என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இது மக்களை முட்டாள்களாக்கும் செயல்.
- நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பன போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2025-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 இந்த முறை காணாமல் போயிருக்கிறது. மக்களை ஏமாற்றும் வகையிலான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
2009-ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் அத்துடன் ரூ.1000 முதல் ரூ.2500 வரை பணமும் சேர்த்து வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.1000 பணம் நிறுத்தப்பட்டதுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம், பருப்பு வகைகள், கோதுமை, உப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் வழங்கப்பட்டன. அவை தரம் குறைந்தவையாக இருந்ததாகவும், அவற்றின் கொள்முதலில் ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் அந்தப் பொருட்களுக்குப் பதிலாக மீண்டும் ரூ. 1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் ரூ.1000 நிறுத்தப்பட்டிருக்கிறது. இது சரியல்ல.
2024-ஆம் ஆண்டில் தேர்தல் வந்ததால் அந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் ரூ.1000 பணம் கொடுத்த தமிழக அரசு, 2025ஆம் ஆண்டில் தேர்தல் இல்லை என்பதால் பணம் வழங்கவில்லை என்று தெரிகிறது. 2026-ஆம் ஆண்டு தான் தேர்தல் வரும் என்பதால் அப்போது ரூ.1000 வழங்கி மக்களை ஏமாற்றி விடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. இது மக்களை முட்டாள்களாக்கும் செயல்.
நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பன போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது. மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை போராடியோ, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தோ பெற வேண்டிய மாநில அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறியதற்காக மக்களை தமிழக அரசு தண்டிப்பது நியாயமற்றது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்களுக்கு கூடுதலாக உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் உதவி வழங்க மறுப்பதும் திமுகவின் இரட்டை வேடம் ஆகும்.
கடந்த சில மாதங்களில் பெய்த கடுமையான மழையாலும், வெள்ளத்தாலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் பொங்கலை ஓரளவாவது மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதை உணர்ந்து நடப்பாண்டுக்கான பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 சேர்த்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
- வழக்கம் போல, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
- தரிசனத்துக்கு அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக, அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் பக்தர்கள் ஈடுபட்டனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக அலைமோதுகிறது.
இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை தினமான நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
குறிப்பாக, வெளிமாவட்ட மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநில பக்தர்கள் வருகை அதிகரித்தது.
அதோடு, சபரிமலை செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
நேற்று மாட வீதி வரை 1 கி.மீ. தூரம் நீண்டிருந்தது. சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பிறகே தரிசனம் செய்தனர்.
பொது தரிசன வரிசை ராஜகோபுரம் வழியாகவும், ரூ. 50 கட்டண தரிசன வரிசை அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டது. தரிசனம் முடிந்ததும், தெற்கு கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.
வழக்கம் போல, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. விரைவு தரிசனத்துக்காக ஒற்றை வழி தரிசன முறை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும், அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில், கிளி கோபுரம் நுழைவு வாயில்களில் நெரிசல் காணப்பட்டது.
தரிசனத்துக்கு அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக, அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் பக்தர்கள் ஈடுபட்டனர்.
மேலும், பக்தர்கள் வருகை அதிகரித்ததால், திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மாட வீதியில் கார் உள்ளிட்ட வாகனங்கள் தடை செய்யப்பட்டது.
ஆனாலும், வட ஒத்தைவாடை தெரு, சின்னக்கடை தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும், மாட வீதியில் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக கூறி போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர்.
- போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமைக்கு நியாயம் கேட்டும், திண்டுக்கல் மாநகராட்சி கூடத்துக்கு வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். பெயரை நீக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தியும், நகரில் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது தமிழக அரசு மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக கூறி போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் மருதராஜ், பாசறை மாநில செயலாளர் பரமசிவம், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பிரேம்குமார், பழனிசாமி, பேரவை செயலாளர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, இளைஞரணி செயலாளர் ராஜன், சார்பு அணி நிர்வாகிகள் ஜெயபாலன், ஜெயராமன், திவான்பாட்ஷா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், ரவிக்குமார், பிரபு, லெனின் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
- ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
- மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே?
ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்த பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model என்று விமர்சித்துள்ளார்.
- பக்தர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் அணிந்து செல்ல வேண்டும்.
- விதிகளை பின்பற்றி யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
தாராபுரம்:
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்கின்றனர்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பவானி கூடு துறையை சேர்ந்த 80 பக்தர்கள் நேற்று பழனிக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலை வழியாக வரப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் தாறுமாறாக ஓடி பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பவானியை சேர்ந்த ராமன் (வயது 54) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் வினையன், பொன்னுச்சாமி, சுந்தரம், துரையன், அமுதராஜ் ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய சாரதி,சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்காமல் இருக்க பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் அணிந்து செல்ல வேண்டும் என்று போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பக்தர்கள் சிலர் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே விதிகளை பின்பற்றி யாத்திரை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்.
- தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
- 5 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டையில் புராதன சிறப்புப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டு 2 முறை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகை பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மார்கழி மாதத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி (வியாழக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையடுத்து நடப்பாண்டு 2-வது முறையாக மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று (30-ந்தேதி) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி ஒரு டன் வண்ண மலர்களால் கோவில் வளாகம் முழுவதும் அலங்கரிப்பட்டு இருந்தது.
அதிகாலை 5 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது.
1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழாவில் தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
காலை 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு நல்லெண்ணெய், பால், தயிர், திருமஞ்சள், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம் போன்ற வாசனைப் பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
பின்னர் மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. சுமார் 20-க்கும் மேற்பட்ட கோவில் பட்டாச்சாரியார்கள் பூஜை பணிகள் செய்தனர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்கள் வரிசையாக சென்று வரும் வகையில் கோவில் பகுதிகளிலும், கோவில் அமைந்துள்ள தெருக்களிலும் பேரிகார்டு வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டது. பக்தர்கள் வரிசையாக வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். 5 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நாமக்கல்லில் கோட்டை ரோடு, பார்க் ரோடு பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது. நாமக்கல் கோட்டை பகுதி முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணா தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 50 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
ஆஞ்சநேயர் ஜெயந்தி பெருவிழாவையொட்டி நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் யாருக்கு சீட்டு கிடைக்கும்.
- இரு கட்சியினர் மட்டுமல்ல தொகுதி மக்களும் காத்திருக்கின்றனர்.
பெருந்துறை:
2008ல் தொகுதி வரையறை செய்யப்பட்ட போது ஈரோடு கிழக்கு தொகுதி உருவாக்கப்பட்டு 2011ல் அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணியில் வேட்பாளராக களம் இறங்கிய தே.மு.தி.க.வின் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்று முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.
2016-ல் தே.மு.தி.க.வில் இருந்து விலகிய வி.சி.சந்திரகுமார் தி.மு.க. வேட்பாளராகவும், கே.எஸ்.தென்னரசு அ.தி.மு.க. வேட்பாளராகவும் போட்டி யிட்டதில் தென்னரசு வெற்றி பெற்றார்.
2021 சட்டப்பேரவை தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றார். 2023-ல் உடல் நலக்குறைவால் திருமகன் ஈவெரா திடீரென காலமானார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இளங்கோவனும் காலமான தால் தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே தொகுதிக்கு 2-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெற போகிறது.
இதுவரை நடைபெற்ற 4 தேர்தலில் தி.மு.க. 2 முறையும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 முறையும் போட்டியிட்டதில் 1 முறை தி.மு.க.வும், 2 முறை காங்கிரசும், ஒரு முறை அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன.
2023 இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
இந்நிலையில் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 14ம் தேதி காலமானார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலுடன், ஈரோடு கிழக்கு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு வாய்ப்பு அளிக்காமல் தி.மு.க.வே போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
அண்மையில் ஈரோடு வந்து சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி சார்பில் எந்த கட்சி போட்டியிடுவது என்பதை கலந்து பேசி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறிச் சென்றார்.
இந்த தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்பது உறுதியாகாத நிலையில் ஈரோடு கிழக்கில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெறுவதற்காக இப்போதே தி.மு.க.வின் முக்கிய அரசியல் கட்சியினர் மேலிடத்தை அணுகி வருகின்றனர்.
இருப்பினும் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிடுவதாக இருந்தால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரசார் கூறுகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-கடந்த 2023 இடைத்தேர்தலில் தனது உடல்நிலையை காரணம் காட்டி, தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பளிக்குமாறு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார்.
ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், எனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு சீட்டு கேட்டு தான் முதல்-அமைச்சர் ஸ்டாலினை சந்தித்தேன் என்று கூறிச் சென்றார்.
ஆனால் இளங்கோவன் மீது கொண்ட அன்பினால், இந்த முறை நீங்களே வேட்பாளராக நில்லுங்க! உங்களை ஜெயிக்க வைப்பது எங்கள் கடமை" எனக் கூறி இளங்கோவனை போட்டியிட வைத்தார்.
எதிர்பார்த்தபடியே இளங்கோவன் வெற்றி பெற்றார். எதிர்பாராத வகையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதால் இந்த முறை தந்தை பெரியாரின் குடும்ப வழி தோன்றலான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு சீட்டு கொடுக்க வாய்ப்புள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் சஞ்சய் சம்பத் மற்றும் அவரது தாயார் வரலட்சுமி இளங்கோவன் உள்ளிட்ட குடும்பத்தினர் இளங்கோவனின் மறைவினால் ஏற்பட்ட துக்கத்தில் இருந்து முழுமையாக இன்னும் மீளவில்லை.
தமிழக அரசியலில் பெரியாரின் வழித் தோன்றலின் அடுத்த வாரிசாக கொள்ளு பேரன் சஞ்சய் சம்பத் உள்ளார். அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என இளங்கோவன் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ள காங்கிரசார், தி.மு.க. தலைமையிடம் கேட்டு வருகின்றனர்.
ஆனால், தி.மு.க.வில் உள்ள 2-ம் கட்ட தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் நிலையில் உள்ளவர்கள் காங்கிரசுக்கு 2 முறை வாய்ப்பளிக்கப்பட்டு விட்டதால் இம்முறை இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரையே களம் இறக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதற்கு பதிலாக ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு எம்.பி. சீட்டு தருவதாகவும் பேசி வருகிறார்கள்.
ஆனால், தமிழக அரசியலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தார். இந்த முறை வாய்ப்பளிக்காவிட்டால் அரசியலில் இளங்கோவன் குடும்பத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது போல் ஆகும்.
சஞ்சய் சம்பத்தை தவிர ஈரோடு கிழக்கில் வலுவான காங்கிரஸ் வேட்பாளர் இல்லை என தி.மு.க. தரப்பில் அக்கட்சியின் மேலிடத்தில் கூற வாய்ப்புள்ளது. எனவே சஞ்சய் சம்பத்துக்கு காங்கிரஸ் சார்பில் போட்டிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவு காங்கிரஸார் கூறுகின்றனர்.
ஒருவேளை சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான கோபி, முன்னாள் மாநகர் மாவட்டத் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான இ.பி.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்டோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குடும்பத்தார் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்காமல் ஒதுங்கிக் கொண்டால் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் (தி.மு.க.) தான் போட்டியிட வேண்டும் என தி.மு.க.வினர் கருதுகின்றனர். அதற்கு தகுந்தபடி ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார், தற்போதைய ஈரோடு தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் விவேக், மாநகரச் செயலாளர் சுப்பிரமணி, எஸ்.எல்.டி.பி.சச்சிதானந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் உள்பட தி.மு.க.வினர் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர்.
இத்தொகுதியை பொருத்தவரை முதலியார் சமூக வாக்குகள் அதிகம் உள்ளதால் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் அந்த சமூகத்தை சேர்ந்த வி.சி.சந்திரகுமார், செந்தில்குமார், திருவாசகம், டாக்டர் விவேக் ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
தே.மு.தி.க.வில் எம்.எல்.ஏ.வாக இருந்த வி.சி.சந்திரகுமார் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்ததும் 2016ல் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தபின் அவருக்கு மறு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அண்மையில் நடைபெற்ற சந்திரகுமார் மகள் திருமணத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வருகை தந்தனர். கட்சித் தலைமையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தி.மு.க. போட்டியிடும் பட்சத்தில் தனக்கு சீட்டு கிடைக்கும் என்று நம்புகிறார்.
அதேசமயம் நீண்ட காலமாக கட்சியில் உழைத்து வரும் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் இந்த முறை தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.
கடந்த 2023-ம் ஆண்டு செந்தில்குமாரின் அண்ணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தேர்தல் நிதியாக ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 555ஐ வழங்கி ஸ்டாலினை ஆச்சரியப்பட வைத்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் குமாருக்கு உரிய நேரத்தில் உரிய பதவி தேடிவரும். அதுவரை காத்திருக்குமாறு கூறிச் சென்றார். எனவே இந்த முறை தி.மு.க. சார்பில் தனக்கு தான் எம்.எல்.ஏ சீட்டு கிடைக்கும் என்று செந்தில்குமார் எதிர்பார்க்கிறார்.
இதேபோல செந்தில்குமாரின் அண்ணன் மகனான மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.
டாக்டர் விவேக், மருத்துவ அணியின் மாவட்ட அமைப்பாளராக கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வருவதால் தனக்கு தலைமை வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கிறார்.
மொத்தத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் யாருக்கு சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இரு கட்சியினர் மட்டுமல்ல தொகுதி மக்களும் காத்திருக்கின்றனர்.
- சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
- சுகி சிவம் தலைமையிலான பட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகா னந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போ தைய முதல்-அமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
வருகிற 1-ந் தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார்.
அவர் மாலை 4.30 மணிக்கு பூம்புகார் படகு குழாமுக்கு சென்று அங்கு அமைக்கப் பட்டுள்ள திருவள்ளுவரின் மணல் சிற்பத்தினை பார்வையிடுகிறார். அதன் பிறகு படகு மூலமாக சென்று திருவள்ளுவர் சிலையை பார்க்கிறார்.
தொடர்ந்து திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறையை இணைத்து ரூ.37 கோடியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அதன் பிறகு தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் அவர், திருவள்ளுவர் பாதமலருக்கு மலர் அஞ்சலியும் செலுத்துகிறார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி விளக்கு மற்றும் வீடியோ படக்காட்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். ஏறத்தாழ 20 நிமிடங்கள் அக்காட்சி நடைபெற இருக்கிறது.
தொடர்ந்து மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விழாவில் நடைபெறும் சுகி சிவம் தலைமையிலான பட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறார். திருக்குறளால் அதிகம் நன்மை பயப்பது தனி மனி தருக்கா? சமுதாயத்திற்கா? என்ற தலைப்பில் இந்த பட்டிமன்றம் நடக்கிறது.
தனி மனிதருக்கே என்ற தலைப்பில் ராஜாராம், மோகனசுந்தரம், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசு கின்றனர். சமுதாயத்திற்கே என்ற தலைப்பில் புலவர் சண்முக வேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ராஜா ஆகியோர் பேசுகின்றனர்.
மறுநாள் (31-ந்தேதி) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளி விழா பந்தலுக்கு வருகிறார். விழாவில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரை வெளியிட்டு அவர் பேசுகிறார். இந்த விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைர முத்து உள்ளிட்டோர் பேசு கின்றனர்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்ன ரசு தலைமையில் கருத்த ரங்கம் நடைபெறுகிறது. சமகாலத்தில் வள்ளுவர் என்ற தலைப்பில் பேரா சிரியர் கருணானந்தன் பேசுகிறார். திருக்குறளும், சங்க இலக்கியமும் என்ற தலைப்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் பேசுகிறார்.
வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம் என்ற தலைப்பில் புலவர் செந்தலை நாம் கவுதமன், திருக்குறள் போற்றும் மகளிர் மாண்பு என்ற தலைப்பில் வக்கீல் அருள்மொழி, வள்ளுவம் காட்டும் அறம் என்ற தலைப்பில் கரு. பழனி யப்பன், திருக்குறளில் இசை நுணுக்கம் என்ற தலைப்பில் பேராசிரியர் விஜயசுந்தரி ஆகியோர் பேசுகின்ற னர்.
மாலையில் அமைச்சர் பெரியசாமி திருக்குறள் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்து நினைவு பரிசுகளை வழங்குகிறார். முடிவில் மாவட்ட கலெக்டர் அழகு மீனா நன்றி கூறுகிறார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா, 30-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, விழா 2 நாட்களாக மாற்றப்பட்டு 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் மு.க.ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
- அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்!
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள மு.க.ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் மு.க.ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் திமுகவை சேர்ந்தவர், போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது.
அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்!
இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்? #யார்_அந்த_SIR ? என பதிவிட்டுள்ளார்.
- யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பலனுமில்லை என்பது தெரிந்ததே.
- எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்.
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு கவர்னரை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சம்பவத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதனை தொடர்ந்து இன்று காலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமை தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பலனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.
எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும் அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என்று கூறி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து முறையிட, கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று பிற்பகலில் விஜய் சந்திக்கிறார். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கவனர்னரை சந்திக்கும் முதல் அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பார்க்கப்படுகிறது. இதனால் விஜயின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தொடங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
- நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
- பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்க பாடுபட்டு வரலாறு படைப்போம்.
தூத்துக்குடி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. நிர்வாகிளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
இதில் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிள், பகுதி, வட்ட செயலாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர்களிடம், வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குகள் பெற்ற பகுதிகளில் நிர்வாகிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிற சட்டமன்ற தேர்தல்களில் அதிக வாக்குகள் பெறுவதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் செய்ய வேண்டும். சரியாக பணி செய்யாத நிர்வாகிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் நிர்வாகிகள் செய்த பணிகள் குறித்த மினிட் புத்தகத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்த நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக வீரர்கள் களம் 2026-ல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட உறுதி யேற்றோம்!
தங்களுக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் கழகத்துக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்க பாடுபட்டு வரலாறு படைப்போம் எனக் கழக நிர்வாகிகள் உறுதியளித்த னர்.
இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
- 100 பெண்களில் இருவர் மட்டுமே கல்வி பயின்று இருந்த நிலை இன்று மாறியுள்ளது.
- வந்த பாதையை மறக்காமல் இருந்தால் தான் வழித்தவறி போகாமலிருக்க முடியும்.
தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவிகளுக்கான ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் புதுமைப்பெண் திட்டத்தில் புதிதாக இணைந்து புதிதாக சாதனை படைக்க உள்ள மகள்களே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசத்தொடங்கினார். மேலும் அவர் கூறியதாவது:-
* ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பதை காணும்போது பெருமையாக உள்ளது.
* நாட்டிலேயே தமிழக பெண்கள் தான் அனைத்து நிலைகளிலும் முதலிடத்தில் உள்ளனர்.
* நாட்டில் உயர்கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழகம் தான் டாப். தமிழக பெண்கள் இந்தியாவிலேயே மதிப்பெண் உள்பட அனைத்திலும் டாப்-ஆக உள்ளீர்கள்.
* உயர்கல்வி பயில்வது, வேலைக்கு செல்வது அனைத்திலும் தமிழக பெண்கள் டாப்-ல் இருப்பதே பெரியாரின் கனவு.
* கல்வியை பொறுத்தவரை பெண்கள் தான் முன்னிலையில் உள்ளனர்.
* 100 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ரீதியாக, பாலின ரீதியாக கல்விக்கு தடை இருந்தது.
* கல்வி கனவை அனைவருக்கும் திறந்து விட்ட ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி.
* இந்தியாவிலேயே அனைவருக்கும் கல்வி என சட்டம் இயற்றியது நீதிக்கட்சி.
* 100 பெண்களில் இருவர் மட்டுமே கல்வி பயின்று இருந்த நிலை இன்று மாறியுள்ளது.
* வந்த பாதையை மறக்காமல் இருந்தால் தான் வழித்தவறி போகாமலிருக்க முடியும்.
* புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைப்பதில் Dravidian Stock ஆக நான் பெருமைப்படுகிறேன்.
* பெருந்தலைவர் காமராஜர் பெயர்கொண்ட கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதை பெருமைக்குரியதாக கருதுகிறேன்.
* காமராஜர் ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் ஏராளமான பள்ளிகள் திறக்கப்பட்டது.
* நாட்டிற்கே தமிழக அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டியாக உள்ளன என்றார்.






