என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் பத்ம விருதுக்கு தேர்வாகினர்.
- அவர்களுக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னை:
இந்தியாவின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்று பத்ம விருதுகள் ஆகும். இவை பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த 25-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில், மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டது.
அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது உட்பட 5 விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பத்ம விருதுக்கு தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கிண்டி ராஜ்பவனில் இன்று பாராட்டுவிழா நடைபெற்றது.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடையும், கேடயமும் வழங்கி கவுரவித்தார்.
நடிகர் அஜித் கார் ரேசில் ஈடுபட்டு வருவதாலும், கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனிப்பட்ட காரணங்களாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
- ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என 32 ஆயிரம் பேருக்கு மாதத்திற்கு 76 கோடி சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.
- இருமொழி கொள்கையால் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அன்பில் மகேஷ் கூறியதாவது:-
தமிழ் நாட்டு மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் படித்து படித்து, ஆட்சி மாற்றம் செய்யப்பட்டதற்கு பின்பும் சரி, முன்பும் சரி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் இப்படி சொல்லும்போது பாஜக-வினர் நாங்கள் பொய் சொல்கிறார்கள், வெட்கமில்லையா என்று ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் எங்களை பார்த்து வாய் கூசாமல் சொல்கிறார்கள்.
ஆனால் மந்திய அமைச்சர் திட்டவட்டமாக என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என நாங்கள் அடிக்கடி சொல்கிறோம். 40 லட்சம் மாணவச் செல்வங்களின் முழு எதிர்காலம் அதில் இடங்கியிருக்கிறது.
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என பணியாற்றும் ஏறத்தாழ 32 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க வேண்டியிருக்கிறது. ஒரு மாதத்திற்கு 76 கோடி ரூபாய் மதிப்பிலும், வருடத்திற்கு 921 கோடி ரூபாய் என்ற வகையில் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டியிருக்கிறது.
25 சதவீதம் தனியார் பள்ளி ஒதுக்கீட்டிற்கான கட்டணம் 400 கோடி ரூபாயை தாண்டும். இதையெல்லாம் சேர்த்துதான் மாநில அரசு, மத்திய அரசு 60:40 என்ற அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறது.
நாங்கள் இதை சொல்லும்போது மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால என்ன? என்ற பிடிவாதத்துடன் இருக்கிறார்கள். அது தேவையில்லை என்ற காரணத்தினால்தான் அண்ணா காலத்தில் இருந்து இருமொழி கொள்கையை பின்பற்றி கொண்டிருக்கிறோம். இருமொழிக்கொள்கையை வைத்து தமிழக மாணவ, மாணவிகள் உலகம் முழுவதும் சாதித்து வருகின்றனர்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? என்பது இன்னொரு மொழிப்போரை தூண்டுவது போன்றுதான் அமைந்திருக்கிறது. அரசியல் செய்யாமல், சாக்குபோக்கு சொல்லாமல் 2152 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை இப்போதும் வைக்கின்றேன். இருமொழி கொள்கையால் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம். மாணவர்களை ப்ரூவன் பிராடெக்ட்-ஆக உருவாக்கி வருகிறோம். மும்மொழி கொள்கை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற அழுத்தத்தை எப்படி தரலாம்.
இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
- 25.2.2025 செவ்வாய்க் கிழமை முதல் 1.3.2025- சனிக் கிழமை வரை 5 நாட்கள் பொதுக்கூட்டங்கள்.
- கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுகவின் காவல் தெய்வம் அம்மாவின் 77-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 25.2.2025 செவ்வாய்க் கிழமை முதல் 1.3.2025- சனிக் கிழமை வரை 5 நாட்கள், 'ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், "நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும்" அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது குறித்து பேசினார்.
- ஆதாயம் இருக்கமானால் எல்லோரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்துங்கள்.
கோவை விமான நிலையத்தில் வைத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
குறிப்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. நான் தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வாக்குகளை விற்கும் சந்தையாக தேர்தலை மாற்றிவிட்டனர். மானுடத்தை கொன்றுவிட்டு மதத்தை தூக்கி நிறுத்துவதா? கைக்கூலி, ஓட்டுப்பிச்சை என்று கூறுவதா?, ஆதாயம் இருக்கமானால் எல்லோரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்துங்கள்.

அனைவரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டுமென்றே இவ்வளவு நாள் நான் போராடினேன் என்று கூறினார்.
மேலும் மயிலாடுதுறை இரட்டை கொலைக்கு முன் விரோதமே காரணம் என போலீசார் கூறுவது வேதனையளிக்கிறது, எப்படியாவது இந்த அரசை பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
- மருங்கூர் அகழாய்வில் 360 செ.மீ ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- சங்கறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளதையும், இப்பகுதி மக்கள் அந்த தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியுள்ளதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
"விலங்கு அரம் பொருத சங்கின் வெள் வளை" - 2441
பண்டைக் காலத்தில் அரம் போன்ற சிறு கருவிகளைக் கொண்டு சங்கினை அறுத்து அணிகலன்கள் செய்ததைக் குறிப்பிடுகிறது சீவக சிந்தாமணி பாடல்.
இதற்குச் சான்றாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் 360 செ.மீ ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்கு வளையல்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஒரு பகுதியாகும்.
இதுவரை இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் இரும்புப் பொருட்கள், இராசராச சோழன் காலத்துச் செப்பு காசுகள், அஞ்சனக் கோல், அகேட், சூதுபவளம், கண்ணாடி மணிகள், ரௌலட்டட் பானை ஓடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் இந்த பகுதியில் சங்கறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளதையும், இப்பகுதி மக்கள் அந்த தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியுள்ளதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மேலுமொரு சான்று கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
- 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை:
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரியின் முன்னேற்ற பணிகள் குறித்து இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலர் சிவஞானம், கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் கணேசன், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சி.எம்.டி.ஏ. சார்பில் 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். கொளத்தூர் ஏரியில் ரூ. 6.26 கோடி செலவில் முக்கிய அம்சங்களாக நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், ஒளிரும் மீன் சிற்பங்கள், இசை பூங்கா, தனித்துவமிக்க இருக்கைகள், படகு சவாரி, சூரிய விளக்கு கம்பங்கள், கரையில் செயற்கை நீர்வீழ்ச்சி, கடைகள், குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 45 மாதங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பெருநகர சென்னைக்கான சிந்தனையில் உதிர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
ரூ.250 கோடி செலவில் 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் 9 ஏரிகளின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முடிந்த அளவிற்கு டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சோதனையில் அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- டிரைவர் மீது குடிபோதை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
விபத்தில்லா மாவட்டம் என்ற இலக்கை அடைய, குடிபோதை மற்றும் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் கனரக வாகனங்கள், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் டிரைவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின்பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி சூப்பிரண்டு லலித்குமார் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் ஆரல்வாய்மொழி நாக்கால்மடம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
வெளியூர்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்து டிரைவர்கள் மற்றும் துணை டிரைவர்களை மதுபோதையில் செல்கிறார்களா என பிரீத் அனலைசர் கருவி மூலம் போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து வந்தது. அந்த பஸ்சை போலீசார் சைகை காட்டி நிறுத்தினர். பின்னர் டிரைவர் மதுபோதையில் உள்ளாரா என கண்டுபிடிப்பதற்காக பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர் மீது குடிபோதை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வழியாக குடிபோதையில் டெம்போ ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன டிரைவர்களின் உரிமம் ரத்து செய்ய நாகர்கோவில் போக்குவரத்து போலீசாரால் பரிந்துரை செய்யப்பட உள்ளது.
- படுகாயம் அடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் .
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மணியனூர் அருகே உள்ள கோலாரம் தேவேந்திர தெரு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (54). அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் அசோக் குமார் (35 ). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு கோவில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை அண்ணாதுரை கோலாரம் அருகே உள்ள கரிச்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அசோக்குமாரும் கரிச்சிபாளையம் பகுதிக்கு சென்று மது அருந்திக் கொண்டிருந்தார். போதையில் முன் விரோதம் காரணமாக அசோக்குமாருக்கும், அண்ணாதுரைக்கும் வாய் தகராறு ஈடுபட்டு அடிதடி தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரமடைந்த அசோக்குமார் வீட்டிற்கு வந்து அவரது அண்ணன் சின்னசாமி (40), அவரது சகோதரி கோமதி (45) ,அவர்களது தந்தை வீரமணி (70) ஆகியோரிடம் டாஸ்மார்க் கடையில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வீரமணி, கோமதி, சின்னசாமி ஆகியோரை அசோக்குமார் அழைத்துக் கொண்டு அண்ணாதுரையின் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளனர்.
அப்போதும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் சூரி கத்தியால் அண்ணாதுரையை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்ததை பார்த்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் .
பின்னர் அண்ணாதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அசோக்குமார், சின்னசாமி, கோமதி, வீரமணி ஆகிய 4 பேரையும் பிடித்து நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி அருகே ஆட்டோ டிரைவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 3 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரிந்துள்ளனர். முன்விரோதம் காரணமாகா மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனரா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், எட்டிமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து ராமன் (வயது38). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும், இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். இவரது மனைவி பிரியா (31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் முத்துராமனிடம் அதே பகுதியை சேர்ந்த துரை (40) என்பவர் பணம் வாங்கியுள்ளார்.
நீண்ட நாட்களாக வாங்கிய பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு முத்துராமன் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனம் மற்றும் மனைவியின் மொபட்டையும் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளனர்.
இன்று காலை விடிந்ததும் எழுந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்திய முத்துராமனின் 2 இருசக்கர வாகனங்களும் மற்றும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சண்முகம் மனைவி பச்சையம்மாளின் இருசக்கர வாகனமும் தீயில் எரிந்து கருகிய நிலையில் இருந்தது.
இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் 3 வாகனங்களும் தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து முத்துராமன் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தபோது, மர்ம நபர்கள் முதலில் முத்துராமன் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.
இதனால் அவர் வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பச்சையம்மாளின் வாகனத்தின் மீதும் தீ பற்றி எரிந்ததால், 3 வாகனங்கள் எரிந்து முழுவதும் சேதமானது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து முத்துராமன் போலீசாரிடம், புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோத காரணமாக? துரை என்பவர் முத்துராமனின் வாகனங்களுக்கு தீ வைத்தாரா? அல்லது முத்துராமனிடம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வேறு யாராவது மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 7-ந்தி அன்று, மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
- கூட்டத்தில் பள்ளிகளின் வருகைப்பதிவை மேம்படுத்துதல் மற்றும் மாவட்டத்தின் பள்ளிகளில் ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நீலகிரி:
மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீலகிரி மாவட்டத்தில் 287 அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான சமீபத்திய முயற்சியாக, கடந்த 7-ந்தி அன்று, மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பள்ளிகளின் வருகைப்பதிவை மேம்படுத்துதல் மற்றும் மாவட்டத்தின் பள்ளிகளில் ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டமோ, உத்தரவுகளோ இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
- நாம் பேச்சாளர்களை உருவாக்குவதை பார்த்து மற்றவர்களும் அதை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.
- உங்கள் மூலம் இளைய சமுதாயத்திற்கு திராவிடத்தின் சிறப்புகளையும் இந்த அரசின் செயல்பாடுகளையும் தெரியப்படுத்த வேண்டும்.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி சார்பில் இளம் பேச்சாளர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் இன்று தொடங்கியது. முகாமை துணை முதலமைச்சரும், இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 180 இளம் பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
ஒவ்வொரு மாவட்டத்திலும் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் 17 ஆயிரம் பேருக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டு அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட உங்களுக்கு இந்த 2 நாள் பயிற்சி மிகவும் அவசியம். நாம் பேச்சாளர்களை உருவாக்குவதை பார்த்து மற்றவர்களும் அதை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.
தந்தை பெரியார் காலத்தில் தற்போதுள்ள தொழில் நுட்பங்கள் கிடையாது. ஆனாலும் அவர் திராவிட கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றார். நவீன காலத்தில் யூடியூப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உள்ளன.
இவற்றின் மூலம் திராவிட கொள்கைகளையும், அரசின் திட்டங்களையும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்கு அரசால் செய்யப்படுகின்ற பணிகளை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
தொலைகாட்சி விவாதங்களில் பங்கேற்கும் வகையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். திராவிட இயக்கத்தின் வரலாறு, கொள்கைகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் மூலம் இளைய சமுதாயத்திற்கு திராவிடத்தின் சிறப்புகளையும் இந்த அரசின் செயல்பாடுகளையும் தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
2 மணி நேரத்திற்கு மேலாக உதயநிதி ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு பேச்சாளர்களின் பேச்சுகளை கேட்டார். தி.மு.க.வில் உள்ள அனுபவமிக்க பேச்சாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். எம்.பி.க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட பேச்சாளர்கள், மேடை பேச்சு குறித்து கருத்துக்களை கூறினார்கள். பயிற்சி முகாமில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- வீட்டின் மாடியில் உள்ள புகைக் கூண்டு சிலாப் கல்லை அகற்றி அதன் வழியாக வீட்டின் உள்ளே மர்மநபர்கள் புகுந்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி மலைக்கோவில் ரோடு பஜனைமடம் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 75).
விவசாயியான இவர் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வயலில் நெல் அறுவடை செய்து விற்று கிடைத்த பணம் ரூ.19 லட்சத்தை தனது வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.
நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வந்து பார்த்த போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.19 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் முனியாண்டி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்தார்.
புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன், சிவகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்மணி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் மாடியில் உள்ள புகைக் கூண்டு சிலாப் கல்லை அகற்றி அதன் வழியாக வீட்டின் உள்ளே மர்மநபர்கள் புகுந்துள்ளனர்.
அங்கு பீரோ சாவி இல்லாததால் கம்பி போன்ற பொருளைக் கொண்டு பீரோ இடது புறம் நெம்பி திருடியது தெரியவந்துள்ளது. மேலும் பணத்தை மஞ்சள் பையில் வைத்து பீரோவில் வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் பக்கத்து வீட்டின் பின்புறம் அந்த மஞ்சள் பை கிடந்ததாக கூறப்படுகிறது.
கொள்ளை போன வீட்டிற்கு இருபுறமும் சுவர்கள் உயரமாக இருப்பதால் பக்கத்து வீடுகளில் இருந்து வரமுடியாது எனவும், வீட்டின் பின்புறம் உள்ள வீட்டின் வழியாக மர்ம நபர் வந்திருக்கலாம் எனவும், வீட்டில் பணம் இருப்பது தெரிந்த வெளி நபர் அல்லது குடும்ப உறுப்பினர் யாராவது திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நேற்று மதியம் வீடு பூட்டிய நிலையில் இருந்த போது வீட்டின் உள்ளே விளக்குகள் எரிந்த நிலையில் உடைக்கும் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






