என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கல்லூரி மாணவர் மற்றும் ஒரு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகில் உள்ள முட்டம் என்ற கிராமத்தில் கள்ள சாராய வியாபாரத்தை தடுத்த கல்லூரி மாணவர் மற்றும் ஒரு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழக அரசு இனியும் கால தாமதம் செய்யாமல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும் ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்த தமிழக அரசு, தற்பொழுது கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்து கொலையானவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பெருந்துறை போலீசார் அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
- சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
ஈரோடு, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், பனியன் கம்பெனிகள் உள்ளன. இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கட்டிட வேலை, டெய்லர் வேலை, கூலி வேலை, செங்கல் சூளை உட்பட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுடன் வங்காளதேசத்தை சேர்ந்த சிலரும் சட்ட விரோதமாக குடியேறி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தன. வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக மேற்கு வங்காளத்திற்குள் குடியேறி அங்கிருந்து ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் குடியேறி உள்ளனர். இதையடுத்து சட்ட விரோதமாக குடியேறிய வங்காளதேசத்தை சேர்ந்தவர்களை ஈரோடு, திருப்பூர் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் இவர்கள் உரிய அனுமதி, உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் பெருந்துறை, பணிக்கம்பாளையம், மேட்டுக்கடை போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் குடியிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பெருந்துறை போலீசார் நேற்று அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் வங்காளதேசத்தை சேர்ந்த பைஜித் (25), மாமொன் (43), மோனீர் (50), சுமொன் (25), ரீதாய் (23), அனுசூல் மெஸ்தர் (37), அசாத் (50) தீப்போன் (25), ஒசேன் (27), ரோபி (26) இவர்களுடன் மேலும் 3 ஆண்களும், 2 பெண்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் வாடகைக்கு குடியிருந்து கட்டில், சோபா தயாரிக்கும் கம்பெனியில் டெய்லர் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. மேலும் சிலர் கட்டிட வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
பெருந்துறை, பணிக்கம்பாளையம், வாய்க்கால் மேடு போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் சட்ட விரோதமாக தங்கி இருப்பது தெரிய வந்தது.
மேலும் இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை.
- தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?
சென்னை:
எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை.
ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?
இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா?
இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில் சிறிதாவது செலுத்துமாறு ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
- மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பல்வேறு அரிய வகை விலங்குகள், பறவைகள் ஆகியவை வசித்து வருகின்றன.
- கால்களில் குறியீடு பொறிக்கப்பட்ட வளையத்துடன் வலசை வரும், குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பல்வேறு அரிய வகை விலங்குகள், பறவைகள் ஆகியவை வசித்து வருகின்றன. உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவை இனங்களும் வலசையாக இடம்பெயர்ந்து இங்குள்ள வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆண்டுதோறும் கோடை காலம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக, விதவிதமான குருவிகள், வண்ணப் பறவைகள் ஆகியவை வலசை வரும். அதிலும் குறிப்பாக கால்களில் குறியீடு பொறிக்கப்பட்ட வளையத்துடன் வலசை வரும், குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தக்குருவிகள், குஞ்சுகளாக இருக்கும் பொழுதே, பறவை ஆய்வாளர்களால், குறியீடுகள் பொறிக்கப்பட்ட வளையத்தை கால்களில் அணிவித்து, பறக்க விட்டு விடுவதாகவும், இயற்கையில் அவைகள் வலசை வரும் இடங்களை, அதன் வாழும் காலத்திற்குப் பின்னர் இக்குறியீடுகளைக் கொண்டு அவற்றின் வலசை பாதைகளை அறிந்து கொள்ள உதவுவதாகவும், பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கொடைக்கானலில் தற்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு மற்றும் ரம்யமான குளிர் நிலவுவதால் பல்வேறு இடங்களில் பறவைகளின் ரீங்கார சத்தங்களும் கேட்டு வருகிறது. இவை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
- மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க இந்த குழுவின் கூட்டம் நடை பெறுவது வழக்கம்.
- எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோர் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
சென்னை:
தமிழக முதலமைச்சரை தலைவராக கொண்ட திஷா எனப்படும் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அவ்வப்போது கூட்டப்படும்.
மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க இந்த குழுவின் கூட்டம் நடை பெறுவது வழக்கம். இந்த குழுவின் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் மாநில அளவிலான 4-வது கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் திட்டப் பணிகள் பற்றி விளக்க உரையாற்றப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோர் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இந்த கூட்டத்தில் முதலச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை நிகழ்த்தினார்.
சமீபத்தில் கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் பங்கேற்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவில் செங்கோட்டையன் உறுப்பினராக உள்ளதால் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக கூறப்பட்டது.
இதற்கு முன்பு நடந்த கூட்டங்களிலும் அவர் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- பிரியாணி திருவிழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புக்கட்டி விரதம் மேற்கொள்வார்கள்.
- பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முனியாண்டி சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும், மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் நடத்தி வரும் பிரியாணி திருவிழா அந்த பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். அதில் ஒரு சமுதாயத்தினர் சார்பில் 90-வது ஆண்டாக நடைபெறும் இந்த பிரியாணி திருவிழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புக்கட்டி விரதம் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலை மாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பெண் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
அங்கு சுவாமிக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் வெளியூர் மக்கள் உட்டபட ஏராளமானோர் திரண்டனர்.
விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2,500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார் செய்து இன்று அதிகாலை கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அண்டாக்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த பிரியாணி சுடச்சுட பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் விடிய, விடிய காத்திருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர். இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஓட்டல்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும்.
பிரியாணி திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் கூறுகையில், முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியியிடப்பட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி, மத பேத மில்லாமல் அனைவருக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது.
இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் விழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் இந்த விழாவில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும்.
திருவிழாவில் பங்கேற்பதற்காக வருகை தரும் இளம்பெண்கள் கைகளில் பூத்தட்டுகளை ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வருவார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூரில் இருந்து கலந்துகொள்ள வருகை தரும் இளைஞர்கள் தங்கள் மனம் கவர்ந்த பெண்களை தேர்வு செய்து தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பார்கள்.
அதன்பேரில் அவர்களும் அந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்களை அழைத்து கோவில் வளாகத்திலேயே பேசி திருமணத்தை முடிவு செய்யும் பழக்கம் காலம் காலமாக நடந்து வருகிறது. முனியாண்டி சுவாமியின் சன்னதியில் வைத்து நிச்சயிக்கப்படும் இந்த திருமணங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது என்றனர்.
- தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி, பழங்களின் ரகங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
- பூ, பழ நாற்றுகள், இடுபொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு துறைகள் சார்பில் ஸ்டால்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
வடவள்ளி:
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் 7-வது மலர் கண்காட்சி கடந்த 8-ந்தேதி தொடங்கியது.
8-ந்தேதி தொடங்கிய மலர் கண்காட்சி கடந்த 12-ந்தேதி வரை 5 நாட்கள் நடந்தது. இந்த கண்காட்சியில் மலர்களால் ஆன முயல், யானை, சரஸ்வதி, அன்னப்பறவைகள் உள்ளிட்ட உருவங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து பார்வையாளர்களையும் கவர்ந்தது.
தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி, பழங்களின் ரகங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
பூ, பழ நாற்றுகள், இடுபொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு துறைகள் சார்பில் ஸ்டால்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட மொத்தம் 36 ஆயிரத்து 300 பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
இது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூறியதாவது:-
வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு நடந்த மலர் கண்காட்சியை 36 ஆயிரத்து 300 பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். மலர் கண்காட்சி நிறைவடைந்தாலும் பெரும்பாலான அலங்காரங்களை இந்த வார இறுதி வரை காட்சிக்கு வைத்திருக்கிறோம்.
தொடர்ந்து பராமரிக்க இயலாத உருவ அலங்காரங்கள் மட்டும் இருக்காது. தோரணங்கள் உள்ளிட்ட இதர அலங்காரங்கள், மலர் அணிவகுப்புகளை மேலும் ஓரிரு நாட்களுக்கு கண்டு ரசிக்கலாம். ஸ்டால்கள், தோட்டக்கலை கண்காட்சிகள் இருக்காது. இதற்கு வழக்கமான கட்டணமான பெரியவர்களுக்கு ரூ.50, குழந்தைகளுக்கு ரூ.30 என்ற கட்டணமே வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பிரேத பரிசோதனை முடிவில் முத்துக்குமார் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்ட தடம் இருப்பது தெரிய வந்தது.
- மரியா ஆரோக்கிய செல்வியை சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கைது செய்து சிறையில் அடைத்தார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்வி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கடந்த 5-ந்தேதி முத்துக்குமார் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென மயக்கம் அடைந்து விட்டார் என்று கூறி 108 ஆம்புலன்சில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முத்துக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் அவர் இறப்பிற்கான காரணம் என்ன என்று அறிவதற்காக முத்துக்குமார் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில் முத்துக்குமார் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்ட தடம் இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் அவர் மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது. இதனிடையே நொச்சிகுளம் கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்த மரியா ஆரோக்கிய செல்வி தனது கணவர் மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை என்றும், தான் கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரியவரவே, மரியா ஆரோக்கிய செல்வியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து எனக்கும், எனது குழந்தைகளுக்கும் தொந்தரவு கொடுத்ததோடு, அடித்து துன்புறுத்தி வந்தார்.
இதனால் அவரது கொடுமையை தாங்க முடியாமல் கடந்த 5-ந்தேதி இரவில் எனது கணவர் தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்தை நெரித்தேன். அதில் அவர் மயங்கிவிட்டார். அதன் பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் மஞ்சள் காமாலையில் எனது கணவர் மயங்கி விட்டார் எனக் கூறி நம்ப வைத்து அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தேன் என வாக்குமூலம் அளித்தார்.
அதனை தொடர்ந்து மரியா ஆரோக்கிய செல்வியை சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கைது செய்து சிறையில் அடைத்தார்.
- நல்லவாடு கிராமத்தில் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
- புதுவையில் உள்ள 18 மீனவ பஞ்சாயத்து கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.
1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், உரிய விசாரணை முடியும் வரை பள்ளியை நிரந்தரமாக மூடக்கோரி புதுவையில் உள்ள 18 மீனவ பஞ்சாயத்து கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.
அவர்கள் நல்லவாடு கிராமத்தில் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் செய்தியாளர்கள் மற்றும் பிறர் யாரையும் அனுமதிக்க வில்லை. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து போராட்டம் தீவிரமடையும் என தெரிகிறது.
- முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது.
- சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த முனுசாமி மகன்கள் மூவேந்தன் (வயது 29), தங்கதுரை (28) மற்றும் ராதா மகன் ராஜ்குமார்(34). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுப்பட்டனர். இதனை தட்டி கேட்பவர்களை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதன் காரணமாக 3 பேரின் சாராய விற்பனை கொடி கட்டி பறந்தது.
இதனிடையே கடந்த 11-ந்தேதி மதுவிலக்கு போலீசார் முட்டம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்ததோடு சாராய வியாபாரி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார் ஜாமினில் வெளியே வந்தார்.
அதன் பிறகும் சாராய விற்பனையை அவர்கள் நிறுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகியோர் திருட்டுதனமாக முட்டம் தெருவில் சாராயம் விற்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவன் ஏன் சாராயம் விற்பனை செய்கிறீர்கள் ? என தட்டி கேட்டார். இதில் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரும் ஆத்திரம் அடைந்து சிறுவனை தாக்கினர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு அதே கிராமத்தை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ் (25), உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் என்ஜீனியரிங் மாணவர் ஹரிசக்தி (20) ஆகிய 2 பேரும் உடனே வந்து சிறுவனை தாக்கியதற்காகவும், உடனே சாராய விற்பனையை நிறுத்த வேண்டும் என்றும் தட்டி கேட்டனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை சேர்ந்து கத்தியால் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரை சரமாரியாக பல இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடினர். இந்த கொலை வெறி தாக்குதலில் பலத்த காயமடைந்த ஹரிஷ், ஹரிசக்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள், பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து தப்பி ஓடிய தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகிய 3 பேரையும் உடனடியாக பெரம்பூர் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆஸ்பத்திரியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த இரட்டை கொலை சம்பவத்தில் 2 பெண் சாராய வியாபாரிகளுக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை செய்ய வலியுறுத்தி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
- பிரபாகரனை சந்தித்தது குறித்து யாருக்கு நிரூபிக்க வேண்டி இருக்கு. எனக்கு அவசியம் இல்லை.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதனால் சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
இதனிடையே, 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான புகைப்படம் அது. 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்.. பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் போலி என்கிறார்கள்.. அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள். பிரபாகரனை சந்தித்தது குறித்து யாருக்கு நிரூபிக்க வேண்டி இருக்கு. எனக்கு அவசியம் இல்லை என்று சீமான் கூறியிருந்தார்.
இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில், பிரபாகரன் படத்தை அரசியல் ஆதாயத்திற்காக சீமான் பயன்படுத்தி வருகிறார் என்றும் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்கக்கோரியும் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
- நாங்கள் வேண்டுமானால் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்.
'உங்களில் ஒருவன் பதில்கள்' மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அவருக்கு கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!!
தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி! என்று தெரிவித்துள்ளார்.






