என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என எல்லா இடங்களும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
- எதிர்க்கட்சிகளை குறை சொல்வதை விட்டுவிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட அத்தனை மக்களுக்கும் நிவாரணம் நிதி வழங்க வேண்டும்.
தூத்துக்குடி:
தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பார்த்திருக்கிறேன். ஃபெஞ்சல் புயல் மக்களை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. பெரும்பாலும் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் மழை வெள்ளம் புகுந்து சேறும், சகதியுமாக வீடுகள் மாற்றியுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என எல்லா இடங்களும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. டெல்டாவும் பாதிப்பை சந்தித்துள்ளது.
ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் வயித்தெரிச்சலில் பேசி வீண் விளம்பரம் தேடுகிறார்கள் என கூறியிருக்கிறார். இது தவறான கருத்து. இதில் விளம்பரம் தேட ஒன்றும் இல்லை. அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேரை வாரி வீசுகிறார்கள். தி.மு.க. பேனர்கள் கிழிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த மக்களும் மறியல் செய்கிறார்கள். இந்த அளவில் தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை பார்த்து தான் எதிர்க்கட்சிகள் வயித்தெரிச்சல் பட வேண்டுமா என முதலமைச்சரை நோக்கி நான் கேள்வி கேட்கிறேன்.
இது போன்ற கருத்துக்களை எப்படி சரி செய்ய வேண்டும் என முதலமைச்சர் யோசித்தால் ஆட்சியை நாங்கள் வரவேற்போம். இந்த ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது என புகழ வேண்டும் என்றால் எப்படி சொல்ல முடியும். மக்கள் தான் எஜமானர்கள். அந்த மக்கள் சொல்ல வேண்டும் இந்த ஆட்சி உண்மையிலேயே நல்ல ஆட்சி நடக்கிறது என. இதெல்லாம் தவறான ஒரு முன் உதாரணம்.
எதிர்க்கட்சிகளை குறை சொல்வதை விட்டுவிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட அத்தனை மக்களுக்கும் நிவாரணம் நிதி வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மின்சாரம், தண்ணீர், சாப்பாடு, உடை இல்லாமல் வாழக்கூடிய நிலைமையை நான் பார்க்கிறேன். எனவே தே.மு.தி.க. சார்பில் நாங்கள் நேரடியாக சென்று எங்களால் முடிந்ததை செய்திருக்கிறோம். இன்னொரு முறையும் எங்கெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அறிந்து அங்கெல்லாம் செல்ல இருக்கிறோம்.
இயற்கை சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அரசு முன்கூட்டியே சரியாக திட்டம் வகுத்து தொலைநோக்கு திட்டங்களை தீட்டி இருந்தால் மக்களை பாதுகாத்திருக்கலாம். எல்லாத்தையும் கோட்டை விட்டு விட்டார்கள். மக்கள் இதிலிருந்து விரைவில் மீண்டு வர வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ. 2 ஆயிரம் ஒன்றுமே இல்லை. மக்கள் சிறுக சிறுக சேர்த்த அத்தனை பொருட்களையும் இழந்திருக்கிறார்கள். அவர்கள் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்து நிற்கதியாக நிற்கிறார்கள். அவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் ஓட்டுக்கு கொடுத்து ஜெயித்தது போல் இன்று கொடுத்தால் அது ஒரு நாளைக்கு கூட போதாது. நமது அருகில் உள்ள மாநிலமான புதுச்சேரி ரூ.5 ஆயிரம் அறிவித்துள்ளது. அவர்களை விட தமிழகம் பெரிய மாநிலம். எனவே ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ. 10 ஆயிரம் முதலமைச்சர் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தர வேண்டும்.
அதேபோல் விவசாயிகள் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 50 ஆயிரம், அதிக பாதிப்பு இருப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் கொடுத்தால் தான் அவர்கள் வாழ்க்கையில் மீண்டு வர முடியும். எனவே உடனடியாக மக்களுக்கு நிவாரணம் கொடுத்து சேறும் சகதியுமாக உள்ள வீடுகளில் உள்ள மக்களை காப்பாற்றி மீட்டுக் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் எனது மகனின் செல்போன் எண் இருந்துள்ளது. அதை வைத்து கைது செய்துள்ளார்கள்.
சென்னை:
போதைப்பொருள் வழக்கில் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மகனை பார்க்க மன்சூர் அலிகான் வந்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது? எப்படி கிடைக்கிறது? இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் எனது மகனின் செல்போன் எண் இருந்துள்ளது. அதை வைத்து கைது செய்துள்ளார்கள். போதைப்பொருளை ஒழிக்க நான் 'சரக்கு' என்ற ஒரு படம் எடுத்தேன். அந்த படத்தை வெளியிட சரியான தியேட்டர் கிடைக்கவில்லை. ஓ.டி.டி.யில் கூட அந்த படத்தை வெளியிடவிடாமல் எந்த சக்தி தடுக்கிறது? நேரம் வரும் போது நான் பொங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவா் தனது மகனிடம், 'பிக்பாஸ் வீட்டுக்கு செல்வது போல சிறைக்கு சென்று வா. அங்கு நிறைய புத்தகங்களை படி' என்று அறிவுரை கூறினார்.
- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டனர்.
- இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும். எனவே தமிழக காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
- கடுமையாக தாக்கி, படகுகளை மோத வைத்து சேதம் ஏற்படுத்தியதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கடுமையாக தாக்கி, வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாகவும், படகுகளை மோத வைத்து சேதம் ஏற்படுத்தியதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் சுமார் 75 பேருக்கு மேல் சிறையிலும் 32 மீனவர்கள் நீதிமன்ற காவலிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- துறைசார் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.
- பிறந்தநாள் விழா எடுப்பதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறார்.
தமிழ்நாட்டில் மருத்துவத் துறை அதள பாதாளத்தில் தள்ளப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், திமுக ஆட்சியாளர்கள் விரைந்து துறைசார் பணிகளை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் இன்றி ஊழியர்களே தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது."
"மின்வெட்டு காலங்களில் அரசு மருத்துவமனைகள் முடங்காமல் இருக்க ஜெனரேட்டர் வசதிகளோ, எல்லா நேரங்களிலும் சிகிச்சை அளிக்க போதிய மறுத்துவர்களோ இல்லாத அவல நிலைக்கு மருத்துவத் துறையை அதள பாதாளத்தில் தள்ளியிருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்."
"விடியா திமுக ஆட்சியில் முதல்வரோ, மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பது குறித்த எந்த அக்கறையும் இன்றி கூட்டணி கட்சி கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்; அமைச்சரோ தனக்கொரு துறை இருப்பதையே மறந்துவிட்டு வாரிசுக்கு பிறந்தநாள் விழா எடுப்பதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறார்."
"மக்கள் பற்றிய சிந்தனையே இல்லாத விடியா திமுக ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக்கொண்டு, தங்கள் துறைசார் பணிகளை இனியாவது கவனிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது.
- வெள்ள பாதிப்பில் இருந்து மீள தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்கள் மீதே எங்களது எண்ணங்கள் உள்ளன. இந்த சவாலான நேரத்தில் கேரளா அண்டை மாநிலங்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது. தேவையான எந்த உதவிகளையும் வழங்க கேரள அரசு தயாராக உள்ளது. ஒன்றாக இணைந்து வென்று வருவோம் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், வெள்ள பாதிப்பில் இருந்து மீள தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில், "உங்கள் ஒற்றுமை மற்றும் ஆதரவுக்காக நன்றி தோழர் பினராயி விஜயன்.
தமிழக மக்கள் கேரளத்தின் ஆதரவையும், உதவி செய்ய முன்வந்ததையும் பெரிதும் மதிக்கிறார்கள். நாம் ஒன்றாக மீண்டும் கட்டியெழுப்புவோம், வலுவாக வெளிப்படுவோம்" என்றார்.
- வட சென்னையில் தொடங்கப்பட்ட 87 பணிகளில் 27 மணிகள் முடிவடைந்துள்ளது.
- சென்னை மக்களின் தேவைகளை பார்த்து, பார்த்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ரூ.1,383 கோடி மதிப்பிலான வட சென்னை வளர்ச்சித் திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை வால்டாக்ஸ் சாலையில் நடைபெறும் விழாவில் 79 புதிய திட்டப்பணிகளும், 29 முடிவுற்ற பணிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் பேசியதாவது:-
வட சென்னை வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வர வேண்டுமென அமைச்சருக்கு அறிவுறுத்தினேன்.
வட சென்னையில் தொடங்கப்பட்ட 87 பணிகளில் 27 மணிகள் முடிவடைந்துள்ளது.
சென்னையை நம்பி வந்தவர்களை என்றும் சென்னை கைவிட்டதில்லை. வட சென்னைக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும்.
சென்னை மக்களின் தேவைகளை பார்த்து, பார்த்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மெட்ராஸ் என்கிற பெயரை சென்னை என மாற்றியவர் கருணாநிதி. சென்னையின் அடையாளங்களை உருவாக்கியது திமுக அரசு.
வானிலை கணிப்பைவிட அதிக மழை கொட்டீத் தீர்த்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவோம். சென்னையை மீட்டு எடுத்ததுபோல், மற்ற மாவட்டங்களையும் விரைவில் மீட்டெடுப்போம். ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டு வரும்.
முன்பு சென்னையில் எப்போது வெள்ளம் வடியும் என காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
கடந்த ஆட்சியில் தன்னார்வலர்கள் வழங்கும் நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டினார்கள். வெள்ள பாதிப்பு நேரத்திலும் மக்களின் வேதனைகளை அவதூறு பரப்பி ஆதாயம் அடைய மலிவான அரசியலில் சிலர் ஈடுபடுகின்றனர்
நம்மை பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கும் பணியாற்றி வருகிறோம். எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
விடியலை விடியா ஆட்சி என்று சொல்பவர்கள்,
தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளிய அந்த விடியா மூஞ்சிகளுக்கு என்னைக்குமே விடியாது.
விடியலை தருவது தான் உதய சூரியன். சூரியனை பார்த்தால் கண் கூசுபவர்களுக்கு விடியல் என்றால் என்னவென்றே தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
- பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம்:
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- அமரன், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
- அமரன் நாளை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாவுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இதைதொடர்ந்து, அமரன் நாளை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாவுள்ளது.
இந்நிலையில், அமரன் படத்தில் தனது செல்போன் எண்ணை பயன்படுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மாணவர் வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பான மனுவில், " சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த மனுவில், மொபைல் எண் வரும் காட்சியை நீக்கக் கோரி ஏற்கனவே தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் தவறை திருத்தவில்லை.
அதனால், படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கவும், தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- ஃபெஞ்சல் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
- நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
- அண்ணாமலையின் உயிரிழப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
- குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் உயிரிழந்த மின்சார வாரிய ஊழியர் அண்ணாமலையின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரண நிதி மற்றும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு மின்சார வாரியத்தில் பணி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 01.12.2024 இரவு ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலின்போது திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம், துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அண்டம்பள்ளம் மின்மாற்றியில் ஏற்பட்ட மின்தடையை சரிசெய்யும் பணிக்காக வெறையூர் பிரிவிலிருந்து சென்ற மின்பாதை ஆய்வாளர் பாலசுந்தர் (வலது 56) மற்றும் கம்மியர் அண்ணாமலை (வயது 56) ஆகிய இருவரில் அண்ணாமலை அவர்கள் பவித்திரம் தரைப்பாலத்தைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக வெள்ளநீரில் அடித்துச் செல்வப்பட்டு காணாமல் போனதைத் தொடர்ந்து அவரைத் தேடியதில் நேற்று (03.12.2024) பிற்பகல் 03.00 மணியளவில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிருந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மின்சார வாரிய ஊழியர் அண்ணாமலையின் உயிரிழப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அண்ணாமலையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கிடவும், உயிரிழந்த அண்ணாமலை அவர்களின் குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- நடிகர் பவர் ஸ்டார் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர், சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மதியம் அவருக்கு திடீரென்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், கிண்டி அரசு மருத்துவமளையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.






