என் மலர்
உள்ளூர் செய்திகள்

யானைகள் மிகுந்த வனப்பகுதிக்குள் 10 கி.மீ. சென்று நள்ளிரவு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ குழு
- கெலமங்கலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மலை கிராமத்திற்கு செல்ல நேரம் ஆகும்.
- காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரியும் காடுகள் வழியே பயணம் செய்தனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள தேவன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஆனந்தி (வயது23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான ஆனந்தி அவரது தாய் வீடான தொழுவ பெட்டா பழையூர் கிராமத்தில் தங்கி இருந்தார். இந்த கிராமம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் உள்ளது.
நேற்று இரவு 11.27 மணி அளவில் ஆனந்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கிராம செவிலியர் இது குறித்து கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ராஜேஷ் குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கெலமங்கலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மலை கிராமத்திற்கு செல்ல நேரம் ஆகும் என்பதால் தாயையும், சேயையும் உடனடியாக காப்பாற்ற மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நள்ளிரவு நேரத்தில் ஒரு காரில் உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 10 கிலோ மீட்டர் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரியும் காடுகள் வழியே பயணம் செய்தனர்.
நீண்ட நேரத்துக்கு பின் பழையூர் கிராமத்திற்கு சென்ற மருத்துவ குழுவினர் 12.25 மணி அளவில் ஆனந்திக்கு பிரசவம் பார்த்தனர்.
அப்போது சுக பிரசவத்தில் அவருக்கு 2.700 கிலோ கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது.
ஆம்புலன்ஸ் அந்த பகுதி வழியாக வருவதற்கு நேரமாகவே மருத்துவர் ராஜேஷ் குமார் தனது காரில் தாயையும், சேயையும் பத்திரமாக வனவிலங்குகள் நடமாடும் அதே காட்டுப் பகுதி வழியாக உனி செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நள்ளிரவு நேரத்தில் வனவிலங்குகள் நிறைந்த காட்டுப்பகுதி வழியாக சென்று தாயையும் சேயையும் காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.






