சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடக்கம்: லாரிகள் இயக்க தடை

மலைப்பாதையில் பாறைகள் உருண்டும் மரங்கள் சாய்ந்தும் கிடந்தது.கன ரக வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடக்கம்: லாரிகள் இயக்க தடை
Published on

சேலம்:

பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 29-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை கன மழை கொட்டியது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தொடர்ந்து அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் பாறைகள் உருண்டும் மரங்கள் சாய்ந்தும் விழுந்ததால் வாகனப்போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

குப்பனூர் வழியாக மட்டும் வாகனங்கள் சென்று வந்தன. இதனால் பொது மக்கள் தவித்தனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் விழுந்த மண், பாறைகள் மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றி வந்தனர். மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சேலத்தில் இருந்து வழக்கமாக ஏற்காட்டிற்கு செல்லும் அடிவார மலைப்பாதையில் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல நேற்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள், மளிகை பொருட்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் சிறிய வாகனங்கள் நேற்று மாலை முதல் இந்த வழியாக சென்று வர தொடங்கின. பஸ்கள் மற்றும் லாரிகள் போன்ற கன ரக வாகனங்கள் இந்த மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை முதல் ஏற்காட்டில் அடிவாரம் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் ஏற்காட்டிற்கு செல்பவர்களும், அங்கிருந்து சேலத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் அந்த பஸ்களில் பயணம் செய்தனர்.

சேலம்-ஏற்காடு இடையே 3 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் லாரிகள் ஏற்காடு செல்ல தொடர்ந்து தடை நீடிக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com