என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஃபெஞ்சல் புயல்"
- ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
- பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம்:
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பல கோடி ரூபாய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
கடலூர்:
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பியது.
அணையில் இருந்து 2.40 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தென்பெண்ணையாறு கரையோரம் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடங்கியது.
இது மட்டும் இன்றி ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தும் பல கோடி ரூபாய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பனை எம்.எல்.ஏ. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் அனு மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.
மேலும் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு தண்ணீர் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கிக்கொண்ட பொதுமக்களை தீயணைப்பு துறையினர் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அண்ணா கிராமம் ஒன்றிய தி.மு.க. சார்பில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட 1200 பேருக்கு புடவை, பெட்ஷீட் போர்வை, 5 கிலோ அரிசி மற்றும் உணவு பொருட்கள் ஆகிய தொகுப்புகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்பொழுது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட கண்காணிப்பாளர் ராமன், எம்.எல்.ஏ.க்கள் சபா. ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ஒன்றிய குழு தலைவர் ஜானகிராமன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி மற்றும் அதிகாரிகள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.கே. வெங்கட்ராமன் செய்திருந்து அனைவரையும் வரவேற்றார்.
மேல்பட்டாம்பாக்கத்தில் ஆய்வை முடித்து கொண்டு துணை முதலமைச்சர் கடலூருக்கு வந்தார். குமாரபுரத்துக்கு வந்த போது மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உதயநிதி ஸ்டாலின் காரை பார்த்ததும் கையை காண்பித்தனர்.
உடனடியாக காரை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின் அப்பகுதியில் தேங்கிய மழைநீரை பார்வையிட்டார்.
பொதுமக்கள் அவரிடம் இந்த பகுதியில் அடிக்கடி மழைநீர் தேங்குகிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதன் பின்னர் அவர் கடலூர் புறப்பட்டு வந்தார்.
- புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மழை வெள்ள பாதிப்புகள் குறித்து இன்று தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பெறப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பெரும் பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து உள்ளது.
அத்துடன், மேற்படி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
அங்கு ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தையும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்திட நேற்றையதினம் முதலமைச்சர் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பொதுமக்கள் மற்றும் அலுவலர்களிடம் பாதிப்பு விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்றும் நேரடியாகச் சென்று நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகின்றார்கள்.
இந்நிலையில், இன்று (3-12-2024) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை காணொலி வாயிலாகத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார்.
பின்னர், ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று (3-ந்தேதி) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது.
* புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும்;
* சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கிடவும்;
* முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும்,
* மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும்;
* பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேத முற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500 வழங்கிடவும்;
* மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-ஆக வழங்கிடவும்;
* எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500/-ஆக வழங்கிடவும்;
* வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/-வழங்கிடவும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/-வழங்கிடவும்;
* அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்;
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும்;
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஃபெஞ்சல் புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
- பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
சென்னை:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
- மண்டவாய் புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் அண்ணாமலை ஆய்வு செய்தார்.
- மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள பாதிப்புகள் குறித்து அரசு கவனம் கொள்ள வேண்டும்.
மரக்காணம்:
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 1-ந் தேதி புதுவை-மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் ஏற்பட்ட மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
அங்குள்ள உப்பளங்கள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. மரக்காணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை அவர் மரக்காணம் வந்தார். மரக்காணத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த உப்பளங்கள் நீரில் மூழ்கி கிடக்கிறது. அதனை அண்ணாமலை பார்வையிட்டார். எக்கியார்குப்பம், கூனிமேடு பகுதிகளையும் பார்த்தார். வண்ணாரப்பாளையம்-அச்சங்குப்பம் இடையே சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளது. அதனையும் அண்ணாமலை பார்வையிட்டார். மண்டவாய் புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் அவர் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
மிகவும் கொஞ்சமாக மழை பெய்த சென்னையை மட்டுமே அரசு படம் போட்டு காட்டுகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள பாதிப்புகள் குறித்து அரசு கவனம் கொள்ள வேண்டும். முதலமைச்சர், துணை முதல்வரை விளம்பரம் செய்வதிலேயே முக்கியத்துவம் செலுத்தப்படுகிறது என்றார்.
- வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
- சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து இரண்டு நாட்களாகியும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் வடியவில்லை.
இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுக்கு சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் ஆவேசமாக இருந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது. அவருடன் ஆய்வுக்கு சென்ற கௌதம சிகாமணி, ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் சேற்றை வீசியதால் பாதியில் புறப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
- ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவத்தால் புதுச்சேரி, விழுப்புரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. அதே போல், ரெயில் பயணத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சைக்காக ரெயிலில் பயணித்த வாலிபர் ஒருவர் ரெயில் தாமதமாக இயக்கப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசியில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பொதிகை ரெயிலில் அஜித் குமார் (27) என்பவர் பயணித்துள்ளார்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இருந்த அஜித் குமார் சிகிச்சைக்காக சென்னைக்கு புறப்பட்டுள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் அஜித் குமார் பயணித்த பொதிகை ரெயிலும் நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாக புறப்பட்ட நிலையில் அவர் ரெயிலிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ரெயிலில் பயணித்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
- ஏற்காட்டில் 20 இடங்களில் மண் சரிவு, 22 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் சேதம் ஆகி உள்ளது.
- திருமணி முத்தாறு முழுமையாக தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ள நீர் வடியத்தொடங்கிய உள்ளதாக சேலம் கந்தப்பட்டியில் ஆய்வு மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
* ஏற்காட்டில் 20 இடங்களில் மண் சரிவு, 22 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் சேதம் ஆகி உள்ளது.
* திருமணி முத்தாறு முழுமையாக தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
* முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சேலம் மாநகரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
* சாத்தூர் அணையில் இருந்து எவ்வித அறிவிப்பும் இன்றி தென்பெண்ணை ஆற்றுக்கு நீர் திறக்கப்பட்டதால் கரையோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
* தென்பெண்ணை ஆற்றுக்கரையோரம் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடுமையான பாதிப்பு.
* தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
- உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் தேங்கிய நீரால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
#WATCH | Tamil Nadu BJP State President Annamalai visited the salt pans in Marakkanam, which were submerged in floodwaters due to #CycloneFengal and inspected the damage and interacted with the salt pan workers, listening to their concerns and grievances. pic.twitter.com/qg6mj1pbbI
— ANI (@ANI) December 3, 2024
- தேசிய நெடுஞ்சாலைகளில் சூழ்ந்த வெள்ளத்தால் சாலை துண்டிக்கப்பட்டது.
- தமிழகத்தில் ஃபெஞ்சல் சூறாவளியின் பேரழிவு செய்தி அறிந்து கவலை அடைந்தேன்.
புதுடெல்லி :
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது கடந்த சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. இதனால் விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதில் புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் வரலாறு காணாத பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் சூழ்ந்த வெள்ளத்தால் சாலை துண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஃபெஞ்சல் சூறாவளியின் பேரழிவு செய்தி அறிந்து கவலை அடைந்தேன். இந்த சோகத்தின் போது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீடுகள், உடைமை இழந்தவர்களுடன் துணை நிற்பேன்.
மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும், முடிந்தவரை நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Devastating news of Cyclone Fengal in Tamil Nadu. My heartfelt condolences to those who have lost loved ones during this tragedy. My thoughts are also with those whose homes and property have been damaged.
— Rahul Gandhi (@RahulGandhi) December 3, 2024
I urge all Congress workers in the state to step forward and help the…
- பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி தனிநபர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- சேதங்கள் பற்றிய விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு மத்திய குழுவை விரைவில் நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.2000 கோடியை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி தனிநபர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள், ஒரே நாளில் முழுப் பருவத்தின் சராசரி (50 செ.மீ.க்கும் அதிகமான) மழையைப் பெற்றதால், பரவலான வெள்ளம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் பயிர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டது.
38,000 அரசு அதிகாரிகள் மற்றும் 1,12,000 பயிற்சி பெற்ற முதல்நிலை பணியாளர்கள் அடங்கிய அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு நான் நேரில் சென்றுள்ளேன்.
மாநில அரசுக்கு தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக 2,475 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. எங்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த பேரழிவின் அளவு மாநிலத்தின் வளங்களை மூழ்கடித்துள்ளது.
அழிவின் தீவிரம் மற்றும் மறுசீரமைப்புக்கான அவசரத் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணத் தொகையாக உடனடியாக NDRF-லிருந்து 2,000 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும்.
மேலும், சேதங்கள் பற்றிய விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு மத்திய குழுவை விரைவில் நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், மேலும் நிதி உதவிக்கு உங்கள் பரிசீலனையை கோருகிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு மனு.
- ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகள் குறித்து கவலை தெரிவிக்கிறேன்.
தமிழ்நாட்டை தாக்கிய ஃபெங்கல் புயலின் தாக்கத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு மனு அளித்துள்ளதாக கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் வசந்த் எம்.பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அவசர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டவட்டமான விஷயத்தைப் பற்றி விவாதிக்கும் நோக்கத்திற்காக, பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு மனு அளித்துள்ளேன்.
சபாநாயகர் அவர்களுக்கு, ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகள் குறித்து கவலை தெரிவிக்கிறேன்.
ஃபெஞ்சல் புயல் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் மனித உயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு நிவாரணமாக ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும்.
மேலும், மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி, சேதங்களை மதிப்பிடவும், உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்