என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொழில் முதலீடுகள் குறித்து தி.மு.க. அரசு தொடர்ந்து பொய் கூறி வருகிறது- அன்புமணி குற்றச்சாட்டு
    X

    தொழில் முதலீடுகள் குறித்து தி.மு.க. அரசு தொடர்ந்து பொய் கூறி வருகிறது- அன்புமணி குற்றச்சாட்டு

    • ஆயிரம் கோடிக்கு மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வரவில்லை.
    • முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு மாறி செல்வதற்கு கமிஷன், ஊழல்தான் காரணம்.

    சென்னை:

    பா.ம.க. சார்பில் தி.மு.க. அரசின் தொழில் முதலீடுகள் பொய்யானவை என்ற ஆவண புத்தகம் தயாரிக்கப்பட்டது. அதனை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி சென்னையில் இன்று வெளியிட்டார்.

    பின்னர் அதில் உள்ள புள்ளி விவரங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பா.ம.க. பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. தொழில், வேளாண்மை, கல்வி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வரைவு நிதி நிலை அறிக்கை என இதுவரை 57 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று வெளியிடப்பட்ட ஆவணம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் முதலீடுகள் எவ்வளவு வந்துள்ளது என்பதாகும்.

    இதில் எந்த அளவுக்கு பொய் சொல்லி இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகள் குறித்து தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

    ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்திருப்பதாகவும், 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் மீண்டும் மீண்டும் முதலமைச்சரும், தொழில் துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் சொல்லி வருகிறார்கள். இது பொய் என்று ஆவணங்கள் மூலம் நிரூபித்து உள்ளோம்.

    தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முதலீடு 78 சதவீதம். 2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அதில் 80 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இது மிகப்பெரிய பொய். ஆயிரம் கோடிக்கு மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வரவில்லை.

    2021-22-ம் ஆண்டில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்க ஒப்பந்தங்களாகும். 2022-23-ம் ஆண்டில் முதல் கட்டமாக ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    2023-24-ம் ஆண்டில் ரூ.61,791 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் ஹூண்டாய் நிறுவனம் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்வதாக கூறி இருந்தனர். ஆனால் ரூ.500 கோடி மட்டுமே அந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க பயணம் செய்தார். இதன் மூலம் 66 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் ரூ.34,014 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் 47 ஆயிரத்து 650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் ஒரு பைசா முதலீடு கூட வரவில்லை.

    இதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். வெறும் 3 சதவீத வெளிநாட்டு முதலீடு மட்டுமே வந்துள்ளது. தமிழ் நாட்டில் கங்கை கொண்டானில் தொழில் தொடங்க கையெழுத்திட்ட நிறுவனம் ஒருசில மாதங்களில் ஆந்திராவுக்கு சென்றது ஏன்?

    அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தமிழகத்தை சேர்ந்தவர். அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யாமல் ஆந்திராவுக்கு சென்றது ஏன்? முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு மாறி செல்வதற்கு கமிஷன், ஊழல்தான் காரணம்.

    இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலம் எது என்ற பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் 17 மாநிலங்கள் இடம் பெற்றன. அதில் தமிழகம் இடம் பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பா.ம.க. பொருளாளர் சத்யபாமா, வக்கீல் பாலு, அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×