என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மார்க்சிஸ்ட் கட்சி என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல.
- சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தலைமை வகித்தார்.
இந்த பொதுக் கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் தொழிற்சங்க பிரிவு செளந்தரராஜன், மதுரை எம்.பி வெங்கடேசன், வாசுகி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய கே.பாலகிருஷ்ணன், பா.ஜ.க. மற்றும் பா.ம.க. குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் தாங்கள் கூட்டணி அமைத்துள்ள ஆளுங்கட்சியான தி.மு.க.-வையும் அவர் தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்காக கொதிக்கும் அண்ணாமலை, அ.தி.மு.க. ஆட்சியின் போது பொள்ளாச்சியில் பெண்களுக்கு வன்கொடுமை நடந்ததே அப்போது அமெரிக்காவுக்கு படிக்கப் போயிருந்தாரா?. அ.தி.மு.க.-வோடு கூட்டணி பேசிக்கொண்டிருந்தார். அன்றைக்கு ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கோரவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி உங்களுக்கு கவலையில்லை, அரசியல் தான் முக்கியமாக இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.-வின் முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.-வின் முயற்சி தமிழகத்தில் ஒருபோதும் வெற்றி பெறாது.
ஒரு கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்த போது அந்த கட்சியின் நிறுவனர், இது நான் உருவாக்கிய கட்சி. இங்கே நான் சொல்வதை தான் எல்லோரும் கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால் அவர்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியே போய்விடலாம் என்று பேசுகிறார். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல. லட்சக்கணக்கான உழைப்பாளர்கள் தங்கள் உதிரத்தை சிந்தி வளர்த்திருக்கிற கட்சி.
ஆளும் தி.மு.க. உடன் கூட்டணி வைத்துள்ளோம் என்ற அடிப்படையில் பா.ஜ.க., பா.ம.க.-வை கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார் என்று பார்த்தால், முதலமைச்சரையும் கேள்வி எழுப்பினார்.
ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனும் கேள்வியை முன்வைக்க, தற்போது மற்றொரு கூட்டணி கட்சியான சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் முதலமைச்சரை கேள்வி கணைககளால் துளைத்திருப்பது தி.மு.க. கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கெலமங்கலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மலை கிராமத்திற்கு செல்ல நேரம் ஆகும்.
- காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரியும் காடுகள் வழியே பயணம் செய்தனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள தேவன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஆனந்தி (வயது23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான ஆனந்தி அவரது தாய் வீடான தொழுவ பெட்டா பழையூர் கிராமத்தில் தங்கி இருந்தார். இந்த கிராமம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் உள்ளது.
நேற்று இரவு 11.27 மணி அளவில் ஆனந்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கிராம செவிலியர் இது குறித்து கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ராஜேஷ் குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கெலமங்கலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மலை கிராமத்திற்கு செல்ல நேரம் ஆகும் என்பதால் தாயையும், சேயையும் உடனடியாக காப்பாற்ற மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நள்ளிரவு நேரத்தில் ஒரு காரில் உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 10 கிலோ மீட்டர் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரியும் காடுகள் வழியே பயணம் செய்தனர்.
நீண்ட நேரத்துக்கு பின் பழையூர் கிராமத்திற்கு சென்ற மருத்துவ குழுவினர் 12.25 மணி அளவில் ஆனந்திக்கு பிரசவம் பார்த்தனர்.
அப்போது சுக பிரசவத்தில் அவருக்கு 2.700 கிலோ கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது.
ஆம்புலன்ஸ் அந்த பகுதி வழியாக வருவதற்கு நேரமாகவே மருத்துவர் ராஜேஷ் குமார் தனது காரில் தாயையும், சேயையும் பத்திரமாக வனவிலங்குகள் நடமாடும் அதே காட்டுப் பகுதி வழியாக உனி செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நள்ளிரவு நேரத்தில் வனவிலங்குகள் நிறைந்த காட்டுப்பகுதி வழியாக சென்று தாயையும் சேயையும் காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
- நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியை பயன்படுத்தி சாதத்துடன் உணவாக சமைக்கப்பட்டது.
- விழாவில் கலந்து கொண்டவர்கள் அன்னதானம் சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள அனுப்பப்பட்டி கிராமத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் கரும்பாறை முத்தையா சுவாமி கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ உணவு திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் விழாவிற்காக பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறியதற்காக கருப்பு ஆடுகள் மட்டுமே முத்தையாசாமி கோவிலுக்கு வழங்குவார்கள். பக்தர்கள் கோவிலில் விட்டுச் செல்லும் ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும்போது கருப்பசாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை பொதுமக்கள், விவசாயிகள் யாரும் விரட்டமாட்டார்கள்.
விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கிராமப்புறங்களில் சுற்றி திரியும் ஆடுகளை எல்லாம் ஒன்று சேர்த்து சுவாமிக்கு பலியிடப்பட்டு அசைவ அன்னதான உணவு பக்தர்களுக்கு வழங்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று நடைபெற்றது. கோவிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியை பயன்படுத்தி சாதத்துடன் உணவாக சமைக்கப்பட்டது. சமைக்கப்பட்ட சாதத்தை ஒரு இடத்தில் மலை போல் குவித்து வைத்து ஆட்டு இறைச்சியால் அசைவ குழம்பு சாமிக்கு படைத்து பூஜை செய்தனர். அதன் பின் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
இந்த கறி விருந்தில் கரடிக்கல், அனுப்பப்பட்டி, மட்டப்பாறை, சொரிக்காம் பட்டி, பெருமாள் கோவில் பட்டி, செக்கானூரணி, மேல உரப்பனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இலை போட்டு கறிவிருந்து பரிமாறப்பட்டது.
விழாவில் கலந்து கொண்டவர்கள் அன்னதானம் சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலிக்கு சாமி தரிசனத்திற்கு வருவார்கள்.
இந்த விழாவானது சமூக நல்லிணக்கத்திற்காக நடத்தப்படுகிறது. குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை கோவிலுக்கு நேர்த்திகடன் செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணவு திருவிழாவில் ஜாதி மத பேதமின்றி அனைவரும் கலந்து கொண்டனர்.
- பா.ஜ.க. மகளிரணி நிர்வாகி குஷ்பு மற்றும் மாநில தலைவர் உமாரதி ஆகியோர் கையில் சிலம்புடன் பங்கேற்றனர்.
- தடையை மீறி ஆர்ப்பாட்டம், பேரணி செல்ல முயன்றதாக குஷ்பு உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்கும் போராட்டத்தை தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக நடத்த முடிவு செய்தனர். இதற்கு போலீசார் உரிய அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் தடையை மீறி பேரணி நடத்துவதாக கூறிய பா.ஜ.க. கட்சியினர் செல்லத்தம்மன் கோவில் முன்பாக திரண்டு நின்று தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ஜ.க. மகளிரணி நிர்வாகி குஷ்பு மற்றும் மாநில தலைவர் உமாரதி ஆகியோர் கையில் சிலம்புடன் பங்கேற்றனர்.
தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டம், பேரணி செல்ல முயன்றதாக குஷ்பு உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மதுரை சிம்மக்கல் ஒர்க்ஷாப் ரோடு பகுதியில் உள்ள ஆயிரம் வீட்டு யாதவர் ஆட்டுமந்தை திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
இதற்கிடையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், பேரணி செல்ல முயன்றதாக குஷ்பு மற்றும் உமாரதி உள்பட 314 பேர் மீது திலகர் திடல் போலீசார் வழக்குப்ப திவு செய்தனர்.
இவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்துதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் கியாஸ் டேங்கர் மாற்று வாகனத்தில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
- விபத்து தொடர்பாக ராதாகிருஷ்ணன் மீது கோவை மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை:
கொச்சியில் இருந்து கோவைக்கு சமையல் கியாஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி நேற்று அதிகாலை அவினாசி சாலை ரெயில்வே மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டேங்கர் தனியாக விழுந்து அதில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை நகரில் பதட்டம் ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக நேற்று அந்த பகுதிகளில் உள்ள 35-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
மேம்பாலத்தில் விழுந்த கியாஸ் டேங்கரை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்தது. சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் கியாஸ் டேங்கர் மாற்று வாகனத்தில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
விபத்துக்குள்ளான கியாஸ் டேங்கர் லாரியை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிவராமபேட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்திருந்தது தெரியவந்தது. லாரி கவிழ்ந்ததும் அவர் கீழே குதித்து தப்பினார். அவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.
விபத்து தொடர்பாக ராதாகிருஷ்ணன் மீது கோவை மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், வேகமாக வாகனத்தை இயக்குதல், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டிரைவர் ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
வழக்கமாக கேரளாவில் இருந்து கியாஸ் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள் எல் அண்ட் டி புறவழிச்சாலை வழியாக அவினாசி சாலையை சென்றடைந்து, அங்கிருந்து சத்தி சாலையில் உள்ள கணபதிக்கு செல்லும். இந்த சாலை கனரக வாகனங்கள் செல்ல எளிதான பாதையாகும். ஆனால் எரிவாயு டேங்கர் லாரியை இயக்கி வந்த டிரைவர் உக்கடம், மரக்கடை வழியாக அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தை கடக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
- முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- மீன் பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் அமாவாசையையொட்டி இன்று 5-வது நாளாக சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் நீடித்தது. இதனால் வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் சீற்றமாக காணப்படுகிறது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் இன்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் தடையை மீறி கடலில் இறங்குபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்து உள்ள வங்கக்கடல் பகுதி மற்ற கடல் பகுதியை விட அதிகமான அளவில் சீற்றமாக இருந்தது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சகஜ நிலைக்கு திரும்பியபிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனால் படகு குழாமில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதே போல திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. அங்கு அமைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீன் பிடி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வட்டக்கோட்டைக்கும் உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
- தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால், பாசனத்திற்கு நீர் தேவை அதிகரித்துள்ளது.
- அணைக்கு வரும் நீரின் அளவு 1,992 கன அடியில் 1128 கன அடியாக சரிந்து உள்ளது.
மேட்டூர்:
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி விநாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது. மழை நீடித்ததால் டிசம்பர் 21-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக இருந்ததால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத்தொடங்கியது. கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி இரவு கடந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.
தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால், பாசனத்திற்கு நீர் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நிரம்பி இருந்த அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியிலிருந்து இன்று காலை 119.14 அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு 1,992 கன அடியில் 1128 கன அடியாக சரிந்து உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 12,000 கன அடியும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 92.10 டி.எம்.சியாக உள்ளது.
- பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோர பகுதி வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல் மற்றும் பல்வேறு பொருட்களை அவ்வப் போது கடத்தி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை போலீசார் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து தடுத்து நிறுத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பெருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதய ராஜ் குமார், இசக்கி முத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் நள்ளிரவில் வந்த லோடு வேனை சோதனை செய்வதற்காக போலீசார் நிறுத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் வேனில் இருந்தவர்கள் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் போலீசார் சோதனை செய்த போது அதில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 22 மூடை பீடி இலைகள் 10 மூடை கட்டிங் பீடி இலைகள், 8 மூட்டை பீடி பண்டல்கள் இருந்தது.
அதனை கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்தும், கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- வெடி விபத்தின் சத்தம் சில கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டது.
- வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி, சாத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் விரைந்தன.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் சாய்நாத் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது பட்டாசு ஆலையில் வெடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் மருந்து கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் அருகில் இருந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளிலும் தீ பரவி பயங்கரமாக வெடித்தது. வெடி விபத்தின் சத்தம் சில கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டது.
இந்த விபத்தில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணன், சிவக்குமார், காமராஜ், மீனாட்சிசுந்தரம் ஆகிய 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி, சாத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிதறி கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாத்தூர் பகுதியில் இன்று காலை நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1,500 கனஅடியாக குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பெரியசாமி உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 67). நிலத்தரகர். இவருடைய தம்பி சிகாமணியின் மகன் செல்வராஜ் (30). பி.எஸ்சி பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
மது அருந்தும் பழக்கம் இருந்த செல்வராஜ், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், வீட்டில் உள்ளவர்களிடம் பணம் வாங்கி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை தன்னுடைய பெரியப்பா பெரியசாமியிடம், மது அருந்த பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததுடன், செல்வராஜை கண்டித்தார். அப்போது பெரியசாமிக்கும், செல்வராஜூக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த செல்வராஜ், பெரியப்பா பெரியசாமியை தாக்கினார். இதனை தடுக்க சென்றவர்களை கத்தியை காட்டி மிரட்டினார்.
பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பெரியசாமியின் தலையை ஆட்டை அறுப்பது போன்று கொடூரமாக அறுத்து தலையை துண்டித்தார். ரத்த வெள்ளத்தில் பெரியசாமி துடி துடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரியப்பாவை கொலை செய்த செல்வராஜ், கத்தியுடன் பெரியப்பா உடல் அருகிலேயே எதுவும் தெரியாதது போல் அமர்ந்து இருந்தார். அதேநேரத்தில் அங்கிருந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், செல்வராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை மீட்டனர்.
பெரியசாமி உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தொடர்ந்து செல்வராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளி ஆட்கள் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.






