என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி வீட்டில் பீரோவை உடைத்து ரூ.19 லட்சம் கொள்ளை
- வீட்டின் மாடியில் உள்ள புகைக் கூண்டு சிலாப் கல்லை அகற்றி அதன் வழியாக வீட்டின் உள்ளே மர்மநபர்கள் புகுந்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி மலைக்கோவில் ரோடு பஜனைமடம் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 75).
விவசாயியான இவர் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வயலில் நெல் அறுவடை செய்து விற்று கிடைத்த பணம் ரூ.19 லட்சத்தை தனது வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.
நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வந்து பார்த்த போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.19 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் முனியாண்டி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்தார்.
புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன், சிவகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்மணி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் மாடியில் உள்ள புகைக் கூண்டு சிலாப் கல்லை அகற்றி அதன் வழியாக வீட்டின் உள்ளே மர்மநபர்கள் புகுந்துள்ளனர்.
அங்கு பீரோ சாவி இல்லாததால் கம்பி போன்ற பொருளைக் கொண்டு பீரோ இடது புறம் நெம்பி திருடியது தெரியவந்துள்ளது. மேலும் பணத்தை மஞ்சள் பையில் வைத்து பீரோவில் வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் பக்கத்து வீட்டின் பின்புறம் அந்த மஞ்சள் பை கிடந்ததாக கூறப்படுகிறது.
கொள்ளை போன வீட்டிற்கு இருபுறமும் சுவர்கள் உயரமாக இருப்பதால் பக்கத்து வீடுகளில் இருந்து வரமுடியாது எனவும், வீட்டின் பின்புறம் உள்ள வீட்டின் வழியாக மர்ம நபர் வந்திருக்கலாம் எனவும், வீட்டில் பணம் இருப்பது தெரிந்த வெளி நபர் அல்லது குடும்ப உறுப்பினர் யாராவது திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நேற்று மதியம் வீடு பூட்டிய நிலையில் இருந்த போது வீட்டின் உள்ளே விளக்குகள் எரிந்த நிலையில் உடைக்கும் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






