என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி:
திருச்சி வயலூர் ரோட்டில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமானுஜம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
பின்னர் போதை பொருள் விற்பனை கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 4 பேர் பிடிபட்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் திருச்சி கனரா பேங்க் காலனி சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த பூஜித் (வயது 24), ஈரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த ஆல்வின்(23).
இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வருகிறார்.
திருச்சி ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் நகுல் தேவ் (21). இவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் நவீன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.
கைதான போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் செயல்பட்டு வருகிறார்.
மேலும் கடத்தலுக்கு கோவையை சேர்ந்த ஒருவர் ஏஜென்டாக செயல்பட்டதும் தெரியவந்தது.
இவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். மேற்கண்ட போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பல்கள் மற்றும் படகுகள் மூலமாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்பட்டது.
கைதான இந்த நபர்கள் பெங்களூரில் இருந்து இந்த போதை பொருளை வாங்கி வந்து திருச்சி மாநகரில் விற்பனை செய்துள்ளனர்.
- எங்கும் அமைதி நிலை நாட்டப்பட்டு வருகிறது.
- குற்றம் பெருமளவு தடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
போராட்டம் நடத்துகின்ற உரிமையில்லையென்று சிலர் தவறான வாதங்களை வைக்கின்றார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், "அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக இருக்கின்றீர்கள்" என்று தான் என்னை சிலர் விமர்சித்திருக்கின்றார்களே தவிர, நான் சர்வாதிகாரியாக இருப்பதாக யாரும் சொல்ல மாட்டார்கள்; அது என்னுடைய இயல்பும் இல்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளும் போராட்டம் நடத்தலாம் என்று சொல்பவன் நான்.
போராடலாம், தவறு இல்லை; போராட வேண்டிய இடத்தில் போராடலாம், போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் போராடலாம், தவறில்லை. இத்தகைய போராட்டங்களுக்கு உரிய காலத்தில் அனுமதி கேட்டால் நாங்கள் கொடுத்திருக்கின்றோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் இதுவரை சுமார் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கின்றோம்.
சட்டம்-ஒழுங்கைப் பற்றி சிலர் இங்கே குறிப்பிட்டார்கள். என் தலைமையிலான அரசில் காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகின்றது. ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் மேல் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் கொலைகள், ரவுடிகள் சம்பந்தப்பட்ட கொலைச்சம்பவங்கள் மற்றும் ரவுடிகள் தொடர்புடைய சாதிய கொலைச் சம்பவங்கள் குறைந்திருக்கிறது. எங்கும் அமைதி நிலை நாட்டப்பட்டு வருகிறது. குற்றம் பெருமளவு தடுக்கப்பட்டிருக்கிறது.
அதனை மீறியும் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாகக் குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றார்கள். எந்தக் குற்றவாளியையும் யாரும் காப்பாற்றுவதுமில்லை. உரிய தண்டனை, கடுமையான தண்டனை பெற்றுத் தரப்பட்டிருக்கிறது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதில் யாருக்கும் எந்தச் சலுகையும் கிடையாது.
பெரும்பாலான கொலைகள் குடும்பப் பிரச்சனை, காதல் விவகாரம், பணம் கொடுக்கல்-வாங்கல், நிலப்பிரச்சனை, தனிப்பட்ட முன் விரோதம், வாய்த்தகராறு போன்ற காரணங்களுக்காகவே நடந்திருக்கின்றன. அரசியல் காரணங்கள், சாதிய கொலைகள், மதரீதியான கொலைகள், ரவுடி கொலைகள் தி.மு.க. ஆட்சியில் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே பாதுகாப்புமிக்க முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினர்.
- பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் அடைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து காவலர்கள் செல்போன், சார்ஜரை பறிமுதல் செய்தனர்.
- காயமடைந்த சிறைக்காவலர்கள் மணிகண்டன், சாந்தகுமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை புழல் சிறையில் பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் அடைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து காவலர்கள் செல்போன், சார்ஜரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இன்று மீண்டும் சோதனை செய்ய முயன்றபோது காவலர்கள் மீது கைதிகள் தாக்குதல் நடத்தினர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியதில் சிறைக்காவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.
காயமடைந்த சிறைக்காவலர்கள் மணிகண்டன், சாந்தகுமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறையில் கைதிகள் காவலர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
- விலைவாசி கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
- போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டை விடியலை நோக்கி அழைத்துச் சொல்கிறோம் என்றுகூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 42 மாத காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு மோசமான ஆட்சியாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றால், அந்த நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் அறிவுத் திறன் உயர்த்தப்பட வேண்டும், அரசுப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும், விலைவாசி கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், இவையெல்லாம் கடந்த 42 மாத கால தி.மு.க. ஆட்சியில் நடைபெறவில்லை. மாறாக, போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- கடந்த 4-ந்தேதி முதல் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
- இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இன்று இந்த கண்ணாடி பாலத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள கைப்பிடி சுவரில் "திடீர்" என்று சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகும் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- அ.தி.மு.க. சார்பில் கருப்புச் சட்டை அணிந்து வந்தபோது எனக்கு கோபம் வரவில்லை.
- ஆளுநரை கண்டித்து கருப்புச் சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? என்பதுதான் என்னுடைய கேள்வி.
சென்னை:
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. சார்பில் கருப்புச் சட்டை அணிந்து வந்தபோது எனக்கு கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. இப்படியாவது கருப்புச் சட்டை போடுகிறார்களே என்று மகிழ்ச்சியடைகிறேன். கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு வரலாம். அது உங்கள் உரிமை, அதில் நான் தலையிட விரும்பவில்லை. என்னோட கேள்வியெல்லாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில சட்டமன்றத்தை மதிக்காமல் ஓர் ஆளுநர் நடந்து கொள்கிறார். அவரைக் கண்டித்து கருப்புச் சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? என்பதுதான் என்னுடைய கேள்வி.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியைகூட தர மறுத்து, இரக்கமில்லாமல் நடந்துகொள்கிற ஓர் ஒன்றிய அரசினைக் கண்டித்து, நீங்கள் கருப்புச் சட்டை அணிந்திருந்தால் நான் உங்களை வாழ்த்தியிருப்பேன், மகிழ்ச்சியடைந்திருப்பேன். தேசிய கல்விக் கொள்கை மூலமாக பள்ளிக் கல்வியையும், யு.ஜி.சி. மூலமாக கல்லூரிக் கல்வியையும் சிதைக்க நினைக்கிற, பாசிசக் கல்விக் கொள்கையை கண்டித்து கருப்புச் சட்டையை நீங்கள் அணிந்திருந்தால், மனதார உங்களைப் பாராட்டியிருப்பேன். ஆட்சியில் இருந்த காலம் முதல் பா.ஜ.க.வுக்கு நீங்கள் துணையாக நின்றிருக்கிறீர்கள். இருட்டு அரசியல் நடத்துகிறவர்களுக்கு கருப்புச் சட்டை அணிய எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும் வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
15-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16 மற்றும் 17-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று மற்றும் நாளை தென்தமிழகம் , தென்மேற்கு வங்கக்கடல் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- விடுமுறை இன்று முதல் தொடங்குவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் நேற்றே படையெடுத்துள்ளனர்.
- வாகனங்கள் பல மணி நேரமாக காத்திருந்து மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், பொங்கல் பண்டிகைக்கு தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் விடுப்பு எடுத்தால் அதற்கு முந்தைய நாட்களான 11, 12-ந்தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் ஆகும். அதன்படி அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்து விடும்.
இதனால், விடுமுறை இன்று முதல் தொடங்குவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் நேற்றே படையெடுத்துள்ளனர். இதனால், சென்னையின் முக்கிய சாலைகளான கிண்டி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, போரூர் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் வாகனங்களால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் பல மணி நேரமாக காத்திருந்து மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
- பொங்கல் சீசன் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- மதுரையில் இருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்படும் சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்லும்.
கோவை:
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு சென்னை-மதுரை இடையே கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் பொங்கல் சீசன் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மதியம் 3 மணிக்கு புறப்படும் மதுரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06067) நாளை காலை 5 மணிக்கு மதுரை செல்லும்.
மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து நாளை (12-ந்தேதி) இரவு 7 மணிக்கு புறப்படும் சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06068) மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்லும்.
இந்த ரெயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- விலங்குகளை பார்வையிட வார விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வருவது உண்டு.
- வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர்:
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை, மனிதகுரங்கு, காண்டாமிருகம், பாலூட்டிகள், ஊர்வன போன்ற விலங்குகள் பாதுகாக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இங்கு விலங்குகளை பார்வையிட வார விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வருவது உண்டு. மேலும் முக்கிய விழா காலங்கள் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை யொட்டி ஏராளமான பார்வையாளர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அவர்களின் வசதிக்காகவும், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு சீட்டு பெறுவதற்காக 6 கவுண்டர்கள் உள்ளன. இதில் பணம் கொடுத்து டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பண பரிவர்த்தனை மட்டுமல்லாமல் யுபிஐ மூலமும் நுழைவு டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் கவுண்டர்களில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மூங்கில் கம்புகள் கட்டி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு வரக்கூடிய பயணிகள், தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கூடுதலாக பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவையும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உயிரியல் பூங்காவின் உள்ளே செல்ல தனி நுழைவாயில், வெளியே வருவதற்கு தனி வழி என 2 வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பூங்காவை சுற்றி சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 75-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் பாதுகாப்பிற்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை வண்டலூர் உயிரியல் பூங்கா உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு தெரிவித்தார்.
- புதிய ஓய்வூதிய திட்டம் அரசு பணியாளர்கள் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை பெறுவதற்கு இது அடிப்படை நோக்கமாகும்.
- விரைவில் வழிகாட்டுதலுடன் நெறிமுறைகளும் வெளியிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
சென்னை:
சட்டசபையில் எழிலரசன் (தி.மு.க.) ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பற்றி கேட்ட கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில் வருமாறு:-
புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கிறார்கள்.
இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அரசு பணியாளர்கள் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை பெறுவதற்கு இது அடிப்படை நோக்கமாகும். இருந்தாலும் இந்த திட்டத்திற்கு உரிய செயலாக்கத்தை, வழிகாட்டுதல்களை, விரிவான செயல்முறைகளை இன்னும் மத்திய அரசு வெளியிடவில்லை.
விரைவில் அந்த வழிகாட்டுதலுடன் நெறிமுறைகளும் வெளியிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அது வெளியானவுடன் நம் மாநிலத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவினை முதலமைச்சர் ஆலோசனை பெற்று அமைத்து அந்த குழுவின் வழிகாட்டுதலின் படி அந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது.
- திமுக அரசின் நத்தை வேகச் செயல்பாடு, இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் மோடி அவர்கள், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள திமுக அரசு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது.
மதுரை, தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் திமுக அரசின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று ஊடகங்களில் தெளிவுபடுத்தினார்.
தமிழகத்தின் பல்வேறு ரெயில் திட்டங்களுக்குத் தேவையான 3,389 ஹெக்டேர் நிலத்தில், வெறும் 26% நிலம் மட்டுமே, திமுக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை, சமீபத்தில் நமது ரெயில்வே அமைச்சர் அவர்கள் கூறியிருந்தார்.
அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை-தூத்துக்குடி புதிய ரெயில் பாதைக்கு, சுமார் 870.98 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டது, ஆனால் தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. திமுக அரசின் நத்தை வேகச் செயல்பாடு, இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது.
திமுக அரசின் இந்த மக்கள் விரோத அணுகுமுறையை, தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் ஜனவரி 20-ந்தேதி அன்று, அருப்புக்கோட்டை நகரில், புதிய ரெயில் பாதையை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து, மாபெரும் போராட்டம் நடத்தவிருக்கிறோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.






