என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது.
- திமுக அரசின் நத்தை வேகச் செயல்பாடு, இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் மோடி அவர்கள், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள திமுக அரசு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது.
மதுரை, தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் திமுக அரசின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று ஊடகங்களில் தெளிவுபடுத்தினார்.
தமிழகத்தின் பல்வேறு ரெயில் திட்டங்களுக்குத் தேவையான 3,389 ஹெக்டேர் நிலத்தில், வெறும் 26% நிலம் மட்டுமே, திமுக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை, சமீபத்தில் நமது ரெயில்வே அமைச்சர் அவர்கள் கூறியிருந்தார்.
அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை-தூத்துக்குடி புதிய ரெயில் பாதைக்கு, சுமார் 870.98 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டது, ஆனால் தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. திமுக அரசின் நத்தை வேகச் செயல்பாடு, இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது.
திமுக அரசின் இந்த மக்கள் விரோத அணுகுமுறையை, தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் ஜனவரி 20-ந்தேதி அன்று, அருப்புக்கோட்டை நகரில், புதிய ரெயில் பாதையை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து, மாபெரும் போராட்டம் நடத்தவிருக்கிறோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
- சட்டசபையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்ட நிலையில் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சட்டமுன்வடிவு இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் கடந்த 6-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது.
அந்த வகையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்திற்கு அவமானம் ஏற்பட்டதாக கூறி உரையாற்றாமல் அவையில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்ட நிலையில் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இதைத்தொடர்ந்து சட்டசபை முன்னாள் உறுப்பினர் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கும் இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மற்றும் தண்டனையை அதிகரிக்கும் 2 சட்ட மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்திருந்தார். இந்த சட்ட மசோதாக்கள் மீது சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சட்டமுன்வடிவு இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
- மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது.
- நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரசாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள்.
சென்னை :
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே...." என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
கடந்த 2021 தேர்தல் பிரசாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரசாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
- சபாநாயகர் அப்பாவு உத்தரவை ஏற்று இருதரப்பிலும் ஆதாரங்கள் இன்று வழங்கப்பட்டது.
- சபாநாயகர் பேச்சுக்கு சட்டசபையில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை:
இந்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.
இதனால் சபாநாயகர் அப்பாவு இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு உத்தரவை ஏற்று இருதரப்பிலும் ஆதாரங்கள் இன்று வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி விவகாரத்தில் 12 நாட்களுக்கு பின்னர் FIR பதிவு என்பதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆதாரத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் 20 பேர் சென்று சபாநாயகரிடம் வழங்கினர்.
இதையடுத்து, இருதரப்பினரும் அளித்த ஆதாரங்களை ஆராய்ந்து பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குபதிவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சபாநாயகர் பேச்சுக்கு சட்டசபையில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
- இதுவரை சீமான் மீது 62 வழக்குகள் பதிவாகி உள்ளன.
- வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பெரியாரை கடுமையாக விமர்சித்ததால் சீமானுக்கு எதிராக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகிறது. இதுவரை சீமான் மீது 62 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னையில் மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திராவிட கழகம், திராவிட விடுதலைக்கழகம், வீரலட்சுமி ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு சைபர் கிரைம், மேற்கு சைபர் கிரைம், சிசிபி ஆகிய இடங்களில் அளிக்கப்பட்ட புகாரின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் அளித்த புகாரின் பேரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயக்கப்படும்.
- எளிதில் டிக்கெட் கிடைக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சி.
நெல்லை:
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக குறைந்தபட்ச மணி நேரங்களில் செல்லும் வகையில் ரெயில் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்தாலும், பயணிகள் இடையே இந்த ரெயில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது இந்த வந்தே பாரத் ரெயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நெல்லையில் இருந்து தினமும் காலை 6.05 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 7.50-க்கும், 9.45 மணிக்கு திருச்சிக்கும் செல்கிறது. தொடர்ந்து மதியம் 1.55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.
இந்த ரெயில் மறுமார்க்கத்தில் மதியம் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு திருச்சி, இரவு 8.20 மணிக்கு மதுரை வழியாக இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடைகிறது.
இந்த ரெயிலில் 7 ஏ.சி. சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரெயில் மொத்தம் உள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது.
இந்நிலையில் இந்த ரெயிலில் டிக்கெட்டுகள் சீக்கிரம் தீர்ந்து விடுவதால் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து நெல்லை-சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரெயிலை 16 பெட்டிகளாக மாற்றி இன்று முதல் இயக்க தென்னக ரெயில்வே திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டது.
பயணிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 15-ந்தேதி முதல் நெல்லை-சென்னை இடையே இரு மார்க்கத்திலும் வந்தே பாரத் ரெயில் 16 பெட்டிகளுடன் இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வர இருப்பதால் அதற்கு முன்பாக ரெயில் 16 பெட்டிகளுடன் இயங்க தொடங்கும் என பயணிகள் சந்தோஷமாக எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் பொங்கலுக்கு மறுதினம் முதல் தான் இயங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது பயணிகளுக்கு ஏமாற்றம் அளித்தாலும், தொடர் விடுமுறைக்கு பின்னர் சென்னை திரும்பும் போது எளிதில் டிக்கெட் கிடைக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதனிடையே கூடுதல் பெட்டிகளுடன் இயங்க உள்ள வந்தே பாரத் ரெயிலுக்கு முன்பதிவு தொடங்கி உள்ளதாக தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- காவலர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றார்.
- தவறான புகாரின் அடிப்படையிலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றார்.
சென்னை:
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மற்றும் தண்டனையை அதிகரிக்கும் 2 சட்ட மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்திருந்தார்.
இந்த சட்ட மசோதாக்கள் மீது சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்
அதன் விவரம் வருமாறு:-
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில்,
இந்த சட்டம் தமிழகத்திற்கு மிக முக்கியமான சட்டம். சிறுமிகளை, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோர் முதல் பின் தொடர்வோருக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தியிருக்கும் அருமையான சட்டம். ஆனால் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. காவலர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றார்.
தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) கூறுகையில்,
மரண தண்டனை குறித்து உலகம் முழுவதும் பல்வேறு கருத்துகள் பரவிவரும் நிலையில் அது குறித்து மட்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.
ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) கூறுகையில்,
இந்த தண்டனைகள் விரைவாக கிடைப்பதற்கு ஏதேனும் வழியிருக்கிறதா? கடுமையான தண்டனைகள் இருந்தாலும் விரைவாக கிடைக்காத காரணத்தினால் குற்றங்கள் பெருகுகின்றனர். சட்டத்திருத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கூறுகையில்,
பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்படும் நோக்கத்தில் தண்டனையை அதிகரித்து முதலமைச்சர் கொண்டு வந்த மசோதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் புகார் கொடுத்தால் தாமதிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. விழிப்புணர்வு பிரச்சாரம், பாடத்திட்டத்தில் பாலியல் சமத்துவ பாடத்திட்டங்களை கொண்டு வர வேண்டும். சாதிமறுப்பு செய்யும் பெண்கள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் அவற்றையும் இந்த சட்டத்தில் கொண்டு வர வேண்டும். மரண தண்டனை குறித்து பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதன் பின்னர் பேசிய சட்டதுறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்,
பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எண்ணுபவர் தான் நம் முதலமைச்சர். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் கனவிலே கூட எண்ணிப் பார்க்காத அளவிற்கு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசுகையில்,
இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
ஜி.கே.மணி (பாமக) கூறுகையில்,
இந்த சட்டம் தேவையான சட்டம். மரண தண்டனையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். தவறான புகாரின் அடிப்படையிலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றார்.
இவ்வாறு உறுப்பினர்கள் பேசினார்கள்.
இதன்பிறகு முதலமைச்சர் கொண்டு வந்த சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- சர்ச்சையான கருத்துக்களை பெரியார் எழுதியதும் இல்லை, பேசியதும் இல்லை.
- தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க திட்டம்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் கூறியதாக சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியது போல், எந்த ஒரு சர்ச்சையான கருத்துக்களையும் பெரியார் எழுதியதும் இல்லை, பேசியதும் இல்லை.
இந்த நிலையில் பெரியாரின் நன்மதிப்பையும், அவரது புகழையும் குறைக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி, தரவுகளும் இன்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
சீமானின் இந்த பேச்சு பெரியாரின் புகழை சீர்குலைப்பது மட்டுமின்றி, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் திட்டமிட்டு பேசியதாக தெரிகிறது.
எனவே, சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில், ஆதாரமற்ற தரவுகளை கொண்டு அவதூறாக பேசியது மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதேபோல், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி செந்தில், திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
- முதலமைச்சர் தேர்தல் யூகங்களும், துணை முதலமைச்சர் தேர்தல் பரப்புரையும் தான் இந்த தேர்தலில் எனக்கு மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க போகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வி.சி.சந்திரகுமார் கூறும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு செய்யப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள், குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தான் இந்த தேர்தல் உடைய கதாநாயகனாக இருக்கப் போகிறது.
அது மட்டுமல்ல இந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் யூகங்களும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையும் தான் இந்த தேர்தலில் எனக்கு மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க போகிறது என்றார்.
- அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருவது பற்றி குறிப்பிட்டார்.
- புதுமைப்பெண்கள் திட்டத்தால் மாணவிகள் வருகை அதிகரித்துள்ளது.
சட்ட சபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, "அரசின் திட்டங்களால் ஒவ்வொரு துறையிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருவது பற்றி குறிப்பிட்டார்.
புதுமைப்பெண்கள் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதால் கல்லூரிகளுக்கு மாணவிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்த திட்டத்தால் பலன் அடைந்து வரும் மாணவிகள் 'அப்பா' என்று என்னை அழைப்பதை கேட்டு மகிழ்ந்து போகிறேன்" என்றார்.
இவ்வாறு பேசும் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். பின்னர் தொடர்ந்து அவர் பேசினார்.
- பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
- குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அதிகஅளவில் பெய்தது. இதன் காரணமாக தற்போது அணை, ஏரி, குளங்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில் மார்கழி மாதம் தொடக்கத்தில் இருந்தே சேலம் மாவட்டத்தில் பனி, குளிரின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுங்குளிர், பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
தினமும் மாலை 3 மணிக்கு தொடங்கும் குளிர், பனி மறுநாள் காலை 11 மணி வரை நீடிப்பதால் அந்த நேரத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
தொடர்ந்து பனி, குளிரின் தாக்கத்தால் பொதுமக்கள் சளி, காய்ச்சல், இரும்பலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் இந்த குளிரால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள். மேலும் பனியின் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து காணப்படுகிறது.
இன்று காலையும் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால் காலை நேரத்தில் குளிரில் இருந்து தப்பிக்க சிலர் சாலையோரங்களில் தீமூட்டி குளிர் காய்ந்தனர்.
மேலும் மலைப்பாதையில் சென்று வந்த வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றன. மேலும் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டது.
குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது. எதிரில் யார் நிற்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதே போல் சேலம் மாவட்டத்தில் உள்ள மற்ற சமவெளி பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கம்பளி ஆடைகள், குல்லா அணிந்து சென்றனர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.57,720-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து புதன்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,800-க்கும் நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,080-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனையாகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,520-க்கும் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,315-க்கும் விற்பனையாகிறது.
இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
09-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,080
08-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800
07-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,720
06-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,720
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-01-2025- ஒரு கிராம் ரூ. 101
09-01-2025- ஒரு கிராம் ரூ. 100
08-01-2025- ஒரு கிராம் ரூ. 100
07-01-2025- ஒரு கிராம் ரூ. 100
06-01-2025- ஒரு கிராம் ரூ. 99






