என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குலாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- விபத்து ஏற்பட்ட குடியிருப்பை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டித் தரப்படும்.
சென்னை பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குலாப் (22) என்பவர் மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வழியில் திடீரென 4-வது மாடியில் இருந்து பால்கனி மேற்கூரை இடிந்து அவர் தலை மீது விழுந்தது.
இந்த விபத்தில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை மீட்டு, அப்பகுதி மக்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியான இளைஞர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
விபத்து ஏற்பட்ட குடியிருப்பை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டித் தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- கடந்த 5 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து உள்ளது.
- செம்பரம்பாக்கம் ஏரிக்கு 412 கனஅடியும் தண்ணீர் வருகிறது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் பெஞ்ஜல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல் பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
கேசவபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர், ஆரணி ஆறு, நந்தியாற்று தண்ணீர் மற்றும் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 4 ஆயிரத்து 360 கனஅடியாக உயர்ந்து உள்ளது.
கடந்த 5 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில் தற்போது 30.30 அடிக்கு தண்ணீர் உள்ளது. கடந்த 1-ந்தேதி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 23.30 அடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 1810 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 27 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இல்லாததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 209 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 412 கனஅடியும் தண்ணீர் வருகிறது.
- மாணவ-மாணவிகள் இன்று காலை பள்ளியை புறக்கணித்து தர்ணா.
- மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக ரகசியமாக விசாரணை.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், நான் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறேன். இந்த பள்ளிக்கு வந்து சேர்ந்த புதிதில் இங்கு பணியாற்றி வரும் ஆசிரியர் மூர்த்தி என்னை அடிக்கடி அழைத்து பேசுவார். நான் ஆசிரியர் என்ற முறையில் பேசி வந்தேன்.
ஒரு நாள் அவரது அறைக்கு என்னை மட்டும் வரச்சொன்னார். உள்ளே சென்றபோது என்னை சுவற்றில் சாய்த்து உடல் முழுவதும் முகர்ந்து உதட்டில் முத்தம் கொடுத்து தகாத செயலில் ஈடுபட்டார்.
பின்னர் உனக்கு இது பிடித்திருந்தால் தினமும் இதே மாதிரி செய்கிறேன் என்று என்னை வற்புறுத்தினார். ஆசிரியர் மீதான பயத்தால் யாரிடமும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தேன்.
ஆசிரியர் மூர்த்தி ஒருவர்தான் எங்களுக்கு அனைத்து படங்களையும் எடுத்ததால் என்னால் என் படிப்பிற்கு பிரச்சனை வந்து விடும் என்று பயந்து யாரிடமும் சொல்லவில்லை.
மேலும் அவரிடம் படித்த மாணவர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பொறுப்புகளில் இருந்தததால் இதை வெளியில் சொன்னால் எதுவும் நடக்காது என்று அமைதியாக இருந்துவிட்டேன்.
நாளுக்கு நாள் அத்துமீறல் அதிகமானதால் இதை எனது தோழிகளிடம் சொன்னேன். அவர்கள் உனக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை, இதேபோல் இந்த பள்ளியில் பலருக்கு நடந்துள்ளது என்றனர்.
இதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரின் தொடர்ச்சியான தொந்தரவுகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன்.
மேலும் ஆசிரியர் மூர்த்தி ஆசிரியர் என்னிடம் போக போக உனக்கு பழகிவிடும் என்றும், என்னுடைய வாரிசு உன்னுடைய வயிற்றில் வளரும் எனவும் பலமுறை கூறியிருக்கிறார். அவரின் ஆசைக்கு சில சமயம் இணங்க மறுத்ததால் என்னை பயமுறுத்தும் உள்நோக்கத்தோடு உள்ளூர் மாணவர் ஒருவரை அடித்து மண்டையை உடைத்துள்ளார்.
எனக்கு மட்டும் இவ்வாறு நடக்கவில்லை எனவும் பள்ளி விடுதியில் தங்கி இருக்கும் பெரும்பாலான மாணவிகளுக்கு இந்த மாதிரி பாலியல் தொந்தரவு ஆசிரியர் மூர்த்தியால் நடந்துள்ளது.
இவரின் சீண்டல்கள் எல்லை மீறவே இந்த சம்பவம் குறித்து எனது பெற்றோர்களிடம் சொல்லி விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து பெற்றோரிடம் சொன்னேன். அதற்கு நீ இறந்ததற்கு பிறகு இந்த உலகத்தில் நாங்களும் வாழ விரும்பவில்லை. ஆகவே மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எனது பெற்றோர்கள் சொன்னதன் பேரில் நடந்த சம்பவத்தைச் சொன்னேன். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு மூர்த்தி ஆசிரியரே முழு பொறுப்பாகும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மேலும் அந்த மனுவில் அதே பள்ளியை சேர்ந்த சில மாணவிகள் தங்கள் கைப்பட எழுதிய மனுவும் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆசிரியர் மூர்த்தி என்பவர் மீது மாணவி அளித்த புகார் குறித்து தகவல் அறிந்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இன்று காலை பள்ளியை புறக்கணித்து பள்ளி நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி, போலி புகார் மீது நடவடிக்கை எடுக்காதே என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை ஏந்தி பங்கேற்றனர்.
இதனால் பள்ளி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்த செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகரணி மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவ, மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பள்ளி தலைமை ஆசிரியரும் மாணவர்களுடன் பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் கலைந்து வகுப்புகளுக்கு சென்றனர்.
இதற்கிடையே ஆசிரியர் மூர்த்தியிடம் பயின்ற மாணவர் ஒருவர் தற்போது அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். தன்னிடம் டியூசன் படிக்காமல், பலர் மூர்த்தியிடம் டியூசனுக்கு செல்வது பிடிக்காமல் அவர் சில மாணவிகளை ஆசிரியர் மூர்த்திக்கு எதிராக திசை திருப்பிவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆசிரியர் மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முறையாக விசாரணை நடத்தி உண்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.
தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு ஏற்ப ஆசிரியர் மீது மாணவிகள் புகார் அளித்த போதிலும், உண்மைத் தன்மை குறித்து கண்டறிய ஒரு குழு அமைத்து ஒவ்வொரு மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக ரகசியமாக கருத்துக்களை கேட்டு அறிந்தால் மட்டுமே குட்டு வெளிப்படும்.
- வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
- வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய பணம் பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய பணம் பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ரவீந்திரன் உத்தரவின் படி மாநகராட்சி இணை ஆணையர் தலைமையில் அதிகாரிகள் காஞ்சிபுரம் பஸ் நிலையம் பகுதியில் ரூ.1 கோடியே 30 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த உணவகம் உள்ளிட்ட 7 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
- வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பணம் இருப்பு விவரங்களை வீடியோ கால் மூலம் கேட்டறிந்துள்ளனர்.
- சீனிவாசன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
ஈரோடு:
தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று இணையதளம் மோசடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் கவர்ச்சிகர விளம்பரம் என விதவிதமாக ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இதே போல் ஈரோட்டை சேர்ந்த இருவர் மோசடியில் இழந்த ரூ.37 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு அவர்களிடம் வழங்கி உள்ளனர்.
இதைப்பற்றிய சம்பவம் வருமாறு:-
ஈரோட்டை சேர்ந்தவர் செல்வன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது பேஸ்புக்கில் அறிமுகமான நபர் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பி செல்வன் ரூ.42 லட்சத்தை பல்வேறு தவணை முறைகளில் செல்வனுக்கு அனுப்பி உள்ளார்.
பின்னர் பேஸ்புக்கில் அறிமுகமான நபர் திடீரென தனது கணக்கை முடித்து விட்டார். இதனால் ஷேர் மார்க்கெட்டில் தன்னை முதலீடு செய்ய அறிவுறுத்திய நபர் குறித்த முழு விவரம் தெரியவில்லை. இதுகுறித்து செல்வன் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதைப்போல் ஈரோட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் சீனிவாசனிடம் வீடியோ காலில் பேசிய நபர், மும்பை அந்தேரி பகுதியிலிருந்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய அதிகாரி பேசுவதாகவும், உங்கள் ஆதார் கார்டு மற்றும் சிம் கார்டு எண்ணை பயன்படுத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே உங்கள் ஆதார் கார்டு முடக்கப்படும்.
எனவே உங்கள் எப்.ஐ. ஆர் பதிவு செய்திருப்பதாகவும், விரைவில் உங்களை கைது செய்வோம் என்று கூறியுள்ளார். மேலும் வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பணம் இருப்பு விவரங்களை வீடியோ கால் மூலம் கேட்டறிந்துள்ளனர். இதை உண்மை என்று நம்பி சீனிவாசனும் அந்த நபரிடம் வங்கியின் பணம் இருப்பு விவரங்களை தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் சீனிவாசன் வங்கி சேமிப்பில் இருந்து ரூ.27 லட்சம் எடுக்கப்பட்டதாக அவருக்கு எஸ்.எம்.எஸ் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த இரு வழக்குகளையும் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து பணத்தை எடுத்துக் கொண்ட வங்கியில் பேசி அந்த வங்கி கணக்கை உடனடியாக முடக்கினர். செல்வன் இழந்த தொகையில் ரூ.10 லட்சத்து 17 ஆயிரம், சீனிவாசன் இழந்த முழு தொகையான ரூ.27 லட்சத்தையும் மீட்டனர். இந்தத் தொகையை சைபர் கிரைம் போலீஸ் ஏ.டி.எஸ்.பி வேலுமணி ஈரோடு எஸ்.பி. ஜவகர் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
- அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
- எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் திரண்டு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.
- காரை ஜெகதீஷ் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
- ஜெகதீஷ் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 45). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் பணியாற்றும் நிறுவனத்தில் வெள்ளலூர் மகாகணபதி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மனைவி தர்ஷனா என்ற பிரியா (29) கார் லோன் வாங்கி இருந்தார்.
இந்தநிலையில் தர்ஷனா சரியாக மாத தவணை கட்டவில்லை என கூறப்படுகிறது. 20 மாதங்களாக பணம் கட்டாததால் இதுகுறித்து கேட்பதற்காக ஜெகதீஷ், அவருடன் வேலை பார்க்கும் சரவணன் மற்றும் சுரேஷ் ஆகியோரை அழைத்துக் கொண்டு தர்ஷனாவின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டில் நின்ற காரை ஜெகதீஸ் மற்றும் ஊழியர்கள் பறிமுதல் செய்ய முயன்ற போது காரை தர்ஷனாவின் கணவர் மணிகண்டன் வெளியில் ஓட்டி செல்ல முயன்றுள்ளார். காரை ஜெகதீஷ் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது தர்ஷனா அவர்கள் வீட்டில் வளர்த்து வரும் வளர்ப்பு நாயை அவிழ்த்து ஏவி விட்டுள்ளார். பாய்ந்து சென்ற அந்த நாய் ஜெகதீசனை பல இடங்களில் கடித்தது. இதில் அவரது கால் மற்றும் அடிவயிறு உள்ளிட்ட 12 இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை ஊழியர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து ஜெகதீஷ் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தர்ஷனாவை கைது செய்தனர்.
- பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை.
நெல்லிக்குப்பம்:
கடலுர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் பெரும் பாதிப்பை சந்தித்தது.
இந்த நிலையில் தொழிலாளர் நல த்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முள்ளி கிராம்பட்டில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அந்த வகையில் கையில் குழந்தையுடன் நின்ற இளம்பெண் மற்றும் மூதாட்டி ஒருவரிடம் அமைச்சர் சி.வெ.கணேசன் குறைகளை கேட்டார்.
அப்போது அவா்கள் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி கதறி அழுதனர்.
இதை பார்த்த அமைச்சர் சி.வெ.கணேசன், உடனே அந்த பெண்களின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறி, அண்ணன் வந்துட்டேன், கவலை படாதே, உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.
மேலும் இளம்பெண் வைத்திருந்த பெண் குழந்தையை வாங்கிய அமைச்சர், அந்த குழந்தைக்கு மணிமேகலை என்று பெயர் சூட்டினார்.
பின்னர், தாசில்தாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் வருகிறேன் என்று தெரிந்தும் நீங்கள் வரவில்லை, உடனே இங்கு வந்து பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறி எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், கமிஷனர் கிருஷ்ணராஜன், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மாருதி ராதாகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், வி.சி.க. நகர செயலாளர் திருமாறன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சாப்பிட்டும், மிதித்தும் சேதப்படுத்தியது.
- வனப்பகுதியையொட்டி அகழிகளை அமைத்து யானைகள் கிராமத்திற்குள் புகாத வண்ணம் தடுக்க வேண்டும்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் இருக்கும் மலை கிராமங்களில் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தம்முரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார், இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சித்தனின் மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்தது.
தொடர்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சாப்பிட்டும், மிதித்தும் சேதப்படுத்தியது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய யானை அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
யானை வனப்பகுதியில் இருந்து மலை கிராமங்களுக்கு வருவதை தடுக்கும் பொருட்டு வனப்பகுதியையொட்டி அகழிகளை அமைத்து யானைகள் கிராமத்திற்குள் புகாத வண்ணம் தடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்ததோடு சேதமான பயிருக்கும் உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளார்.
- கடன் கேட்டு கொடுக்காததால் கூலிப்படையை ஏவி கொலை.
- 5 பேர் கைது, 2 கார்கள், வீச்சரிவாள், கத்தி பறிமுதல்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ள னர். ஊட்டியை பூர்வீகமாக கொண்ட ரமேஷ், திருப்பூரில் வீட்டில் இருந்தபடியே கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 1-ந்தேதி அதிகாலை நடைபயிற்சி சென்ற போது அவினாசி 6 வழிச்சாலையில் வைத்து காரில் வந்த மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக ரமேசை வெட்டிக்கொன்றனர்.
இந்த கொடூர கொலை வழக்கில் முதற்கட்டமாக, திருவாரூர் மாவட்டம் அறித்துவாரமங்கலம் பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (35), மன்னார்குடி பகுதியை சேர்ந்த அஜீத் (27), அதே பகுதியை சேர்ந்த சிம்போஸ் (23), சரண் (24) மற்றும் தேனி மாவட்டம் சில்லு வார்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (45) ஆகிய 5 பேரை அவினாசி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய 2 கார்கள், வீச்சரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடததிய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.ரமேசுக்கும், இர்பான் என்பவருக்கும் பணம்-கொடுக்கல் வாங்கல் பிரச்சினை மற்றும் சேவூரில் இடப்பிரச்சினை இருந்து வந்தது.
மேலும் இர்பான் ரமேசிடம் பெரிய தொகையை கடன் கேட்டு ள்ளார். அதற்கு பிணையாக பத்திரமோ பொருளோ இல்லாமல் பெரிய தொகை தர முடியாது என ரமேஷ் மறுத்ததோடு இர்பானை தகாத வார்த்தைகளில் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், தனது நண்பர் அரவிந்தன் என்பவரிடம் தெரிவித்தார். இதையடுத்து ரமேசுக்கு உயிர் பயத்தை காட்டும் வகையில் அவரை மிரட்ட 2பேரும் முடிவு செய்தனர்.
இதற்காக கூலிப்படையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அஜீத், சிம்போஸ், சரண், மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரிடம் ரூ.4 லட்சம் பணம் கொடுத்துள்ளனர்.
மேலும் ரமேசை கை, கால்களில் மட்டும் வெட்டு மாறு கூறியுள்ளனர். ஆனால் கூலிப்படையினர் 5 பேரும் ரமேசின் தலையில் வெட்டியதால் அவர் உயிரிழந்தார்.
கொலைக்கு திட்டம் வகுத்த முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளான இர்பான், அரவிந்தன் ஆகிய 2பேரை போலீசார் இன்று கைது செய்தனர். கடன் கேட்டு கொடுக்காததால் கூலிப்படையை ஏவி, தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அணை நீரில் நுரை பொங்கி குவியல், குவியலாக துர்நாற்றத்துடன் தென்பெண்ணை ஆற்றில் வெளியேறியவாறு உள்ளது.
- ரசாயன நுரைகள் காற்றில் பறந்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் விளைபயிர்கள் மீது படிந்து வருகின்றன.
ஓசூர்:
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பலமாகவும், பரவலாகவும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 600 கன அடிநீர் வந்தது. 600 கன அடி நீரும், ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று, விநாடிக்கு 680 கன அடிநீர் வந்தது. அதே அளவு நீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதி கழிவுகள் மழை நீரில் கலந்து, தொடர்ச்சியாக கெலவரப்பள்ளி அணைக்கு வருவதால், அணை நீரில் நுரை பொங்கி குவியல், குவியலாக துர்நாற்றத்துடன் தென்பெண்ணை ஆற்றில் வெளியேறியவாறு உள்ளது. மேலும் இந்த ரசாயன நுரைகள் காற்றில் பறந்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் விளைபயிர்கள் மீது படிந்து வருகின்றன.
இதனால், விவசாயிகளும், கிராம மக்களும் வேதனை அடைந்துள்ளனர்.
- உணவுப்பொருளில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒருவர் பலியாகி உள்ளார்.
- இந்த பகுதிகளில் தற்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னை தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* சென்னை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை.
* குடிநீரில் கழிவுநீர் கலந்து இருந்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பர். ஆனால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* உணவுப்பொருளில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒருவர் பலியாகி உள்ளார்.
* உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முன்பு மீன் சாப்பிட்டுள்ளார்கள்.
* இந்த பகுதிகளில் தற்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சில மணி நேரத்தில் தெரிந்து விடும் என்று அவர் கூறினார்.






