என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திவ்யா சத்யராஜ் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
    • சமூக வலைத்தளங்களில் அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்தார்.

    சென்னை:

    நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைவதற்கு முன்பாகவே மத்திய அரசை சாடி சமூக வலைத்தளங்களில் அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்தார்.

    இந்த நிலையில், தி.மு.க.வில் இணைந்த திவ்யாவை, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளராக நியமித்து தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. 

    • முத்துராமன் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், எட்டிமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து ராமன் (வயது38). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இவரது மனைவி பிரியா (31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    முத்துராமன் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் மற்றும் மனைவியின் மொபட் ஆகியவற்றை நிறுத்தி வைத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை அவர் எழுந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள், மொபட், சைக்கிள் மற்றும் பக்கத்து வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை தீயில் எரிந்து கிடந்தது. இதுகுறித்து முத்துராமன் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்த துரை (வயது 40) என்பவர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மொபட் ஆகியவற்றுக்கு தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் முத்துராமனின் மனைவி மகளிர் சுய உதவிகுழுவில் தலைவியாக உள்ளார். அவரிடம் துரை தனது குடும்பத்தினருக்கு கடன் உதவி ஏற்பாடு செய்து தருமாறு கூறினார்.

    அதற்கு அவர், கடன் வாங்கி கொடுத்தால், திருப்பி செலுத்தமாட்டீர்கள் என்று கூறினார். இதனால் ஆத்திரத்தில் துரை, முத்து ராமனின் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் கைதான துரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஏரிச்சாலையில் உற்சாகமாக சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர்.
    • முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் சில மணி நேரம் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    பொங்கல் விடுமுறைக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது வார விடுமுறை கொண்டாடுவதற்காக பெரும்பாலும் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

    இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ள பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், குணா குகை உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளிலும் ஏரியில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் உற்சாகமாக சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் பகல் நேரத்தில் நிலவும் கடும் வெயிலும் இரவு நேரத்தில் உள்ள பனியிலும் மாறுபட்ட சூழ்நிலைகளை அனுபவித்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளதால் முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் சில மணி நேரம் ஏற்பட்டது.

    இதேபோல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்றனர். எலும்பள்ளம் ஏரி, சூழல் சுற்றுலா மையம், முயல் பண்ணை ஆகியவற்றையும் அவர்கள் கண்டு ரசித்தனர். பனியின் தாக்கம் குறைந்த நிலையில் இதமான சீதோசனம் நிலவுவதால் மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள கைடுகள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் முறைநீர் பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்டது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.55 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் முறைநீர் பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்டது.

    இந்த மாவட்டங்களில் 2-ம்போக பாசனத்திற்காக கால்வாய் வழியாக டிசம்பர் 18ந் தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முறைப்பாசன அடிப்படையில் சில நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டும் பின்னர் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    கடந்த 10ந் தேதி முதல் கால்வாய் வழியாக வினாடிக்கு 450 கன அடி நீர் திறக்கப்பட்டு பின்னர் 525 கன அடியாக உயர்த்தப்பட்டது. நேற்று காலை கால்வாய் வழியாக திறக்கப்பட்ட பாசன நீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி குடிநீர் தேவைக்காக 300 கன அடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் என மொத்தம் 369 கன அடிநீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 170 கனஅடி நீர் வருகிறது. நீர்மட்டம் 63.25 அடியாக உள்ளது. அணையில் 4255 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.60 அடியாக உள்ளது. 143 கன அடி நீர் வருகிற நிலையில் 444 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.55 அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.69 அடியாக உள்ளது. 3.8 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 30.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
    • சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் சங்கம் சார்பில் அலகுமலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, திருச்சி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    போட்டியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மேயர் தினேஷ்குமார், கலெக்டா் கிறிஸ்துராஜ், வருவாய் அதிகாரி கார்த்திகேயன், 4 -வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல் காளையாக அலகுமலை கோவில் காளை களம் இறங்கியது. இவற்றை மாடுபிடி வீரர்கள் பிடிக்க முடியவில்லை.

    தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்க்கப்பட்டன. இதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றது.


    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, வெள்ளிக்காசு, குடம், ஹாட்பாக்ஸ், சைக்கிள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. இருபுறத்திலும் அமைக்கப்பட்டிருந்த கேலரிகளில் ஏராளமான பார்வையாளர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.

    வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் ஓடு தளத்தை சுற்றிய போதெல்லாம், பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.

    காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஷ் அசோக் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கான குடிநீர் வசதி, உணவு உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    • பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?
    • உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு நிதி அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு பிளாக் மெயில் செய்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?

    தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?

    தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்? என வினவியுள்ளார். 



    • கல்வி அனைவருக்கும் கிடைத்தால் தான் ஜாதி ஆதிக்கம் ஒழியும்.
    • கல்வி கடனை ஏன் பா.ஜ.க. அரசால் ரத்து செய்ய முடியவில்லை.

    நெல்லை:

    பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நெல்லை மாநகர், மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரசியல் சாசன விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ராபர்ட் புரூஸ் எம்.பி., மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

    இதில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    வடமாநிலங்களில் ஏற்குறைய பல மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. ஒரு நாடு ஒரு மதம், ஒரு நாடு - ஒரு மொழி, ஒரு நாடு - ஒரே கலாச்சாரம், ஒரு நாடு - ஒரு சட்டம், ஒரு நாடு-ஒரு உடை என சொல்லி பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இப்படி தொடர்ச்சியாக செய்தால் இந்தியா ஒற்றுமையாக இருக்காது.

    அம்பேத்கர் கொண்டுவந்த அரசியல் சாசனத்தை பா.ஜ.க ஏற்று கொள்ளாது. இந்த அரசியல் சாசனத்தை காலனி ஆதிக்க சாசனம் என பா.ஜ.க சொல்லி வருகிறது. இன்றும் ஜாதிய ஆதிக்கம் உள்ளது. கல்வி அனைவருக்கும் கிடைத்தால் தான் ஜாதி ஆதிக்கம் ஒழியும்.

    மாறுதல்களுக்கு உந்து சக்தியாக காங்கிரஸ் இருக்கிறது. அதனை வரவிடாமல் பா.ஜ.க. தடுக்கிறது. நாடு முழுவதும் பா.ஜ.க. ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது.

    இந்திய நாடு வளரவில்லை என நான் சொல்லவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் 6.8 சதவீதம் வளர்ச்சியை பெற்றது. தற்போது 5.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய நாட்டில் மக்கள் பட்டினியால் சாகவில்லை. ஆனால் மக்கள் பசியால் வாடுகிறார்கள்.

    பல குடும்பங்கள் இரவில் உணவில்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு தான் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது.

    ஆனால் இந்த திட்டத்தை குஜராத் முதல்-அமைச்சராக இருந்த மோடி எதிர்த்தார். பிரதமரான பின்னர் அதனை எதிர்க்க முடியவில்லை. சராசரியாக 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த ஆண்டு மக்களுக்கு 57 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. இப்போது 44 நாட்களாக குறைந்து விட்டது.

    இந்த ஆண்டு ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. காலப் போக்கில் 100 நாள் திட்டத்தை ஒழிக்க போகிறார்கள். வருமான வரி கட்டும் அனைவருக்கு ஒரே நிலையில் சலுகையை மத்திய அரசு அளிக்கிறது.ஏழை எளிய மக்கள் குறித்த ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை.

    இந்தியாவில் ஏறத்தாழ 35 கோடி மக்கள் பரம ஏழைகளாக பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர். இளைஞர்களில் 10 சதவீதம் பேரும், படித்த பட்டதாரிகள் 13 சதவீதம் பேர் 40 வயது வரையிலும் வேலை இல்லாமல் உள்ளனர்.

    மத்திய அரசின் பட்ஜெட் மேல்தட்டு மக்களுக்கும், எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கிறதோ அந்த மாநிலத்து மக்களுக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறார்கள். பெரும் பணக்காரரகளுக்கு 2 லட்சம் கோடி கார்ப்பரேட் கடனை ரத்து செய்ய முடியும் என்றால் கல்வி கடனை ஏன் பா.ஜ.க. அரசால் ரத்து செய்ய முடியவில்லை.

    இந்த அரசு மேல் தட்டு மக்களுக்கும் மேல் வர்க்கத்திற்குமான அரசு. சாதாரண பின் தங்கிய ஏழை மக்களுக்கான அரசு இது அல்ல.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • தீ விபத்தில் முதல் தளத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலணிகள், ஷூக்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் சாலையில் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த ஆபிரகாம் என்பவரின் குடும்பத்தினர் செருப்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தரைத்தளம் மற்றும் மாடியில் 2 தளங்கள் என கடை செயல்பட்டு வருகிறது.

    தரைத்தளத்தில் உள்ள கடையை ஆபிரகாம் மற்றும் அவரின் மகன் ஜோயல் இருவரும் பார்த்து வருகின்றனர். மாடியில் உள்ள முதல் தளத்தில் உள்ள கடையை ஆபிரகாம் மற்றொரு மகன் பிரபு பார்த்து வருகிறார். மேலும் மாடியில் உள்ள 2-வது தளத்தை குடோனாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு மாடியில் உள்ள முதல் தளத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று 2 தீயணைப்பு வண்டிகள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் முதல் தளத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலணிகள், ஷூக்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.

    தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    • கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல!
    • முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 



    • பொதுக்குழு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
    • கட்சியின் உட்கட்டமைப்பில் நிர்வாகிகள் நியமனம் முழுமையாக நிறைவு பெற்ற பின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2-ந்தேதியுடன் முதல் ஆண்டு முடிவடைந்து 2-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.

    இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டது. பொதுக்குழு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். அப்போது இடம் தேர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா, பொதுக்குழு நிகழ்ச்சிகளை தனித்தனியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வரும் 26-ந்தேதி த.வெ.க. முதலாம் ஆண்டு விழாவையும் அதன் பின் கட்சியின் உட்கட்டமைப்பில் நிர்வாகிகள் நியமனம் முழுமையாக நிறைவு பெற்ற பின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

    இதனால் வரும் 26-ந்தேதி கட்சியின் முதலாம் ஆண்டு விழா மட்டும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல், நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சருக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், தமிழ் நாட்டிற்கு நிதி அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு பிளாக் மெயில் செய்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "They have to come to the terms of the Indian Constitution என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?

    மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!

    "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!

    எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." என்று குறிப்பிட்டுள்ளார். 

    • தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் பத்ம விருதுக்கு தேர்வாகினர்.
    • அவர்களுக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாராட்டு விழா நடைபெற்றது.

    சென்னை:

    இந்தியாவின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்று பத்ம விருதுகள் ஆகும். இவை பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

    ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே, 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த 25-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில், மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டது.

    அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது உட்பட 5 விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பத்ம விருதுக்கு தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கிண்டி ராஜ்பவனில் இன்று பாராட்டுவிழா நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடையும், கேடயமும் வழங்கி கவுரவித்தார்.

    நடிகர் அஜித் கார் ரேசில் ஈடுபட்டு வருவதாலும், கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனிப்பட்ட காரணங்களாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

    ×