என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நல்லவாடு கிராமத்தில் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
    • புதுவையில் உள்ள 18 மீனவ பஞ்சாயத்து கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.

    1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், உரிய விசாரணை முடியும் வரை பள்ளியை நிரந்தரமாக மூடக்கோரி புதுவையில் உள்ள 18 மீனவ பஞ்சாயத்து கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.

    அவர்கள் நல்லவாடு கிராமத்தில் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் செய்தியாளர்கள் மற்றும் பிறர் யாரையும் அனுமதிக்க வில்லை. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து போராட்டம் தீவிரமடையும் என தெரிகிறது.

    • முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது.
    • சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த முனுசாமி மகன்கள் மூவேந்தன் (வயது 29), தங்கதுரை (28) மற்றும் ராதா மகன் ராஜ்குமார்(34). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுப்பட்டனர். இதனை தட்டி கேட்பவர்களை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதன் காரணமாக 3 பேரின் சாராய விற்பனை கொடி கட்டி பறந்தது.

    இதனிடையே கடந்த 11-ந்தேதி மதுவிலக்கு போலீசார் முட்டம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்ததோடு சாராய வியாபாரி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார் ஜாமினில் வெளியே வந்தார்.

    அதன் பிறகும் சாராய விற்பனையை அவர்கள் நிறுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகியோர் திருட்டுதனமாக முட்டம் தெருவில் சாராயம் விற்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவன் ஏன் சாராயம் விற்பனை செய்கிறீர்கள் ? என தட்டி கேட்டார். இதில் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரும் ஆத்திரம் அடைந்து சிறுவனை தாக்கினர்.

    இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு அதே கிராமத்தை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ் (25), உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் என்ஜீனியரிங் மாணவர் ஹரிசக்தி (20) ஆகிய 2 பேரும் உடனே வந்து சிறுவனை தாக்கியதற்காகவும், உடனே சாராய விற்பனையை நிறுத்த வேண்டும் என்றும் தட்டி கேட்டனர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை சேர்ந்து கத்தியால் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரை சரமாரியாக பல இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடினர். இந்த கொலை வெறி தாக்குதலில் பலத்த காயமடைந்த ஹரிஷ், ஹரிசக்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள், பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து தப்பி ஓடிய தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகிய 3 பேரையும் உடனடியாக பெரம்பூர் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆஸ்பத்திரியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே, இந்த இரட்டை கொலை சம்பவத்தில் 2 பெண் சாராய வியாபாரிகளுக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை செய்ய வலியுறுத்தி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 

    • சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
    • பிரபாகரனை சந்தித்தது குறித்து யாருக்கு நிரூபிக்க வேண்டி இருக்கு. எனக்கு அவசியம் இல்லை.

    விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    இதனால் சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.

    இதனிடையே, 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான புகைப்படம் அது. 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்.. பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் போலி என்கிறார்கள்.. அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள். பிரபாகரனை சந்தித்தது குறித்து யாருக்கு நிரூபிக்க வேண்டி இருக்கு. எனக்கு அவசியம் இல்லை என்று சீமான் கூறியிருந்தார்.

    இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மனுவில், பிரபாகரன் படத்தை அரசியல் ஆதாயத்திற்காக சீமான் பயன்படுத்தி வருகிறார் என்றும் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்கக்கோரியும் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
    • நாங்கள் வேண்டுமானால் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்.

    'உங்களில் ஒருவன் பதில்கள்' மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார்.

    இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அவருக்கு கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!!

    தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி! என்று தெரிவித்துள்ளார்.

    • இருவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு அருகே முனியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). உப்பள தொழிலாளி.

    இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் சுரேஷ் (40). பெயிண்டர். இவர்கள் இருவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அரிவாளை எடுத்து ராஜாவின் தலையில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், கொலை செய்யப்பட்ட ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்துக்கு தூத்துக்குடி நகர கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரது தலைமையிலான தனிப்படை போலீசார் பெயிண்டர் சுரேசை இரவோடு இரவாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சிறையில் அவ்வப்போது சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
    • பெண்கள் சிறையில் 8 போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த குண்டர் தடுப்பு சட்ட கைதிகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்பட பல்வேறு கைதிகளும் அடங்குவர். சேலம் சிறையில் அவ்வப்போது சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.

    இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கஞ்சா கிடைப்பதாகவும், கைதிகள் செல்போனில் அடிக்கடி பேசி வருவதாகவும், சிறையில் இருந்தபடியே கைதிகள், நண்பர்கள் உதவியுடன் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், இதற்கு அவர்களை பார்க்க வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி வருவதாகவும் சிலர் புகார் கூறி வந்தனர். இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் வார்டன்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டனர்.

    அதன்படி அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் அஸ்வினி தலைமையில் 90-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சிறை வார்டன்கள், சிறை காவலர்கள் 50 பேர் என மொத்தம் 140 பேர் இன்று காலை 6 மணிக்கு சேலம் மத்திய சிறைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    தொடர்ந்து அங்குள்ள 19 பிளாக்குகளிலும் உள்ள கைதிகள் அறைகள், கைதிகளுக்கான ஆஸ்பத்திரி, உணவு தயாரிக்கும் கூடம், விவசாய நிலங்கள், காலியிடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் அங்குள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது செல்போன், சார்ஜர்கள், சிம்கார்டுகள் , கஞ்சா உள்பட ஏதாவது பொருட்கள் தரையில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டது.

    இது தவிர அருகில் உள்ள பெண்கள் சிறையிலும் 8 போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் இந்த சோதனைகளில் எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனை அடிக்கடி நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ஏற்கனவே சோதனை நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மத்திய சிறையில் இன்று காலை ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த அதிரடி சோதனை கைதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடைபெற்றது.
    • சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.

    சென்னை:

    நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று ஆங்கில தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.

    சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடைபெற்றது. 20-ந் தேதி அறிவியல் 25-ந் தேதி சமூக அறிவியல், 27-ந் தேதி தமிழ், 28-ந் தேதி இந்தி, மார்ச் 10-ந் தேதி கணிதம் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன.

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு, புதுவை உள்பட நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. தேர்வுகளை எழுதும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொலை செய்யப்படும் அளவிற்கான பதட்டமான சூழலை வாடிக்கையாக்கிய திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் நடைபெற்ற சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன.

    சாராய விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஒரு சில தினங்களிலேயே ஜாமினில் வெளிவந்து மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்களை இளைஞர்கள் தட்டிக் கேட்டதாலே இந்த படுகொலைச் சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது.

    கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் என அனைத்து வகையிலான குற்றச் சம்பவங்களில் கைதாகும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தராததும், ஜாமினில் வெளியே வருவோரை கண்காணிக்கத் தவறியதுமே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அரங்கேற முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    சாராய விற்பனையை தட்டிக் கேட்பவர்கள், மணல் திருட்டை தடுத்து நிறுத்துவோர், மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படும் அளவிற்கான பதட்டமான சூழலை வாடிக்கையாக்கிய திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே, இளைஞர்களை படுகொலை செய்த சாராய வியாபாரிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தருவதோடு, இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களை இனியாவது தொடர்ந்து கண்காணித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன். 

    • நமது ஆட்சி அமைந்ததும் அனைத்து பகுதிகளுக்கும் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் தேசப்பற்று மிக்க தலைவர்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சித்தலைவர் ஆணையை ஏற்று இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.

    எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியபோது, 3 நாட்கள் யாரும் தெருவில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். வாழ்க என்று எழுதினால்தான் நடமாட முடியும் என்ற நிலை நிலவியது.

    எம்.ஜி.ஆரின் கட்டளையை ஏற்று நாங்கள் 14 பேர் இணைந்து கோவையில் பொதுக்குழுவை, அவர் நினைத்தபடி வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். அதற்கான செலவுத்தொகையை அவர் கொடுத்தபோது, நீங்கள் எங்கள் தெய்வம், உயிர்மூச்சு என்று சொல்லி அதனை வாங்க மறுத்து விட்டோம்.

    ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும்? என்ப தற்கு எம்.ஜி.ஆர். எடுத்துக் காட்டாக விளங்கினார். மக்களைப் பற்றி சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தினார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு நீர் வழங்க திட்டம் தீட்ட வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    நமது ஆட்சி அமைந்ததும் அனைத்து பகுதிகளுக்கும் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 1980-ல் ஆட்சி கலைப்பின்போது, நடந்த மக்களவைத் தேர்தலில் கோபி மற்றும் சிவகாசியில் மட்டும் அ.தி.மு.க. வென்றது. அதன் பின் வந்த சட்டசபை தேர்தலில், நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டு மக்களை எம்.ஜி.ஆர். சந்தித்தார்.

    அதிக தொகுதிகளில் மக்கள் வெற்றியைக் கொடுத்தனர். மக்களவைத் தேர்தல் முடிவு வேறு, சட்டசபைத் தேர்தல் முடிவு என்று அவர் வேறுபடுத்திக் காட்டினார். 1984-ல் அமெரிக்காவில் இருந்தவாறு தேர்தலில் வென்று முதல்வராக தமிழகம் திரும்பினார். அதன்பின் இந்த இயக்கத்தை ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்தினார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் தேசப்பற்று மிக்க தலைவர்கள். சீனா போரின்போது நிதியை வாரி வழங்கினர். அந்த இரு தெய்வங்களின் தேசப்பற்று குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அவர்களுக்காகத்தான், அடையாளம் தெரியாத எங்களுக்கும் நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள்.

    இன்றும் அந்த வெற்றி நிலைத்து நிற்கிறது. எம்.ஜி.ஆர். பெயரைச் சொன்னாலே வாக்களிக்க வாக்காளர்கள் தயாராக உள்ளனர். நான் எனது 25-வது வயதில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிடும் பொழுது நான் யார் என்று கூட உங்களுக்கு தெரியாது.

    ஆனால் எம்.ஜி.ஆர். என்ற ஒரு பெயரைச் சொல்லி வெற்றி பெற செய்தீர்கள். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் கப்பலாக இருந்து கட்சியை வழிநடத்திச் சென்றவர் ஜெயலலிதா. அவர் மதுரையில் நடத்த பொதுக்கூட்டத்தில் செங்கோலை ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டு எனக்கு பின் கட்சியை நீ தான் வழி நடத்த வேண்டும் என கூறினார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இரண்டு பேருமே இரு பெரும் தெய்வங்கள். அந்த தெய்வங்கள் இல்லை என்றால் நாங்கள் இந்த மேடையில் இருக்க முடியாது. நீங்களும் எங்களுக்கு வாக்களித்திருக்க மாட்டீர்கள். தெய்வங்கள் ஆன பின்னும் கட்டளை இடுகின்றனர்.

    நீங்கள் எங்களுக்கு வாக்கு அளிக்கின்றீர்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் தொண்டனாக இருந்து பாடுபட்டு அ.தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க அயராது உழைப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.

    தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 990-க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,890-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.63,120-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920

    13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    11-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

    10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-02-2025- ஒரு கிராம் ரூ.108

    13-02-2025- ஒரு கிராம் ரூ.107

    12-02-2025- ஒரு கிராம் ரூ.107

    11-02-2025- ஒரு கிராம் ரூ.107

    10-02-2025- ஒரு கிராம் ரூ.107

    • சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே?
    • தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?

    துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது.

    தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார். 

    • ஓடும் ரெயிலில் தொங்கிக் கொண்டு செல்ஃபி எடுப்பது குறித்த ஆபத்து பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
    • தண்டவாளத்தில் கற்கள், மரக்கட்டைகளை வைத்தல் போன்ற விஷம செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

    சென்னை:

    சென்னை திருவொற்றியூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தண்டவாளத்தில் கற்களை வைத்தது 15 வயது சிறுவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சிறுவனை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போ, சிறுவனுக்கு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்த மாஜிஸ்ட்ரேட், பெற்றோர் குழந்தைகளை கவனிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

    இந்த நிலையில், சென்னை கிண்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரெயில்வே பாதுகாப்புப் படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மின்சார ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்வது, ஓடும் ரெயிலில் தொங்கிக் கொண்டு செல்ஃபி எடுப்பது குறித்த ஆபத்து பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    மேலும், தண்டவாளத்தில் கற்கள், மரக்கட்டைகளை வைத்தல் போன்ற விஷம செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. அதேபோல கவனமாகத் தண்டவாளத்தைக் கடக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

    ×