என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெருந்துறையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 15 வங்காளதேசத்தினர்- போலீசார் விசாரணை
    X

    பெருந்துறையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 15 வங்காளதேசத்தினர்- போலீசார் விசாரணை

    • பெருந்துறை போலீசார் அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
    • சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், பனியன் கம்பெனிகள் உள்ளன. இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கட்டிட வேலை, டெய்லர் வேலை, கூலி வேலை, செங்கல் சூளை உட்பட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுடன் வங்காளதேசத்தை சேர்ந்த சிலரும் சட்ட விரோதமாக குடியேறி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தன. வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக மேற்கு வங்காளத்திற்குள் குடியேறி அங்கிருந்து ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் குடியேறி உள்ளனர். இதையடுத்து சட்ட விரோதமாக குடியேறிய வங்காளதேசத்தை சேர்ந்தவர்களை ஈரோடு, திருப்பூர் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    போலீசார் விசாரணையில் இவர்கள் உரிய அனுமதி, உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் பெருந்துறை, பணிக்கம்பாளையம், மேட்டுக்கடை போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் குடியிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பெருந்துறை போலீசார் நேற்று அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் வங்காளதேசத்தை சேர்ந்த பைஜித் (25), மாமொன் (43), மோனீர் (50), சுமொன் (25), ரீதாய் (23), அனுசூல் மெஸ்தர் (37), அசாத் (50) தீப்போன் (25), ஒசேன் (27), ரோபி (26) இவர்களுடன் மேலும் 3 ஆண்களும், 2 பெண்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் வாடகைக்கு குடியிருந்து கட்டில், சோபா தயாரிக்கும் கம்பெனியில் டெய்லர் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. மேலும் சிலர் கட்டிட வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    பெருந்துறை, பணிக்கம்பாளையம், வாய்க்கால் மேடு போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் சட்ட விரோதமாக தங்கி இருப்பது தெரிய வந்தது.

    மேலும் இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×