என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாடு முழுவதும் பா.ஜ.க ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது-ப.சிதம்பரம்
- கல்வி அனைவருக்கும் கிடைத்தால் தான் ஜாதி ஆதிக்கம் ஒழியும்.
- கல்வி கடனை ஏன் பா.ஜ.க. அரசால் ரத்து செய்ய முடியவில்லை.
நெல்லை:
பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நெல்லை மாநகர், மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரசியல் சாசன விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ராபர்ட் புரூஸ் எம்.பி., மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
இதில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
வடமாநிலங்களில் ஏற்குறைய பல மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. ஒரு நாடு ஒரு மதம், ஒரு நாடு - ஒரு மொழி, ஒரு நாடு - ஒரே கலாச்சாரம், ஒரு நாடு - ஒரு சட்டம், ஒரு நாடு-ஒரு உடை என சொல்லி பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இப்படி தொடர்ச்சியாக செய்தால் இந்தியா ஒற்றுமையாக இருக்காது.
அம்பேத்கர் கொண்டுவந்த அரசியல் சாசனத்தை பா.ஜ.க ஏற்று கொள்ளாது. இந்த அரசியல் சாசனத்தை காலனி ஆதிக்க சாசனம் என பா.ஜ.க சொல்லி வருகிறது. இன்றும் ஜாதிய ஆதிக்கம் உள்ளது. கல்வி அனைவருக்கும் கிடைத்தால் தான் ஜாதி ஆதிக்கம் ஒழியும்.
மாறுதல்களுக்கு உந்து சக்தியாக காங்கிரஸ் இருக்கிறது. அதனை வரவிடாமல் பா.ஜ.க. தடுக்கிறது. நாடு முழுவதும் பா.ஜ.க. ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது.
இந்திய நாடு வளரவில்லை என நான் சொல்லவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் 6.8 சதவீதம் வளர்ச்சியை பெற்றது. தற்போது 5.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய நாட்டில் மக்கள் பட்டினியால் சாகவில்லை. ஆனால் மக்கள் பசியால் வாடுகிறார்கள்.
பல குடும்பங்கள் இரவில் உணவில்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு தான் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்தை குஜராத் முதல்-அமைச்சராக இருந்த மோடி எதிர்த்தார். பிரதமரான பின்னர் அதனை எதிர்க்க முடியவில்லை. சராசரியாக 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த ஆண்டு மக்களுக்கு 57 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. இப்போது 44 நாட்களாக குறைந்து விட்டது.
இந்த ஆண்டு ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. காலப் போக்கில் 100 நாள் திட்டத்தை ஒழிக்க போகிறார்கள். வருமான வரி கட்டும் அனைவருக்கு ஒரே நிலையில் சலுகையை மத்திய அரசு அளிக்கிறது.ஏழை எளிய மக்கள் குறித்த ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை.
இந்தியாவில் ஏறத்தாழ 35 கோடி மக்கள் பரம ஏழைகளாக பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர். இளைஞர்களில் 10 சதவீதம் பேரும், படித்த பட்டதாரிகள் 13 சதவீதம் பேர் 40 வயது வரையிலும் வேலை இல்லாமல் உள்ளனர்.
மத்திய அரசின் பட்ஜெட் மேல்தட்டு மக்களுக்கும், எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கிறதோ அந்த மாநிலத்து மக்களுக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறார்கள். பெரும் பணக்காரரகளுக்கு 2 லட்சம் கோடி கார்ப்பரேட் கடனை ரத்து செய்ய முடியும் என்றால் கல்வி கடனை ஏன் பா.ஜ.க. அரசால் ரத்து செய்ய முடியவில்லை.
இந்த அரசு மேல் தட்டு மக்களுக்கும் மேல் வர்க்கத்திற்குமான அரசு. சாதாரண பின் தங்கிய ஏழை மக்களுக்கான அரசு இது அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.






