என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர்.
    • திருமணிமுத்தாறு-சரபங்கா நதியில் தொடர்ந்து வெள்ளம்.

    சேலம்:

    சேலத்தில் முக்கிய நீராதாரமே மலைகள் தான். ஏற்காடு சேர்வராயன் மலை தொடரில் உள்ளது. திருமணிமுத்தாறின் பிறப்பிடமாக ஏற்காடு மலை திகழ்கிறது . சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் திருமணிமுத்தாறில் சங்கமித்து தொடர் சங்கிலி ஏரிகளை நிரப்பி காவிரியுடன் கலக்கிறது.

    அதாவது திருமணிமுத்தாறு சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 120 கி.மீ. ஓடி பரமத்திவேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. சிறப்புமிக்க திருமணிமுத்தாறில் கடந்த 1972-ம் ஆண்டு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது திருமணிமுத்தாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி பெரும் அழிவை ஏற்படுத்தியது.


    இந்த பெரும் வெள்ளத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் அம்மன் கருவறை மூழ்கியது. திருவள்ளுவர் சிலை அருகே ஒரு வாரத்திற்கு மேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி மற்றும் டிசம்பர் 1,2-ந்தேதிகளில் கன மழை பெய்தது. இதனால் சேலம் மாவட்டத்தில் மற்ற இடங்களை காட்டிலும் ஏற்காட்டில் அதிக மழை பெய்தது.

    அங்கு கடந்த 1-ந்தேதி காலை நிலவரப்படி 144.4 மில்லி மீட்டர் மழையும், 2-ந்தேதி 238 மில்லி மீட்டர் மழையும், 3-ந்தேதி 98.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    இம்மழையால் ஏற்காடு மலைப்பாதை மற்றும் கிராமப்பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.

    ஏற்காட்டில் பெய்த பலத்த மழையினால் திருமணிமுத்தாறில் கடந்த 3-ந்தேதி காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 52 ஆண்டுகளுக்கு பிறகு திருமணிமுத்தாறில் மீண்டும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி பைபாஸ் அருகே தரைப்பாலத்திற்கு மேல் இடுப்பளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பாலத்தில் உள்ள தண்ணீர் மோட்டார்வைத்து வெளியேற்றப்பட்டது. கந்தம்பட்டி மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள அனைத்து கிராமங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    திருச்செங்கோடு அருகாமையில் கிராமங்களில் உள்ள திருமணிமுத்தாறு தரைபாலங்கள் அனைத்தும் மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    பரமத்திவேலூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பரமத்திவேலூர் அருகே உள்ள பில்லூரில் இருந்து வில்லிபாளையம் உள்ளிட்ட தரைபாலம் மூழ்கியது. பொதுமக்கள் தரைபாலத்தை கடக்க வேண்டாம் என வருவாய்துறை, பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல் வசிஷ்டநதி, சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் எடப்பாடியில் உள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி, அரசிராமணி, பேரூராட்சி, குள்ளம்பட்டி, செட்டிப்பட்டியில் தரைபாலத்தை மூழ்கடித்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கிராமங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி வீடுகள், பள்ளிகள், கடைகள் என கிராமம் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடியது. குள்ளம்பட்டியில் வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு செல்லும் சிறிய பாலமும் வெள்ளத்தால் சேதமடைந்தது.


    ஓலப்பாளையம், கண்டாயிக்காடு, தைலங்காடு, வயக்காடு, சுக்கலான்காடு, கள்ளப்பாளையம், எல்லாப்பாளையம் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தரைப்பாலம் மூழ்கியது. நைனாம்பட்டி, ஆரையான்காடு, செரக்காடு, வண்ணாங்காடு, கோட்டக்காடு, பூனையம்காடு, பெரியகாடு, புளியம்பட்டி உள்பட 25 குக்கிராமங்கள் வெள்ளம் சூழப்பட்டு தனித்தீவுகளாக மாறியுள்ளது.

    தேவூர் மயிலம்பட்டி, மேட்டுகடை, பெரமச்சிபாளையம், மேட்டாங்காடு, சோழக்கவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல், கரும்பு, வாழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    தண்ணீர் சூழ்ந்த கிராமங்களில் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் பரிசல் மூலம் பள்ளிக்கு அழைத்து வந்து விடுகின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை பரிசல் மூலம் வீடுகளுக்கு வழங்கி வருகின்றனர். பால, மருந்து, மாத்திரைகள் வாங்க பொதுமக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர்.

    திருமணிமுத்தாறு-சரபங்கா நதி ஆகியவை கிராமங்களில் ஏற்படுத்திய சேதத்தை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருமணிமுத்தாறு-சரபங்கா நதியில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 2 ஆறுகள் வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் மழை வெள்ளத்தால் கடும் சேதத்தை ஏற்படுத்தி பொதுமக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. 

    • 13-ந்தேதி தேரோட்டம்-மகாதீபம்
    • வருகிற 12-ந் தேதி சுப்ரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம்

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது.

    கார்த்திகை மாதம் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர்.

    அங்கு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை முன்னிலையில் தர்பை புல், மாவிலை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கொடிகம்பத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.

    தீபத்திருவிழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில், வெள்ளி பூதவாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ந் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் . தொடர்ந்து 13-ந் தேதி காலையில் கார்த்திகை தேரோட்டமும், மாலையில் கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்டு மலைமேல் மகாதீபம் ஏற்றப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார்.

    சென்னை தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளில் மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    23 பேர் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57), வரலட்சுமி 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

    இந்நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இந்த பகுதியில் உடனடியாக மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே 2 பேர் பலியான நிலையில் மோகனரங்கன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    • பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
    • ஆயிரக்கணக்கான வீடுகள், சிறு பாலங்கள், பாலங்கள், சாலைகள் போன்றவை பெருமளவில் சேதமடைந்து உள்ளன.

    கடலூர்:

    தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது.

    இந்த நிலையில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் தண்ணீர் வடிந்து வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீர் தற்போது கணிசமாக வடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றது.

    இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தண்ணீர் வடிந்து வரும் நிலையில் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான வீடுகள், சிறு பாலங்கள், பாலங்கள், சாலைகள் போன்றவை பெருமளவில் சேதமடைந்து உள்ளன. மேலும் பல்வேறு கிராமங்களுக்கு சாலை துண்டிக்கப்பட்டு பெரும் பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றது.

    இது மட்டும் இன்றி பாதுகாப்பு மையங்களில் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் உரிய முறையில் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யவில்லை எனக் கூறி தொடர்ந்து மறியல் போராட்டமும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மோட்டார்கள் மூலம் தண்ணீரில் வெளியேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஆங்காங்கே தண்ணீர் வடியாத பகுதிகளில் இருந்து பொதுமக்களை படகு மூலமாக தன்னார்வலர்கள் மீட்டு வருவதையும் காணமுடிந்து வருகின்றது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • ஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    • தொடர்ந்து பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தமிழக மற்றும் கர்நாடகா காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மாநில எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை அளவு குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 33 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலை படிப்படியாக குறைந்து வினாடிக்கு 21 ஆயிரம் கன அடியாக சரிந்து வந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு அதே அளவான 21 ஆயிரம் கன அடி நீடித்து வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து அதிகரித்து அதன் காரணமாக சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கமும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 3-வது நாளாக நீடித்து வருகிறது.

    இதனால் ஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொடர்ந்து பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • 2 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
    • ஏராளமான ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

    மண்ணச்சநல்லூர்:

    மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள வாத்தலை கிராமத்தில் அய்யன் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் முகொம்பு காவேரி ஆற்றில் இருந்து காவேரி, கொள்ளிடம் மற்றும் பாசனத்திற்காக புள்ளம்பாடி, அய்யன் என 2 பாசன வாய்க்காலாக பிரிகிறது.

    வாத்தலை அருகே மனப்பாளையம், வேப்பந்துறை என 2 குக்கிராமங்கள் உள்ளன. இந்த 2 கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் கிராம மக்கள் பயன்பாட்டிற்காக அய்யன் வாய்க்கால் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    மேலும் தற்போது சில நாட்களாகவே பெய்ந்து வரும் மழையால் தரைபாலத்தில் சிறிது மழை நீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில் கொல்லிமலையில் கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்ததை அய்யன் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

    இதனால் 2 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. அங்கு வசிக்கும் பொதுமக்கள் 7 கி.மீ தொலைவு வரை சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் அய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருகில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் சூழ்ந்து ஏராளமான ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளிலில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
    • வேன் டிரைவரை கைது செய்த போலீசார் வேனை பறிமுதல் செய்துள்ளனர்.

    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கடகக்குடி, ஆட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத் (வயது 30), பசுபதி (28), இளையரசன் (26).

    இவர்கள் 3 பேரும் கூலிதொழிலாளர்கள். இந்நிலையில் நேற்று 3 பேரும் வேலைக்கு சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். அவர்கள் பேரளத்திலிருந்து பூந்தோட்டம் நோக்கி திருவாரூர் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    பேரளம் அருகே இஞ்சிகுடி கடைத்தெருவில் என்ற இடத்தில் சென்றபோது சிவகங்கையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளிலில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த அசோக்பாபு என்பவரை கைது செய்து வேனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
    • ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்தும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், நேற்று விலை மாற்றமின்றி சவரன் ரூ.57,040-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,140-க்கும் ரூ. 57,120-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த ஐந்து நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,040

    03-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,040

    02-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720

    01-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200

    30-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,௨௦௦



    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    03-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    02-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    01-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    30-11-2024- ஒரு கிராம் ரூ. 100

    • மலைப்பாதையில் பாறைகள் உருண்டும் மரங்கள் சாய்ந்தும் கிடந்தது.
    • கன ரக வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

    சேலம்:

    பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 29-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை கன மழை கொட்டியது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    தொடர்ந்து அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் பாறைகள் உருண்டும் மரங்கள் சாய்ந்தும் விழுந்ததால் வாகனப்போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

    குப்பனூர் வழியாக மட்டும் வாகனங்கள் சென்று வந்தன. இதனால் பொது மக்கள் தவித்தனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் விழுந்த மண், பாறைகள் மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றி வந்தனர். மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து சேலத்தில் இருந்து வழக்கமாக ஏற்காட்டிற்கு செல்லும் அடிவார மலைப்பாதையில் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல நேற்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள், மளிகை பொருட்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் சிறிய வாகனங்கள் நேற்று மாலை முதல் இந்த வழியாக சென்று வர தொடங்கின. பஸ்கள் மற்றும் லாரிகள் போன்ற கன ரக வாகனங்கள் இந்த மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் ஏற்காட்டில் அடிவாரம் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் ஏற்காட்டிற்கு செல்பவர்களும், அங்கிருந்து சேலத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் அந்த பஸ்களில் பயணம் செய்தனர்.

    சேலம்-ஏற்காடு இடையே 3 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் லாரிகள் ஏற்காடு செல்ல தொடர்ந்து தடை நீடிக்கிறது. 

    • வெடிகுண்டு இருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை.
    • தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்த பள்ளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த கேத்தி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பகல் 1 மணிஅளவில் அந்த பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், உங்களின் பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் ஊட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை வகுப்பில் இருந்து வெளியேற்றினர்.

    தொடர்ந்து மோப்ப நாய்களுடன் வந்திருந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் அந்த பள்ளியில் அனைத்து பகுதிகளிலும் அங்குலம்-அங்குலமாக சோதித்து பார்த்தனர்.

    ஆனால் வெடிகுண்டு இருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்த பள்ளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஊட்டி சர்வதேச பள்ளி, குன்னூர் பள்ளி மற்றும் 4 நட்சத்திர ஓட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்திருந்தது. இதனால் போலீசார் அந்த பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    ஊட்டி அரசு மருத்துவ கல்லூரிக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்தது. தொடர்ந்து போலீசார் மருத்துவ கல்லூரியில் சோதனை நடத்தினர். பின்னர் இ-மெயிலில் வந்தது பொய்த்தகவல் என்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் மீண்டும் கேத்தி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை யார் செய்கிறார்கள் என்பது குறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் இ-மெயில்கள் வெளிநாடுகளில் இருந்து வருவதால், இதனை யார் அனுப்புகின்றனர், எங்கிருந்து வருகிறது என்பது குறித்த எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    இதற்கிடையே கேத்தி தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.
    • மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 25,098 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் முழு கொள்ள ளவை எட்டியுள்ளது. இந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 111.39 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 113.39 அடியாக உயர்ந்து. இன்று காலை 8 மணியளவில் நீர்மட்டம் 114.58 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 85.09 டி.எம்.சி.யாக உள்ளது. இன்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 25,098 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் தனது முழுகொள்ளளவை எட்டிவிடும்.

    பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

    • அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம்.
    • "அமைதி, வளம், வளர்ச்சி" பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை,

    இந்த இயக்கத்தை, பல்வேறு சோதனைகளையும் கடந்து மக்களுக்காண பாதையில் தொடர்ந்து பயணிக்க

    உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் இதயதெய்வம் புரட்சித்தலைவி "அம்மா" அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

    அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம். தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய "அமைதி, வளம், வளர்ச்சி" பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி! என்று தெரிவித்துள்ளார். 

    ×