல் கட்சி நடத்துபவர்கள் அந்த கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்று வந்தால் கூட்டணியில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். காரணம் அந்த அதிகார பங்கை வைத்து மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்ய முடியும் என்பதால் தான்.
ஆனால் பெரும்பான்மையாக ஒரு கட்சி வெற்றி பெற்றால் கூட்டணி கட்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
ஆனால் ஆந்திராவில் பெரும்பான்மை இருந்தாலும் பவன் கல்யாணத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருக்கிறார்கள். எனவே ஆட்சியில் பங்கு என்பது கட்சி தலைமை எடுக்க வேண்டிய முடிவு. அது வெற்றி பெறும் எண்ணிக்கையை பொறுத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது பறக்கும் படை பாலு, வெங்கட்ராமன்,மலர் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- பசும்பொன் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்திருக்கிறது.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவரை போற்றக்கூடிய செயல்களையும், திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் தேவர் திருமகனார் பற்றி சொன்னதை பெருமைப்படுத்தி குறிப்பிட்டதை நான் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் மாதிரி கம்பீரமாக காட்சியளித்தார், தேவர் திருமகனார் என அண்ணா புகழ்ந்துரைத்துள்ளார்.
அதேபோல் கலைஞர் சொன்னது, வீரராக பிறந்தார். வீரராக வாழ்ந்தார். வீரராக மறைந்தார். அவர் மறைந்ததற்கு பிறகும் இன்றைக்கும் வீரராக அவர் போற்றப்படுகிறார் என்று கலைஞர் அவரைப்பற்றி புகழ்ந்து பேசிஇருக்கிறார்.
அத்தகைய தியாகியை போற்றக்கூடிய அரசாக திராவிட முன்னேற்ற கழக அரசு செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் ஒன்றாக தெரியும்.
பசும்பொன் தேவரை பற்றி கழக அரசு செய்திருக்க கூடிய பல்வேறு செயல்பாடுகளில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.
மதுரை மாநகரில் மாபெரும் வெண்கலசிலை, பசும்பொன் மண்ணில் நினைவில்லம், மேல்நீலித நல்லூர் கமுதி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் 3 அரசு கலைக்கல்லூரிகள், மதுரை ஆண்டாள்புரத்தில் முத்துராமலிங்க தேவர் பாலம் என்று பெயரிட்டோம்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வி அறக்கட்டளை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர்மரபினர்க்கு கல்வி வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு, கடந்த 2007-ம் ஆண்டு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மிக எழுச்சியோடு நாம் கொண்டாடி இருக்கிறோம்.
அப்போது திருமகனார் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. விழாவை அடையாளம் காட்டக்கூடிய வகையில், வளைவு அமைக்கப்பட்டிருக்கிறது. அணையா விளக்கும் நாம் அமைத்துள்ளோம்.
நூலக கட்டிடம், பால்குடம் வைப்பதற்கு மண்டபம் முளைப்பாறி மண்டபம் என்று பசும்பொன் தேவர் திருமகனாருக்கு புகழ்சேர்க்க கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.
இப்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு குருபூஜை நடத்தி இருக்கிறோம்.
பசும்பொன் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்திருக்கிறது.
நேற்று முன்தினம் கூட பசும்பொன் திருமகனார் பிறந்த நாள் விழாவின் போது ஏற்படுகிற கூட்ட நெரிசல்களை தவிர்ப்பதற்காகவும், மழை வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் ரூ.1 கோடியே 51 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட தெய்வீக திருமகனார் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை திறந்து வைத்துள்ளோம்.
இது மாதிரி பசும்பொன் முத்துராமலிங்க தேவரை போற்றக்கூடிய செயல்களையும், திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம். எனவே அவரது புகழும் வாழ்க.
கேள்வி: பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. மீனவர்களின் கைது அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே.
பதில்: தொடர்ந்து நாங்கள் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். நான் டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பிரதமரிடம் பேசியிருக்கிறேன். வெளியுறவுத்துறை அமைச்சரிடத்திலும் இதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறோம். அவர்களும் அவ்வப்போது, நாங்கள் எழுதக்கூடிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுத்து, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும், இது தொடர்ந்து இருந்துவருகிறது. இதற்கு முடிவு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். அதில் எந்தவிதமான கருத்து மாறுபாடும் கிடையாது.
கேள்வி: கலைஞரால் தொடங்கப்பட்ட தேவர் கல்லூரியில் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
பதில்: அதற்கு தொடர்ந்து நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறோம். இப்போது கூட 12 பேருக்கு பணி நியமனம் வழங்கியிருக்கிறோம். உரிய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும்.
கேள்வி காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறதே?
பதில்: 2008-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான் காவிரி குண்டாறு திட்டத்தின் முதற்கட்டப் பணி கதவனையில் இருந்து துவக்கப்பட்டது. அதன் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் 9 ஆண்டு காலம் அதை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். கடைசி வருடத்தில் தான் அதை செய்யப்போகிறோம் எனும் அறிவிப்பை வெளியிட்டு தொடர்ந்தார்கள். அதையும் கோவிட் பெருந்தொற்று வந்த காரணத்தினால் கிடப்பில் போடப்பட்டது. இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அந்தப் பணிகளை துரிதப்படுத்தி தற்போது 40 சதவீதம் வரை நிலஎடுப்பு பணிகள் முடிந்திருக்கிறது. தொடர்ந்து அந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
- திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்
திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.
திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி. அரியலூர் பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.
- அஜித் குமாரின் ரேசிங் பயிற்சி வீடியோவை அவரது மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து 'அஜித் குமார் ரேசிங்'-ஐ துவங்கினார். அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. மேலும், ரேசிங் பயிற்சி வீடியோவை அஜித் குமாரின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "துணை முதலமைச்சர் உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். ஒருவேளை விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா என்பது தெரியவில்லை" என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.
- பஸ் முனையத்திற்குள் உள்ள பஸ்கள் வெளியே போக முடியாமல் நின்றதால் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
- பஸ் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முன்தினம் முதல் பயணத்தை தொடங்கினர். சென்னையில் இருந்து 2 நாட்களில் அரசு பஸ்களில் மட்டும் 3.5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும் ஆம்னி பஸ்களில் 1 லட்சம் பேர் சென்றதாகவும் தெரிகிறது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு, மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்களும் வண்டலூர் வழியாக சென்றது. இதேபோல 1,400 ஆம்னி பஸ்களும் சேர்ந்து இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற அரசு பஸ்கள், ஆம்னி பேருந்துகள் வண்டலூரில் நெரிசலில் சிக்கின.
இரவு 9 மணி முதல் 12 மணி வரை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்கள் அணிவகுத்து நின்றன.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்ல முடியாமல் போனதால் எல்லா பேருந்துகளும் சென்னை-திருச்சி சாலையில் நின்றன. நெரிசல் சீராக நள்ளிரவு 12 மணி ஆனது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் செல்ல ஒரே வழிதான் உள்ளது. பஸ்கள் வெளியே வர 4 வழிகள் உள்ளன. இதனால் தான் பிரச்சனை ஏற்பட்டது.
பஸ் முனையத்திற்குள் உள்ள பஸ்கள் வெளியே போக முடியாமல் நின்றதால் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். சென்னையில் இருந்து புறப்பட்ட பஸ்கள் எந்த இடத்திலும் நெரிசலில் சிக்கவில்லை. கிளாம்பாக்கத்தில்தான் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வெளிவட்ட சாலையில் பஸ்கள் நீண்ட வரிசையில் நின்றன.
பஸ் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்தாலும் கூட ஏதாவது ஒரு இடத்தில் எதிர்பாராமல் நடக்கும் தவறுகளால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
- சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
- சென்னை மாநகராட்சியின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாநகராட்சி திரும்ப பெற்றுள்ளது.
சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு விக நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என்றும், இனி அங்கு விளையாடச் செல்லும் இளைஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த முடிவை திரும்ப பெறுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- முகூர்த்தநாளையொட்டி பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
- இதேபோல் முல்லை பூவும் கிலோ ரூ.2000-க்கு விற்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்காரதெரு, தொல்காப்பியர் சதுக்கம் பகுதிகளில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு திண்டுக்கள், ஊட்டி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதேப்போல் இங்கிருந்தும் பூக்கள் விற்பனைக்காக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பொதுவாக முகூர்த்தநாட்கள், பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகம் இருப்பதால் அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படும். வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.
இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும் நாளை முகூர்த்த நாளாகும். தீபாவளி மற்றும் முகூர்த்தநாளையொட்டி பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அவற்றின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் மல்லிகை கிலோ ரூ.500 முதல் 600 விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இன்று 4 மடங்கு உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகின. இதேப்போல் முல்லை பூவும் கிலோ ரூ.2000-க்கு விற்கப்பட்டது.
கனகாம்பரம் ரூ.1000, செவ்வந்தி ரூ.250, அரளி ரூ.300, ரோஜா ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் விலையும் அதிகமாகும்.
இது பற்றி வியாபாரிகள் கூறும்போது, நாளை தீபாவளி பண்டிகை, முகூர்த்தநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. வரத்து அதிகமாக இருந்தாலும் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது என்றனர்.
- கூட்டணி ஆட்சி என்பது காலத்தின் கட்டாயத்தால் உருவானது.
- விஜய் திராவிட மாடல் ஆட்சியையும், குடும்ப அரசியலையும் எதிர்க்கிறார்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கூட்டணி, அதிகாரத்திலும் பங்கு என்பது குறித்து விஜய் இப்போது பேசியிருக்கக்கூடாது, இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் தி.மு.க. ஆட்சி நடக்க உள்ளது.
அதுமட்டுமின்றி, இது போன்று கூட்டணி குறித்து வெளிப்படையாக அவர் பேசக்கூடாது. மறைமுகமாக ஒவ்வொரு கட்சியையும் அழைத்து, ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும், யார் வேட்பாளர் என்பதெல்லாம் வெளிப்படையாக பேசக்கூடாது.
விஜய்யின் இந்த நிலைப்பாடு, தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்குத்தான். இது, சரியான நேரத்தில் கையாளப்படவில்லை.
மத்தியில் கூட்டணி ஆட்சி என்பது காலத்தின் கட்டாயத்தால் உருவானது. ஒரு தேசிய கட்சி ஜனநாயக அடிப்படையில் தனது கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து அளித்ததன் மூலமாக உருவானது அல்ல.
அதேபோல், தமிழகத்திலும் காலத்தின் கட்டாயத்தால்தான் கூட்டணி ஆட்சி உருவாக்க முடியும். அப்படி உருவானால், அது ஒரு இயல்பான நிலையாக இருக்காது.
தமிழகத்தில் எந்த கட்சியும் தங்களை பலவீனப்படுத்திக் கொள்ள விரும்பாது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து, தங்கள் வலிமையை இழக்கச் செய் வதற்கு இடம்கொடுக்க மாட்டார்கள்.
விஜய் திராவிட மாடல் ஆட்சியையும், குடும்ப அரசியலையும் எதிர்க்கிறார். விஜய்யின் ஒட்டுமொத்த பேச்சும் தி.மு.க. மற்றும் தி.மு.க அரசு எதிர்ப்பாகவே உள்ளது.
இது ஒன்றும் புதிய அரசியல் நிலைப்பாடு இல்லை. தமிழகத்தில் நீண்டகாலமாக தி.மு.க. மற்றும் தி.முக. அரசை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
`பாசிசம் என்றால், நீங்கள் பாயசமா' என்று கிண்டல் அடிப்பதில் 2 பொருள் உள்ளது. ஒன்று பாசிச எதிர்ப்பு பெரிய விஷயம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.
மற்றொன்று, நீங்களும் பாசிசம்தான், நீங்கள் ஒன்றும் ஜனநாயக சக்திகள் இல்லை என்று புரிந்து கொள்ளலாம். நீங்களும் பாசிசம்தான் என்று தி.மு.க.வை மட்டும் சொல்கிறாரா? அல்லது தி.மு.க.வை சார்ந்துள்ள அகில இந்திய அளவில் ஐஎன்டிஐ கூட்டணியில் உள்ள 28 கட்சிகளையும் சொல்கிறாரா?. இதை எல்லாம் பார்க்கும்போது, பா.ஜனதா எதிர்ப்பில் த.வெ.க. தலைவர் விஜய் உறுதியாக இல்லை".
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் விஜய்யின் சேவை தேவை.
- யாரோ சொல்கிறார்கள் என்று முடிவெடுத்து மதவாத சக்திகளுக்கு ஆதரவாக போய் விடக்கூடாது.
சென்னை:
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் கூறியிருப்பது குறித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரான திருச்சி எம்.பி. துரை வைகோ பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஆட்சியில் அதிகார பகிர்வு குறித்து விஜய் கூறியிருப்பது தேவையற்ற குழப்பத்தையும், சர்ச்சையையும் உருவாக்கும். அதிகாரப் பகிர்வு விசயத்தில் ஏனைய கட்சிகள் முனைப்பு கொண்டிருந்தால் அது அவர்களுக்கே உரியது. ஆனால் ம.தி.மு.க. அந்த நிலைப்பாட்டில் இல்லை.
தற்போது இருக்கக்கூடிய அரசியலில் மதவாத பிரிவினை வாதிகளை எதிர்க்கும் இரண்டாவது அணியாக திராவிடம் இருக்கிறது. அதற்கு பிறகு 3-வது அணிக்கு வாய்ப்பு குறைவுதான்.
எனவே மதவாத சக்திகளுக்கு மறைமுகமாக வாய்ப்பு கொடுக்கக் கூடிய சூழல் ஏற்படக்கூடாது. தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் விஜய்யின் சேவை தேவை. எனவே அவர் யோசித்து நிதானமாக முடிவெடுக்க வேண்டும். யாரோ சொல்கிறார்கள் என்று முடிவெடுத்து மதவாத சக்திகளுக்கு ஆதரவாக போய் விடக்கூடாது.
ம.தி.மு.க.வை பொறுத்தவரை தி.மு.க. ஆட்சியில் பல நிதி நெருக்கடி இருந்தாலும், நல்ல ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. ம.தி.மு.க., தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் நல்ல விசயங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறோம்.
கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி குரல் கொடுத்தோம். எனவே ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் அமைச்சரவையில் இடம் தேவை என்ற சமீபத்திய கோரிக்கை அவர்களுடைய இயக்க நிரவாகிகளின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றனர். அது தவறு இல்லை. அது அவர்களுடைய ஆசை. ஆனால் ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கிணங்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
- ஒலி அளவை மீறிய பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதனை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். இந்த ஆண்டும் அதுபோன்று தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு பாயும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கிணங்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகள், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை வெடிக்கக் கூடாது.
தீ விபத்து ஏற்பட்டால் அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய உதவி எண்.112, ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.
கடந்த 2023-ம் ஆண்டு கனம் சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகளும், தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 8 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறிய பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிக்னல் கிடைக்காததால் நடைமேடைகளில் மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
- பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 3 மற்றும் 4-வது நடைமேடை யில் சென்னை நோக்கி செல்லும் பாதையில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
ரெயில்களுக்கு சிக்னல் கிடைக்காததால் அடுத்தடுத்து நடைமேடைகளில் சென்னை மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
காலை 6 மணிக்கு திருத்தணியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரெயில் உள்பட 3 ரெயிகள் புறப்படவிலை.
இதன் காரணமாக பல்வேறு பணிகளுக்காக சென்னை நோக்கி செல்ல வேண்டிய பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

இதனால் ஆவேசம் அடைந்த பயணிகள் அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினந்தோறும் அரக்கோணத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணி நிமித்தம் செல்கிறோம்.
சென்னையில் இருந்து வரும்போது அரக்கோணத்திற்கு 10 கிலோ மீட்டர் முன்பே ரெயிலை நிறுத்துகின்றனர்.
பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்குள் வருகிறது. கேபினில் வேலை செய்யும் ஊழியர்கள் சரிவர சிக்னல் கொடுப்பதில்லை.
இதுகுறித்து பலமுறை ரெயில்வே நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அனுபவமுள்ள கேபின் ஊழியர்களை ரெயில்வே நிர்வாகம் பணியில் அமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






