என் மலர்tooltip icon

    இந்தியா

    • பிரதமரின் கோவை சுற்றுப்பயணத்தில் குண்டுவெடிப்பு நடத்த உள்ளோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
    • கோவையில் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் இன்று இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த ஊழியர்கள் இன்று காலை இ-மெயில் தகவல்களை சரிபார்த்தனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிரதமரின் கோவை சுற்றுப்பயணத்தில் குண்டுவெடிப்பு நடத்த உள்ளோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் மற்றும் விமான நிலையத்தில் மோப்பநாய் கொண்டு சல்லடை போட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதன்பிறகே போலீசாரும், ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர். இருந்தாலும் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • கோவை கொடிசியா மைதானத்திற்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு, அதன் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    கோவை:

    கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    இதற்காக அவர் இன்று மதியம் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பு அளித்தனர். விழா நடைபெறும் கோவை கொடிசியா மைதானத்திற்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மாநாட்டு அரங்குக்குள் சென்றார்.

    முதலில் மாநாட்டு அரங்கில் விவசாயிகள் சார்பில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் இடம் பெற்ற 17 கண்காட்சி அரங்குகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு, அதன் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    • SIR தொடங்கியதிலிருந்து ஏற்கனவே 28 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
    • பணிச்சுமையால் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுகின்றன.

    இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்நிலையில், மேற்குவங்கத்தில் SIR பணிகளில் ஈடுபட்டு வந்த சாந்தி முனி எக்கா என்ற பூத் லெவல் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலை செய்துகொண்ட சாந்தி முனி எக்காவுக்கு இரங்கல் தெரிவித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இன்று மீண்டும், ஜல்பைகுரியின் மாலில் ஒரு பூத் லெவல் அதிகாரியை இழந்தோம். சாந்தி முனி எக்கா, ஒரு பழங்குடியின பெண், ஒரு அங்கன்வாடி ஊழியர், நடந்து வரும் SIR பணியின் தாங்க முடியாத அழுத்தத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

    SIR தொடங்கியதிலிருந்து ஏற்கனவே 28 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். சிலர் பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாகவும், மற்றவர்கள் மன அழுத்தம் மற்றும் அதிக வேலைச்சுமை காரணமாகவும் உயிரை இழந்துள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் திட்டமிடப்படாத, இடைவிடாத பணிச்சுமையால் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுகின்றன. முன்பு 3 ஆண்டுகள் எடுத்த ஒரு செயல்முறை, தங்களது அரசியல் எஜமானர்களை மகிழ்விக்க, தேர்தல்களுக்கு முன்னதாக 2 மாதங்களுக்குள் கட்டாயப்படுத்தப்பட்டு, BLO-க்கள் மீது மனிதாபிமானமற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    மனசாட்சியுடன் செயல்பட்டு, மேலும் உயிர்கள் இழக்கப்படுவதற்கு முன்பு இந்த திட்டமிடப்படாத SIR பணிகளை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இத்தனை ஆயிரம் காவல்துறையினர் இருந்தும் கூட நமது வீட்டுப் பிள்ளைகளை நாம் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
    • கைதுகள் தான் அதிகரிக்கிறதே தவிர திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் 'பெண்களுக்கெதிரான தி.மு.க. ஆட்சி விரைவில் ஒழிய வேண்டும்!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவியைப் பள்ளி செல்லும் வழியில் மறித்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த மன வேதனையுமளிக்கிறது. கொலையான மாணவியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மீளாத் துயரைக் கடந்து வர இறைவன் அவர்களுக்குத் துணைநிற்க வேண்டுமெனப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு நாள் விடியும் பொழுதும் இன்று எந்தப் பெண்ணுக்கு எங்கே வன்கொடுமை நடந்துள்ளதோ என்ற பதற்றத்திலேயே செய்தித்தாள்களைப் பிரிக்க வேண்டியிருக்கிறது. இத்தனை ஆயிரம் காவல்துறையினர் இருந்தும் கூட நமது வீட்டுப் பிள்ளைகளை நாம் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. கைதுகள் தான் அதிகரிக்கிறதே தவிர திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை.

    கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூறி பாஜக பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது, கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தன் வாரிசுகளை மட்டுமே உயர்ந்ததாக நினைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து பலிகொடுக்கத் தயாராகிவிட்டார். இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சி இனியும் தமிழகத்தில் தொடரக்கூடாது! திமுகவின் இந்த காட்டாட்சிக்கு நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடிய விரைவில் கடிவாளமிடும்! என்று கூறியுள்ளார். 

    • ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பு அளித்தனர்.

    கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பு அளித்தனர்.

    பிரதமர் மோடியின் கார் மீது மலர்களைத்தூவி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விழா நடைபெறும் கோவை கொடிசியா மைதானத்திற்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து பிரதமர் மோடி, இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் 'பி.எம். கிசான்' திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை வழங்குகிறார்.


    • தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர் பணி மிகப்பெரிய ஜனநாயக மோசடியாகும்.
    • எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.

    கோவை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவை மெட்ரோ ரெயில் திட்டம் என்பது முன்பே அறிவிக்கப்பட்டது. தமிழக அரசும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அறிக்கை தயாரித்து அனுப்பியது. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் தமிழக அரசு பதில் அளித்தது.

    இந்த நிலையில் திடீரென நேற்று மாலை கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து இருக்கிறது.

    20 லட்சத்திற்கு குறைவாக இருப்பதால் அனுமதி கொடுக்க இயலாது என கூறி ரத்து செய்திருக்கிறது. ஆனால் மக்கள் தொகை குறைவாக உள்ள ஆக்ரா, போபால், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி அளித்து அங்கு பணிகள் தொடங்கி விட்டன.

    ஆனால் மக்கள் தொகையை காரணம் காட்டி, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்திற்கு எதிரானது. மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்து, மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம், வஞ்சம் செய்துள்ளது.

    கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்தும், மெட்ரோ ரெயில் திட்டம் மீண்டும் செயல்படுத்த கோரியும் வருகிற 24-ந் தேதி(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர் பணி மிகப்பெரிய ஜனநாயக மோசடியாகும். தேர்தல் ஆணையம் ஒருசாராகவே செயல்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பிரதமர் மோடி தமிழகத்தில் வந்து திருக்குறளையும், பாரதியார் பாட்டையும் மனப்பாடம் செய்து படித்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. அதனை தமிழக மக்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்றார். 

    • கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தார்.
    • அலுவலக அறைகள், கழிவறைகள், வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இது 7 தளங்களை கொண்டது. கலெக்டர், வருவாய் அலுவலர் உள்பட அதிகாரிகளின் அலுவல் அறைகள் மற்றும் பல்வேறு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் மாவட்ட கலெக்டரின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு, அறிமுகம் இல்லாத முகவரியில் இருந்து இன்று காலை ஒரு மெயில் வந்துள்ளது. அதில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் வெடிகுண்டை கண்டறியும் போலீசார் குழு மோப்பநாய், புல்லட் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்தின் பல்வேறு தளங்களிலும் ஆய்வு செய்தனர்.

    கலெக்டர் அலுவலகத்தின் 7 தளங்களிலும் உள்ள அலுவலக அறைகள், கழிவறைகள் மற்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும் மின்னஞ்சல் அனுப்பிய முகவரி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்கள் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்த சம்பவம் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08.30 மணி அளவில் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    21-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    22-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    23-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    24-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    25-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    இன்று மற்றும் நாளை அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு-மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    21-ந்தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    22 மற்றும் 23-ந்தேதிகளில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஏனைய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கரூர் துயர சம்பவத்தின் போது மற்ற காங்கிரஸ் தலைவர்களை போலவே விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார்.
    • தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் என்பது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கிடையாது. குடியுரிமை திருத்தம்.

    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக வலைதளங்கள் காங்கிரஸ்- தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க உள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுகின்றன.

    ஆனால் காங்கிரசுக்கு விஜய் அறிமுகம் இல்லாதவர் அல்ல. காங்கிரஸில் சேருவது குறித்து விவாதிக்க 2010 ல் அவர் ராகுல் காந்தியை சந்தித்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை.

    கரூர் துயர சம்பவத்தின் போது மற்ற காங்கிரஸ் தலைவர்களை போலவே விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார்.

    சமூக ஊடகங்களில் நாம் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது. நாங்கள் ஏற்கனவே திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி விஷயங்களை பற்றி விவாதிக்க இன்னும் நேரம் இருக்கிறது.

    தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் என்பது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கிடையாது. குடியுரிமை திருத்தம்.

    பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யாமல் வாக்காளர் பட்டியல் திருத்தம் மட்டும் செய்கின்றனர். இதற்கு அஸ்ஸாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறுகின்றனர்.

    இதுபோல எஸ்.ஐ.ஆர் வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பில் இல்லாத தமிழகம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர் செயல்படுத்துவதன் நோக்கம் என்ன? தேர்தல் ஆணையம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒரு நிலைப்பாடும் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் வேறு ஒரு நிலைப்பாடும் என இரட்டை நிலைபாடுகளுடன் செயல்படுகிறது. பா.ஜ.க.வின் ஒரு அணி போல தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றார். 

    • ஆயிரம் கோடிக்கு மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வரவில்லை.
    • முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு மாறி செல்வதற்கு கமிஷன், ஊழல்தான் காரணம்.

    சென்னை:

    பா.ம.க. சார்பில் தி.மு.க. அரசின் தொழில் முதலீடுகள் பொய்யானவை என்ற ஆவண புத்தகம் தயாரிக்கப்பட்டது. அதனை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி சென்னையில் இன்று வெளியிட்டார்.

    பின்னர் அதில் உள்ள புள்ளி விவரங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பா.ம.க. பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. தொழில், வேளாண்மை, கல்வி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வரைவு நிதி நிலை அறிக்கை என இதுவரை 57 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று வெளியிடப்பட்ட ஆவணம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் முதலீடுகள் எவ்வளவு வந்துள்ளது என்பதாகும்.

    இதில் எந்த அளவுக்கு பொய் சொல்லி இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகள் குறித்து தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

    ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்திருப்பதாகவும், 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் மீண்டும் மீண்டும் முதலமைச்சரும், தொழில் துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் சொல்லி வருகிறார்கள். இது பொய் என்று ஆவணங்கள் மூலம் நிரூபித்து உள்ளோம்.

    தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முதலீடு 78 சதவீதம். 2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அதில் 80 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இது மிகப்பெரிய பொய். ஆயிரம் கோடிக்கு மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வரவில்லை.

    2021-22-ம் ஆண்டில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்க ஒப்பந்தங்களாகும். 2022-23-ம் ஆண்டில் முதல் கட்டமாக ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    2023-24-ம் ஆண்டில் ரூ.61,791 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் ஹூண்டாய் நிறுவனம் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்வதாக கூறி இருந்தனர். ஆனால் ரூ.500 கோடி மட்டுமே அந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க பயணம் செய்தார். இதன் மூலம் 66 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் ரூ.34,014 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் 47 ஆயிரத்து 650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் ஒரு பைசா முதலீடு கூட வரவில்லை.

    இதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். வெறும் 3 சதவீத வெளிநாட்டு முதலீடு மட்டுமே வந்துள்ளது. தமிழ் நாட்டில் கங்கை கொண்டானில் தொழில் தொடங்க கையெழுத்திட்ட நிறுவனம் ஒருசில மாதங்களில் ஆந்திராவுக்கு சென்றது ஏன்?

    அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தமிழகத்தை சேர்ந்தவர். அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யாமல் ஆந்திராவுக்கு சென்றது ஏன்? முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு மாறி செல்வதற்கு கமிஷன், ஊழல்தான் காரணம்.

    இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலம் எது என்ற பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் 17 மாநிலங்கள் இடம் பெற்றன. அதில் தமிழகம் இடம் பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பா.ம.க. பொருளாளர் சத்யபாமா, வக்கீல் பாலு, அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாஜக உடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குதிருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
    • தேர்தல் தோல்வி விரக்கியதால் குற்றச்சாட்டு என முக்கியஸ்தர்கள் கடிதம்.

    காங்கிரஸ் கட்சி மக்களவை, சட்டசபை தேர்தல் என தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அதேவேளையில் பாஜக-வின் வெற்றிக்கு வாக்கு திருட்டுதான் முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு உதவி செய்து வருகிறது என ராகுல் காந்தி தொடர்ந்த குற்றம்சாட்டி வருகிறார்.

    ஆதாரங்களுடன் குற்றம்சாட்டிய நிலையிலும், தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக 272 முக்கியஸ்தர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    அதில் "தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செயல்படுகிறார்" கையொப்பமிட்டு குறிப்பிட்டுள்ளனர்.

    சுமார் 272 பேர் கையொப்பமிட்டு உள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகள் மூத்த அதிகாரிகள் யாரும் கையொப்பமிடவில்லை.

    16 நீதிபதிகள் 123 ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் 133 ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.கே. கோயல், ஹேமந்த் குப்தா உள்ளிட்ட வரும் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

    • தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரித்து போராட்டம் நடத்தப்பட்டது.
    • அவிநாசி சாலை மசக்காளிபாளையம் சந்திப்பு பகுதியில் முற்போக்கு இயக்கத்தினர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

    பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று கோவை வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உருவபொம்மையை எரித்துப்போராட்டம் நடத்தப்பட்டது.

    பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

    கோவை அவிநாசி சாலை மசக்காளிபாளையம் சந்திப்பு பகுதியில் முற்போக்கு இயக்கத்தினர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். உருவபொம்மையை எரித்தபடி சாலையில் ஓடியபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து கருப்பு கொடி போராட்டம் நடத்திய முற்போக்கு அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

    ×