என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்- இதமான சீதோசனம் நிலவுவதால் உற்சாகம்
- ஏரிச்சாலையில் உற்சாகமாக சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர்.
- முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் சில மணி நேரம் ஏற்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
பொங்கல் விடுமுறைக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது வார விடுமுறை கொண்டாடுவதற்காக பெரும்பாலும் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.
இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ள பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், குணா குகை உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளிலும் ஏரியில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் உற்சாகமாக சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மேலும் பகல் நேரத்தில் நிலவும் கடும் வெயிலும் இரவு நேரத்தில் உள்ள பனியிலும் மாறுபட்ட சூழ்நிலைகளை அனுபவித்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளதால் முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் சில மணி நேரம் ஏற்பட்டது.
இதேபோல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்றனர். எலும்பள்ளம் ஏரி, சூழல் சுற்றுலா மையம், முயல் பண்ணை ஆகியவற்றையும் அவர்கள் கண்டு ரசித்தனர். பனியின் தாக்கம் குறைந்த நிலையில் இதமான சீதோசனம் நிலவுவதால் மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள கைடுகள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






