என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வீட்டின் மாடியில் உள்ள புகைக் கூண்டு சிலாப் கல்லை அகற்றி அதன் வழியாக வீட்டின் உள்ளே மர்மநபர்கள் புகுந்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி மலைக்கோவில் ரோடு பஜனைமடம் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 75).
விவசாயியான இவர் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வயலில் நெல் அறுவடை செய்து விற்று கிடைத்த பணம் ரூ.19 லட்சத்தை தனது வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.
நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வந்து பார்த்த போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.19 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் முனியாண்டி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்தார்.
புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன், சிவகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்மணி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் மாடியில் உள்ள புகைக் கூண்டு சிலாப் கல்லை அகற்றி அதன் வழியாக வீட்டின் உள்ளே மர்மநபர்கள் புகுந்துள்ளனர்.
அங்கு பீரோ சாவி இல்லாததால் கம்பி போன்ற பொருளைக் கொண்டு பீரோ இடது புறம் நெம்பி திருடியது தெரியவந்துள்ளது. மேலும் பணத்தை மஞ்சள் பையில் வைத்து பீரோவில் வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் பக்கத்து வீட்டின் பின்புறம் அந்த மஞ்சள் பை கிடந்ததாக கூறப்படுகிறது.
கொள்ளை போன வீட்டிற்கு இருபுறமும் சுவர்கள் உயரமாக இருப்பதால் பக்கத்து வீடுகளில் இருந்து வரமுடியாது எனவும், வீட்டின் பின்புறம் உள்ள வீட்டின் வழியாக மர்ம நபர் வந்திருக்கலாம் எனவும், வீட்டில் பணம் இருப்பது தெரிந்த வெளி நபர் அல்லது குடும்ப உறுப்பினர் யாராவது திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நேற்று மதியம் வீடு பூட்டிய நிலையில் இருந்த போது வீட்டின் உள்ளே விளக்குகள் எரிந்த நிலையில் உடைக்கும் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் வருகிற தேர்தலில் நிச்சயம் தோல்வியை தழுவுவார்.
- எடப்பாடி பழனிசாமி 2026-ல் முதலமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை கொண்டாடுவது தொடர் பாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அ.தி.மு.க. இலக்கிய அணிஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இலக்கிய அணி மாநிலசெயலாளரான முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி மற்றும் கோகுல இந்திரா, இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர்கள் இ.சி சேகர், மலர்மன்னன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து தெரு முனை பிரசாரங்களை மேற்கொண்டு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்றும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக வைகைச் செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் தி.மு.க. அரசு மீது மக்களுக்கு நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்துக் கொண்டே செல்வதால் 2026-ம் ஆண்டு நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமரும். இந்த ஆட்சி எப்பொழுது வீட்டுக்குப் போகும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆந்திர மாநிலத் தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் தோல்வியை தழுவியது போல தமிழகத்திலும் மு.க.ஸ்டாலின் வருகிற தேர்தலில் நிச்சயம் தோல்வியை தழுவுவார். அவருக்கு கடும் பின்னடைவு ஏற்படும். அ.தி.மு.க.வில் சின்ன சின்ன சலசலப்புகள் உள்ளன. இதற்கெல்லாம் அஞ்சாத இயக்கம்தான் அ.தி.மு.க. அடிக்க அடிக்க தான் பந்து மேல் எழும்பும். அறுக்க அறுக்கதான் வைரம் மின்னும். அதைப் போன்று அ.தி.மு.க.வும் வரும் காலங்களில் நிச்சயம் வேகம் எடுக்கும்.
எடப்பாடி பழனிசாமி 2026-ல் முதலமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. செம்மையுடன் செயல்பட்டு வருகிறது .
இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் சேர்வதற்கு இன்னும் ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டும் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறி இருப்பது தொடர்பாகவும் மீண்டும் ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா என்பது பற்றியும் வைகை செல்வனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
- மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கலைச்செல்வி வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கிராமத்தில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் இருந்த 40 பவுன் நகையை திருடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நடுவணந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (40) அரசு பஸ் டிரைவர். இவர் வழக்கம்போல் பணிக்கு சென்ற நிலையில் இவரது மனைவி கலைச்செல்வியும் நேற்று மாலை உடல் நிலை சரியில்லாததால் திண்டிவனம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் வீட்டை திறந்து வீட்டில் இருந்த 40 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார். இந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கலைச்செல்வி வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்பு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பீரோவில் இருந்த 40 பவுன் நகை திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவரின் ஊருக்கு நேரில் சென்று பார்த்த போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. அந்த நபரின் செல்போன் மூலமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டிவனம் அருகே பட்டப்பகலில் வீட்டில் இருந்த 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ்நாட்டில் பெருகி ஓடும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்தாத, திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
- ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கு முன்விரோதம்தான் காரணம் என்ற தமிழ்நாடு காவல்துறையின் விளக்கம் வியப்பளிக்கிறது.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் கள்ளத்தனமாகச் சாராயம் விற்றதைத் தட்டி கேட்ட ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி என்ற இளைஞர்களை ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் என்ற 3 கள்ளச்சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. பெற்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரின் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
சாராய விற்பனை குறித்துப் பல முறை புகாரளித்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கத்தவறிய காவல்துறையின் அலட்சியப்போக்கே தற்போது இரண்டு இளைஞர்களின் இன்னுயிர் பறிபோக முதன்மைக் காரணமாகும். தமிழ்நாட்டில் பெருகி ஓடும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்தாத, திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் இழைக்கும் அநீதிக்கு எதிராகவும், நாளும் நிகழ்ந்தேறும் சமூக அவலங்களுக்கு எதிராகவும் கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகிவிட்டது. அண்மையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய திருமயம் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக்கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட சுவடுகள் மறைவதற்குள், தற்போது மயிலாடுதுறையில் கள்ளத்தனமாக சாராயம் விற்றதைத் தட்டி கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்தேறியுள்ளது. திமுக ஆட்சியில் கடந்த 2023 ஆம் ஆண்டு மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அரசு அலுவலகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடுமையும் நடந்தது என்பதையும் மறந்துவிட முடியாது.
கடந்த சில நாட்களுக்கு முன் சின்னப்போரூர் அரசு மருத்துவமனையில், மருத்துவர் இல்லை என்று அன்புத்தம்பி கஞ்சா கருப்பு கூறிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததோடு, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரே 'இதற்கு மேல் பேசினால் கஞ்சா கருப்புக்குத்தான் பிரச்சனை' என்று பொதுவெளியில் மிரட்டி அச்சுறுத்தும் திமுக அரசின் எதேச்சாதிகாரப்போக்குதான், அதிகாரத்தை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்களைப் படுகொலை செய்யும் துணிவினை சமூக விரோதிகளுக்குத் தந்துள்ளது.
நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனையிலும், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கத்திலும், டாஸ்மாக் மது விற்பனையிலும்தான் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறிநிற்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை நடைபெறாத நாட்களே இல்லை என்ற அளவிற்குப் பள்ளிக்குழந்தைகள், பெண்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசுப்பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என யாருக்கும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுகிறது. சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வி எழும் அளவிற்கு திமுக ஆட்சியில் தமிழ்நாடு சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டதுதான் பேரவலம்.
ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கு முன்விரோதம்தான் காரணம் என்ற தமிழ்நாடு காவல்துறையின் விளக்கம் வியப்பளிக்கிறது. முன்விரோதம் ஏற்படக் காரணம் சாராய விற்பனைதானே? அரசிற்கு அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்று காவல்துறை நினைத்தால் குற்றத்தைத் தடுக்க முனைய வேண்டுமே தவிர, குற்றம் நடைபெற்றதற்கான காரணத்தை மறைக்க முயலக் கூடாது.
ஆகவே, திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காத கள்ளச்சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்த காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இனியாவது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் படுகொலை செய்யப்பட்டுள்ள ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 50 இலட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
- சங்கு வளையல்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஒரு பகுதியாகும்.
- இப்பகுதி மக்கள் அந்த தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியுள்ளதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"விலங்கு அரம் பொருத சங்கின் வெள் வளை" - 2441
பண்டைக் காலத்தில் அரம் போன்ற சிறு கருவிகளைக் கொண்டு சங்கினை அறுத்து அணிகலன்கள் செய்ததைக் குறிப்பிடுகிறது சீவகாந்தமணி பாடல்.
இதற்குச் சான்றாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் 360 செ.மீ ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்கு வளையல்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஒரு பகுதியாகும்.
இதுவரை இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் இரும்புப் பொருட்கள், இராசராச சோழன் காலத்துச் செப்பு காசுகள், அஞ்சனக் கோல், அகேட், சூதுபவளம், கண்ணாடி மணிகள், ரௌலட்டட் பானை ஓடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் இந்த பகுதியில் சங்கறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளதையும், இப்பகுதி மக்கள் அந்த தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியுள்ளதையும் அறிந்துகொள்ள முடிகிறது. தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மேலுமொரு சான்று கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது என்று தெரிவித்துள்ளார்.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° -4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
20-ந்தேதி மற்றும் 21-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
- பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் செல்வகுமரேசன் (வயது 38). இவர் நக்சல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் செல்வகுமரேசன் வீட்டுக்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரை, அரிவாளால் வெட்டியும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, சேரன்மகா தேவி அருகே உள்ள சங்கன்திரடு பகுதியை சேர்ந்த முப்புடாதி என்பவர் தனது கூட்டாளிகளுடன் வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வகுமரேசன் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது, வழக்கு ஒன்று தொடர்பாக முப்புடாதி மற்றும் அவரது கூட்டாளிகளை செல்வகுமரேசன் கைது செய்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் முப்புடாதி உள்பட 3 பேரும் கொடைக்கானலில் உள்ள நண்பர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையின் கீழ் இயங்கும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் முப்புடாதி, சேரன்மகா தேவியை சேர்ந்த செல்வகுமார் மற்றும் அய்யப்பன் ஆகிய 3 பேரும் தப்பிப்பதற்காக கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்துள்ளனர். இதில் முப்புடாதிக்கு முதுகு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதேபோல் அய்யப்பனுக்கு கையில் சவ்வு விலகி இறங்கியது. செல்வகுமாருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
போலீசாரிடம் சிக்கிய முப்புடாதிக்கு சென்னையில் பாலியல் பலாத்கார வழக்கும், அய்யப்பனுக்கு திருச்சியில் ரூ. 30 லட்சம் திருட்டு வழக்கிலும், செல்வகுமாருக்கு சேரன்மகாதேவியில் பெட்ரோல் பங்கில் அரிவாளை காட்டி மிரட்டியது உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும், அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும். காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொன்னேரியில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பட்டதாரி சங்க மாவட்ட தலைவர் தாஸ் தலைமையில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாக்டோ ஜியோ மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் காத்தவராயன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தங்கவேல், சந்திரசேகர், ஜெய்கர், குமார், கண்ணதாசன், சிவலிங்கம், சகாயநிர்மலா, நாயகம் உள்ளிட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாஜி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விஜயன், செயலாளர் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தொல்.திருமாவளவன் பேசுகையில், வீடுகளுக்கு அலகு தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
- மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம், இந்த அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் நாம் செயல்பட்டு வருகிறோம்.
சென்னை:
திஷா எனப்படும் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் மாநில அளவிலான 4-வது கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செய லகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் 67 திட்டங்களைக் கண்காணிக்கவும் அதனை செயல்படுத்தவும் இந்த மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தை நாம் நடத்தி வருகிறோம். திட்டங்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாக செலவிடுவது, திட்ட செயல்பாடுகளைக் கண்காணிப்பது, ஒன்றிய, மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே இணக்கமான நிலையை உருவாக்குவது, தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசினுடைய திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழிவகை செய்வது ஆகிய பணிகளை இதன் மூலமாக நாம் செய்து வருகிறோம்.
கடந்த கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் கேட்டுக் கொண்டதின்படி, தேங்காய் விவசாயிகளுக்கு மிக விரைவாக பணப்பட்டு வாடா செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொல்.திருமாவளவன் பேசுகையில், வீடுகளுக்கு அலகு தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இது தொடர்பான கருத்துரு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டிற்கான கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர்களின் கூலி ஆகியவை கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. அதனால், நான் தொடக்கத்திலேயே தெரிவித்தபடி, அலகு தொகையினை குறைந்தபட்சம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்தக் குழு மூலமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மீண்டும் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம், இந்த அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் நாம் செயல்பட்டு வருகிறோம்.
ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடிப் பயனாளிகளுக்கும் சென்று சேர்வதில் திராவிட மாடல் அரசின் பங்கை நாம் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் மாநில அரசின் பங்குத் தொகையினை காலதாமதமில்லாமல் விடுவிக்கின்றோம். ஆனால், ஒன்றிய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதனால், திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதமாகிறது. உடனடியாக, நிதியை விடுவிக்க இந்த குழு மூலமாக வலியுறுத்தப்படுமென்று உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்தில் கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் பங்கேற்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்று
உள்ளார். மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவில் செங்கோட்டையன் உறுப்பினராக உள்ளதால் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக கூறப்பட்டது. இதற்கு முன்பு நடந்த கூட்டங்களிலும் அவர் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றனர்.
- சுற்றுலா பயணிகள் காலையில் கடுங்குளிரையும், மதியம் சுடும் வெயிலையும் அனுபவித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக காலையில் பனி மூட்டத்துடன் மழை பெய்வது போன்று பனித்துளி பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றனர்.
மதியம் ஆனதும் வழக்கம் போல் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் காலையில் கடுங்குளிரையும், மதியம் சுடும் வெயிலையும் அனுபவித்து வருகின்றனர்.
இந்த காலநிலை மாற்றத்தால் மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு செல்ல சிரமமாக உள்ளதாகவும், மீன்களின் வரத்தும் கடலில் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
- ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தற்போது கோயம்பேடு சந்தைக்கு அதிகளவில் தக்காளி விற்பனைக்கு குவிந்து வருகிறது.
- வரத்து அதிகரிப்பால் பச்சை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
போரூர்:
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனையில் ரகத்தை பொருத்து ஒரு கிலோ தக்காளி ரூ..8 முதல் ரூ.11 வரை விற்பனை ஆகி வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தற்போது கோயம்பேடு சந்தைக்கு அதிகளவில் தக்காளி விற்பனைக்கு குவிந்து வருகிறது. வழக்கமாக 50 முதல் 55 லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு வரும் தக்காளி, கடந்த சில நாட்களாக 70-க்கும் மேற்பட்ட லாரிகளாக அதிகரித்து உள்ளதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து ள்ளனர். இதேபோல் வரத்து அதிகரிப்பால் பச்சை காய்கறிகளின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பீன்ஸ், அவரைக்காய், கோவக்காய், பீர்க்கங்காய், பாகற்காய் ஆகிய காய்கறிகள் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.30-க்கும், உஜாலா கத்தரிக்காய், கேரட், பீட்ரூட், வெண்டைக்காய் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காய்கறி மொத்த விற்பனை விலை கிலோவில் வருமாறு:- நாசிக் வெங்காயம் - ரூ.40, சின்ன வெங்காயம் - ரூ.50 முதல் ரூ.60 வரை, உஜாலா கத்தரிக்காய் - ரூ.40, ஊட்டி கேரட் - ரூ.40, ஊட்டி பீட்ரூட் - ரூ.40, பீன்ஸ் - ரூ.30, அவரைக்காய் - ரூ.30, வெண்டைக்காய் - ரூ.40, பாகற்காய் - ரூ.30, பன்னீர் பாகற்காய் - ரூ.45, பீர்க்க ங்காய் - ரூ.30, கோவக்காய் - ரூ.30, முள்ளங்கி - ரூ.20, சவ்சவ் - ரூ.10, சுரக்காய் - ரூ.10, முட்டை கோஸ் - ரூ.10, முருங்கைக்காய் - ரூ.80, வெள்ளரிக்காய் - ரூ.15, கொத்தவரங்காய் - ரூ.40, பச்சை மிளகாய் - ரூ.25, காலி பிளவர் ஒன்று - ரூ.10 இஞ்சி - ரூ.40.
- தமிழக அரசு தொல்லியல்துறை சார்பில் அப்பகுதியில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது.
- கொங்கல்நகரம் உட்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி ஜூன் 2024ல் பணிகள் தொடங்கியது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை கொங்கல்நகரம் பகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த பல்வேறு பொருட்கள் மேற்பரப்பு ஆய்வில் கண்டறியப்பட்டன. இதையடுத்து தமிழக அரசு தொல்லியல்துறை சார்பில் அப்பகுதியில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது.
தமிழகம் முழுவதும் கொங்கல்நகரம் உட்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி ஜூன் 2024ல் பணிகள் தொடங்கியது.
முதற்கட்டமாக கொங்கல்நகரம் அருகிலுள்ள சோ.அம்மாபட்டி பகுதியில் பழங்காலத்தை சேர்ந்த வாழ்விட பகுதி தேர்வு செய்யப்பட்டு அகழாய்வு செய்ததில் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், காதணி மற்றும் இதர அணிகலன்கள் கண்டறிய ப்பட்டன.
நவம்பரில் வடகிழக்கு பருவமழை துவங்கியதும், தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது 2-ம் கட்ட பணிகளை தொல்லியல் துறையினர் தொடங்கி உள்ளனர்.
இப்பகுதியில் கிடைக்கும் தொல்பொருட்களை கொண்டு உடுமலையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் உள்ளிட்ட அமைப்பினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.






