என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தற்போது கோயம்பேடு சந்தைக்கு அதிகளவில் தக்காளி விற்பனைக்கு குவிந்து வருகிறது.
- வரத்து அதிகரிப்பால் பச்சை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
போரூர்:
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனையில் ரகத்தை பொருத்து ஒரு கிலோ தக்காளி ரூ..8 முதல் ரூ.11 வரை விற்பனை ஆகி வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தற்போது கோயம்பேடு சந்தைக்கு அதிகளவில் தக்காளி விற்பனைக்கு குவிந்து வருகிறது. வழக்கமாக 50 முதல் 55 லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு வரும் தக்காளி, கடந்த சில நாட்களாக 70-க்கும் மேற்பட்ட லாரிகளாக அதிகரித்து உள்ளதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து ள்ளனர். இதேபோல் வரத்து அதிகரிப்பால் பச்சை காய்கறிகளின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பீன்ஸ், அவரைக்காய், கோவக்காய், பீர்க்கங்காய், பாகற்காய் ஆகிய காய்கறிகள் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.30-க்கும், உஜாலா கத்தரிக்காய், கேரட், பீட்ரூட், வெண்டைக்காய் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காய்கறி மொத்த விற்பனை விலை கிலோவில் வருமாறு:- நாசிக் வெங்காயம் - ரூ.40, சின்ன வெங்காயம் - ரூ.50 முதல் ரூ.60 வரை, உஜாலா கத்தரிக்காய் - ரூ.40, ஊட்டி கேரட் - ரூ.40, ஊட்டி பீட்ரூட் - ரூ.40, பீன்ஸ் - ரூ.30, அவரைக்காய் - ரூ.30, வெண்டைக்காய் - ரூ.40, பாகற்காய் - ரூ.30, பன்னீர் பாகற்காய் - ரூ.45, பீர்க்க ங்காய் - ரூ.30, கோவக்காய் - ரூ.30, முள்ளங்கி - ரூ.20, சவ்சவ் - ரூ.10, சுரக்காய் - ரூ.10, முட்டை கோஸ் - ரூ.10, முருங்கைக்காய் - ரூ.80, வெள்ளரிக்காய் - ரூ.15, கொத்தவரங்காய் - ரூ.40, பச்சை மிளகாய் - ரூ.25, காலி பிளவர் ஒன்று - ரூ.10 இஞ்சி - ரூ.40.
- தமிழக அரசு தொல்லியல்துறை சார்பில் அப்பகுதியில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது.
- கொங்கல்நகரம் உட்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி ஜூன் 2024ல் பணிகள் தொடங்கியது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை கொங்கல்நகரம் பகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த பல்வேறு பொருட்கள் மேற்பரப்பு ஆய்வில் கண்டறியப்பட்டன. இதையடுத்து தமிழக அரசு தொல்லியல்துறை சார்பில் அப்பகுதியில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது.
தமிழகம் முழுவதும் கொங்கல்நகரம் உட்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி ஜூன் 2024ல் பணிகள் தொடங்கியது.
முதற்கட்டமாக கொங்கல்நகரம் அருகிலுள்ள சோ.அம்மாபட்டி பகுதியில் பழங்காலத்தை சேர்ந்த வாழ்விட பகுதி தேர்வு செய்யப்பட்டு அகழாய்வு செய்ததில் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், காதணி மற்றும் இதர அணிகலன்கள் கண்டறிய ப்பட்டன.
நவம்பரில் வடகிழக்கு பருவமழை துவங்கியதும், தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது 2-ம் கட்ட பணிகளை தொல்லியல் துறையினர் தொடங்கி உள்ளனர்.
இப்பகுதியில் கிடைக்கும் தொல்பொருட்களை கொண்டு உடுமலையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் உள்ளிட்ட அமைப்பினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
- சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் 31 பேர் கமிட்டியில் இடம் பெற வேண்டும்.
- கமிட்டிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் அடையாள அட்டைகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த கிராமங்கள் தோறும் காங்கிரஸ் கிராம கமிட்டி அமைக்கப்படுகிறது.
மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நேரில் சென்று கிராமகமிட்டிகளை அமைத்து வருகிறார்கள். ஊராட்சி, வார்டுகள், கிராமங்களில் குறைந்த பட்சம் 10 பேர் வீதம் இடம் பெற வேண்டும். நகராட்சி, மெயின் கமிட்டியில் 15 பேர், பேரூராட்சியில் 10 பேர் வீதம் இடம் பெற வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் 31 பேர் கமிட்டியில் இடம் பெற வேண்டும். இந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுமார் 60 சதவீத கமிட்டிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
வடசென்னை மேற்கு மாவட்டத்தில் திரு.வி.க.நகர், பெரம்பூர், கொளத்தூர் தொகுதிகளில் கமிட்டிகள் அமைக்கப்பட்டு அதற்கான பட்டியலை மாவட்ட தலைவர் டில்லிபாபு, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வழங்கினார். அதே போல் மயிலாப்பூர் தொகுதிக்கான பட்டியலை அந்த தொகுதி பொறுப்பாளர்கள் மயிலை அசோக், மீரா ஆகியோர் வழங்கினார்கள்.
கமிட்டிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் அடையாள அட்டைகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.
பல்லாவரம் பகுதியில் செல்வப்பெருந்தகை இன்று வழங்கினார்.
இன்று மாலையில் நாங்குனேரி தொகுதியில் உள்ள அரியாபுரம் பகுதியில் வழங்க உள்ளதாகவும் முதற்கட்டமாக வழங்குவதற்கு ஒரு லட்சத்து 27 ஆயிரம் அடையாள அட்டைகள் தயாராக இருப்பதாகவும் செல்வப்பெருந்தகை கூறினார்.
- தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு, தோ்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
- தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு, தோ்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி வாய்ந்த நபா்களைத் தோ்வு செய்ய யுஜிசி நெட் தோ்வு நடத்துகிறது. அதே போல் மாநிலங்களால் செட் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் செட் தோ்வை சுழற்சி முறையில் மாநில பல்கலைக்கழகங்கள் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் 2024 முதல் 3 ஆண்டுகளுக்கு செட் தோ்வை நடத்த திருநெல்வேலி மனோன்மணீயம் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தோ்வுக்கு முன்னதாக தொழில்நுட்பக் கோளாறு காரணத்தால் தோ்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியா் தோ்வு வாரியம் செட் தோ்வை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2024-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான தகுதித்தோ்வுக்கு (செட்) திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டன.
இந்நிலையில், செட் தகுதித்தோ்வு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று உயா்கல்வித்துறை கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி அரசாணை வெளியிட்டது. அதன்படி, யுஜிசி வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி செட் தகுதித்தோ்வு மாா்ச் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் கணினி வழியில் நடைபெறும்.
இத்தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு, தோ்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதனை தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதிச் சீட்டு விண்ணப்பதாரா்களுக்கு தனியாக அனுப்பப்படாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பூக்களை எடுத்துக் கொண்டு கடையில் கொடுக்க சென்றார்.
- மோட்டார் சைக்கிள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் வாசலில் பூக்கடை நடத்தி வருபவர் கண்ணன். இவரது கடையில் சரவணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து பூக்கடைக்கு தேவையான பூக்களை வாங்கிக் கொண்டு டவுனுக்கு சென்றார். பின்னர் நெல்லையப்பர் கோவில் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பூக்களை எடுத்துக் கொண்டு கடையில் கொடுக்க சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் பார்த்து நெல்லை மாநகராட்சி வளாகத்தில் உள்ள டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்தது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு தான் தி.மு.க.வில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் ஏர் ஷோ கூட நடத்த தெரியாத முதலமைச்சர் தான் உள்ளார். ஆனால் அவர் மணிப்பூர் பற்றி பேசுகிறார்.
கோவை:
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.கட்சியினர், தி.மு.க.வினர் காட்டும் பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு யாருடைய டப்பிங்கும் தேவையில்லை.
உதயநிதி ஸ்டாலினுக்கு சந்தானம் டப்பிங் பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் டப்பிங் தேவைப்படுகிறது. முதலமைச்சருக்கு டப்பிங் செய்ய அ.தி.மு.க.வில் இருந்து இம்போர்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லியில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. வளர்ந்து கொண்டு இருக்கிறது.
2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை விட, 2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 7 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அது 20 சதவீதத்திற்கு கீழே சென்று விடும்.
அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு தான் தி.மு.க.வில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை அ.தி.மு.கவில் இருந்து தி.மு.க.விற்கு வந்த 13 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் கோவில்களுக்கு தானம் வழங்ககூடிய பசுக்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கத்திற்கும் உரிய கணக்கு இல்லை. தமிழ்நாட்டில் உதவாக்கரை துறையாக அறநிலையத்துறை திகழ்ந்து கொண்டிருக்கிறது.
பெங்களூருவில் ஏர் ஷோ நடத்தினார்கள். மத்திய அரசின் பார்வையில் அது நடந்தாலும் அவர்கள் சிறப்பாக நடத்தினார்கள். ஆனால் சென்னையில் ஏர் ஷோ கூட நடத்த தெரியாத முதலமைச்சர் தான் உள்ளார். ஆனால் அவர் மணிப்பூர் பற்றி பேசுகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆசிரியர் ஒருவரின் மகன் திருமண விழா கடந்த 1-ந் தேதி நடந்தது.
- ஆசிரியர் உசேனை பிடித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 15 வயது மாணவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மகன் திருமண விழா கடந்த 1-ந் தேதி நடந்தது. இந்த திருமணத்திற்கு அந்த மாணவன் இரவில் சென்று உள்ளான்.
அப்போது அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள உசேன் (வயது 42) என்பவர் திருமண மண்டபத்தில் உள்ள கழிப்பறையில் வைத்து அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தான். அவர் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், யாரிடமும் நடந்த சம்பவம் குறித்து கூற வேண்டாம் எனவும் கூறியதாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த மாணவன் தனது பெற்றோரிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தான். அவர்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர்.
இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவனை சக மாணவர்கள் சிலர் கேலி,கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட மாணவன் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் மாணவனை காப்பாற்றினர். இதனால் பள்ளி முன்பு அப்பகுதி பொதுமக்கள் நேற்று திரண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று ஆசிரியர் உசேனை பிடித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இரவு ஆசிரியர் உசேன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் மாணவன் மற்றும் ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே கைதான ஆசிரியர் உசேனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறும் போது, 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து விசாரணை நடத்தி இது போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கிருஷ்ணகிரி அருகே மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் வந்து சேர்ந்தால் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்றே அறிவுறுத்தியுள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமி இன்னும் மனம் இறங்காமலேயே இருந்து வருகிறார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் உள்கட்சி மோதலால் அ.தி.மு.க. தவித்து வருகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி விட்டு கட்சியின் தலைமை பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க.வில் ஆள் ஆளுக்கு கருத்துக்களை கூறி வருகிறார்கள். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்ததும் அடுத்தடுத்து அவர் தெரிவித்த கருத்துக்களும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.
செங்கோட்டையனின் கருத்துக்கு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் புதிய பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனை மையமாக வைத்து செங்கோட்டையன் தலைமையில் புதிய அணி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் சேர தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களோடு அ.தி.மு.க.வில் மீண்டும் சேருவதற்கு வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இன்னும் 6 மாதம் பொறுமையோடு காத்திருந்தால் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இப்படி ஓ.பி.எஸ்.சை சேர்க்கும் விவகாரம் அ.தி.மு.க.வில் மீண்டும் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் இதுபற்றி அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் சேர முன் வந்தால் அவர்களை நிச்சயம் வரவேற்க வேண்டும் என்பதில் இரண்டாம் கட்ட தலைவர்கள் உறுதியுடனேயே உள்ளனர். எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் வந்து சேர்ந்தால் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்றே அறிவுறுத்தியுள்ளார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமி இன்னும் மனம் இறங்காமலேயே இருந்து வருகிறார்.
ஏனென்றால் ஓ.பி.எஸ்.சின் கடந்த கால நடவடிக்கைகள் அப்படி இருந்து உள்ளன. அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது முதல் பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டது வரை எதை மறந்து விட்டு ஓ.பி.எஸ்.சை கட்சிக்குள் சேர்த்துக் கொள்வது? என்பதே எடப்பாடி பழனிசாமியின் கேள்வியாக இருந்து வருகிறது.
இருப்பினும் அவரது மனதை மாற்றி ஓ.பி.எஸ்.சை மீண்டும் கட்சியில் சேர்த்து உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்கிற கருத்து அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய தலைவர்களின் விருப்பமாகவே இருந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக உள்ள முன்னணி நிர்வாகிகள் இதுபற்றி அவரிடம் தொடர்ந்து எடுத்துக் கூறியுள்ளனர். இதற்கு பதில் அளித்த அவர், "ஓ.பி.எஸ்.சை சேர்ப்பது பற்றியெல்லாம் தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறி அந்த பேச்சை அப்படியே முடித்துக் கொண்டுள்ளார்.
இருப்பினும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நம்மால் மீண்டும் வெற்றி பெற முடியும் என்பதையும் இரண்டாம் கட்ட தலைவர்கள் அ.தி.மு.க. தலைமையிடம் எடுத்து கூறியுள்ளனர். எனவே தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் போது ஓ.பி.எஸ். உள்ளிட்ட பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கான இறுதி முடிவை எடப்பாடி பழனிசாமியே எடுப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக பெரிதாக யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும் அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.
- கல்லூரி மாணவர் மற்றும் ஒரு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகில் உள்ள முட்டம் என்ற கிராமத்தில் கள்ள சாராய வியாபாரத்தை தடுத்த கல்லூரி மாணவர் மற்றும் ஒரு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழக அரசு இனியும் கால தாமதம் செய்யாமல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும் ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்த தமிழக அரசு, தற்பொழுது கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்து கொலையானவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பெருந்துறை போலீசார் அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
- சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
ஈரோடு, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், பனியன் கம்பெனிகள் உள்ளன. இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கட்டிட வேலை, டெய்லர் வேலை, கூலி வேலை, செங்கல் சூளை உட்பட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுடன் வங்காளதேசத்தை சேர்ந்த சிலரும் சட்ட விரோதமாக குடியேறி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தன. வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக மேற்கு வங்காளத்திற்குள் குடியேறி அங்கிருந்து ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் குடியேறி உள்ளனர். இதையடுத்து சட்ட விரோதமாக குடியேறிய வங்காளதேசத்தை சேர்ந்தவர்களை ஈரோடு, திருப்பூர் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் இவர்கள் உரிய அனுமதி, உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் பெருந்துறை, பணிக்கம்பாளையம், மேட்டுக்கடை போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் குடியிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பெருந்துறை போலீசார் நேற்று அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் வங்காளதேசத்தை சேர்ந்த பைஜித் (25), மாமொன் (43), மோனீர் (50), சுமொன் (25), ரீதாய் (23), அனுசூல் மெஸ்தர் (37), அசாத் (50) தீப்போன் (25), ஒசேன் (27), ரோபி (26) இவர்களுடன் மேலும் 3 ஆண்களும், 2 பெண்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் வாடகைக்கு குடியிருந்து கட்டில், சோபா தயாரிக்கும் கம்பெனியில் டெய்லர் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. மேலும் சிலர் கட்டிட வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
பெருந்துறை, பணிக்கம்பாளையம், வாய்க்கால் மேடு போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் சட்ட விரோதமாக தங்கி இருப்பது தெரிய வந்தது.
மேலும் இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை.
- தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?
சென்னை:
எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை.
ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?
இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா?
இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில் சிறிதாவது செலுத்துமாறு ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
- மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பல்வேறு அரிய வகை விலங்குகள், பறவைகள் ஆகியவை வசித்து வருகின்றன.
- கால்களில் குறியீடு பொறிக்கப்பட்ட வளையத்துடன் வலசை வரும், குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பல்வேறு அரிய வகை விலங்குகள், பறவைகள் ஆகியவை வசித்து வருகின்றன. உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவை இனங்களும் வலசையாக இடம்பெயர்ந்து இங்குள்ள வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆண்டுதோறும் கோடை காலம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக, விதவிதமான குருவிகள், வண்ணப் பறவைகள் ஆகியவை வலசை வரும். அதிலும் குறிப்பாக கால்களில் குறியீடு பொறிக்கப்பட்ட வளையத்துடன் வலசை வரும், குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தக்குருவிகள், குஞ்சுகளாக இருக்கும் பொழுதே, பறவை ஆய்வாளர்களால், குறியீடுகள் பொறிக்கப்பட்ட வளையத்தை கால்களில் அணிவித்து, பறக்க விட்டு விடுவதாகவும், இயற்கையில் அவைகள் வலசை வரும் இடங்களை, அதன் வாழும் காலத்திற்குப் பின்னர் இக்குறியீடுகளைக் கொண்டு அவற்றின் வலசை பாதைகளை அறிந்து கொள்ள உதவுவதாகவும், பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கொடைக்கானலில் தற்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு மற்றும் ரம்யமான குளிர் நிலவுவதால் பல்வேறு இடங்களில் பறவைகளின் ரீங்கார சத்தங்களும் கேட்டு வருகிறது. இவை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.






