என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு ரூ.10,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்
    X

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

    • விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என எல்லா இடங்களும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
    • எதிர்க்கட்சிகளை குறை சொல்வதை விட்டுவிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட அத்தனை மக்களுக்கும் நிவாரணம் நிதி வழங்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பார்த்திருக்கிறேன். ஃபெஞ்சல் புயல் மக்களை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. பெரும்பாலும் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் மழை வெள்ளம் புகுந்து சேறும், சகதியுமாக வீடுகள் மாற்றியுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என எல்லா இடங்களும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. டெல்டாவும் பாதிப்பை சந்தித்துள்ளது.

    ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் வயித்தெரிச்சலில் பேசி வீண் விளம்பரம் தேடுகிறார்கள் என கூறியிருக்கிறார். இது தவறான கருத்து. இதில் விளம்பரம் தேட ஒன்றும் இல்லை. அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேரை வாரி வீசுகிறார்கள். தி.மு.க. பேனர்கள் கிழிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த மக்களும் மறியல் செய்கிறார்கள். இந்த அளவில் தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை பார்த்து தான் எதிர்க்கட்சிகள் வயித்தெரிச்சல் பட வேண்டுமா என முதலமைச்சரை நோக்கி நான் கேள்வி கேட்கிறேன்.

    இது போன்ற கருத்துக்களை எப்படி சரி செய்ய வேண்டும் என முதலமைச்சர் யோசித்தால் ஆட்சியை நாங்கள் வரவேற்போம். இந்த ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது என புகழ வேண்டும் என்றால் எப்படி சொல்ல முடியும். மக்கள் தான் எஜமானர்கள். அந்த மக்கள் சொல்ல வேண்டும் இந்த ஆட்சி உண்மையிலேயே நல்ல ஆட்சி நடக்கிறது என. இதெல்லாம் தவறான ஒரு முன் உதாரணம்.

    எதிர்க்கட்சிகளை குறை சொல்வதை விட்டுவிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட அத்தனை மக்களுக்கும் நிவாரணம் நிதி வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மின்சாரம், தண்ணீர், சாப்பாடு, உடை இல்லாமல் வாழக்கூடிய நிலைமையை நான் பார்க்கிறேன். எனவே தே.மு.தி.க. சார்பில் நாங்கள் நேரடியாக சென்று எங்களால் முடிந்ததை செய்திருக்கிறோம். இன்னொரு முறையும் எங்கெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அறிந்து அங்கெல்லாம் செல்ல இருக்கிறோம்.

    இயற்கை சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அரசு முன்கூட்டியே சரியாக திட்டம் வகுத்து தொலைநோக்கு திட்டங்களை தீட்டி இருந்தால் மக்களை பாதுகாத்திருக்கலாம். எல்லாத்தையும் கோட்டை விட்டு விட்டார்கள். மக்கள் இதிலிருந்து விரைவில் மீண்டு வர வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ. 2 ஆயிரம் ஒன்றுமே இல்லை. மக்கள் சிறுக சிறுக சேர்த்த அத்தனை பொருட்களையும் இழந்திருக்கிறார்கள். அவர்கள் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்து நிற்கதியாக நிற்கிறார்கள். அவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் ஓட்டுக்கு கொடுத்து ஜெயித்தது போல் இன்று கொடுத்தால் அது ஒரு நாளைக்கு கூட போதாது. நமது அருகில் உள்ள மாநிலமான புதுச்சேரி ரூ.5 ஆயிரம் அறிவித்துள்ளது. அவர்களை விட தமிழகம் பெரிய மாநிலம். எனவே ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ. 10 ஆயிரம் முதலமைச்சர் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தர வேண்டும்.

    அதேபோல் விவசாயிகள் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 50 ஆயிரம், அதிக பாதிப்பு இருப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் கொடுத்தால் தான் அவர்கள் வாழ்க்கையில் மீண்டு வர முடியும். எனவே உடனடியாக மக்களுக்கு நிவாரணம் கொடுத்து சேறும் சகதியுமாக உள்ள வீடுகளில் உள்ள மக்களை காப்பாற்றி மீட்டுக் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×