என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இ-மெயில்: பிரதமர் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்
- பிரதமரின் கோவை சுற்றுப்பயணத்தில் குண்டுவெடிப்பு நடத்த உள்ளோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
- கோவையில் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் இன்று இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த ஊழியர்கள் இன்று காலை இ-மெயில் தகவல்களை சரிபார்த்தனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிரதமரின் கோவை சுற்றுப்பயணத்தில் குண்டுவெடிப்பு நடத்த உள்ளோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் மற்றும் விமான நிலையத்தில் மோப்பநாய் கொண்டு சல்லடை போட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதன்பிறகே போலீசாரும், ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர். இருந்தாலும் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.






