search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur Collector office"

    • லோகநாதன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
    • திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த அரசு திட்டப்பணிக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு லோகநாதன்தான் வழங்கி வந்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் போலீசார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் பணம் அதிகமாக புரளும் என்பதை கருத்தில் கொண்டு இந்த ரகசிய சோதனை நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் கணக்கு பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த அறையில் இருந்த துணை வட்டார வளர்ச்சி அதிகாரி (கணக்கு) லோகநாதன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200 இருந்தது.

    அந்த பணத்துக்கான கணக்கு விவரங்களை லோகநாதனிடம் கேட்டனர். அவரிடம் எந்தவித விவரமும் இல்லை. இதைத்தொடர்ந்து கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா கூறும்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கணக்கு பிரிவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200, துணை வட்டார வளர்ச்சி அதிகாரியான லோகநாதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த அரசு திட்டப்பணிக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு லோகநாதன்தான் வழங்கி வந்துள்ளார். அந்த காசோலையை வழங்குவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லோகநாதன் லஞ்சம் பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    • திருமணமான நாள் முதல் அடித்து கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்த மனோகர்.
    • மன உளைச்சல் அடைந்த சவுந்தர்யா தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க தனது தாயாருடன் வந்த இளம்பெண் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனக்குத்தானே மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரித்த போது திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவரின் மகள் சவுந்தர்யா என்பதும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவரது உறவினரான கோவை மாவட்டத்தை சேர்ந்த மனோகர் என்ற கட்டிட தொழிலாளிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

    மது பழக்கத்திற்கு அடிமையான மனோகர் திருமணமான நாள் முதல் இரண்டு மாதங்களாக சவுந்தர்யாவை அடித்து கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்துள்ளார்.

    இது குறித்து நியாயம் கேட்க சென்ற மஞ்சுளாவையும் தாக்கியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சவுந்தர்யா தனது தாயார் மஞ்சுளாவுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் வந்து 2மாதங்களாக தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சல் அடைந்த சவுந்தர்யா இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. திருமணமான 4 மாதங்களிலேயே இளம்பெண் கணவரின் கொடுமை தாங்காமல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வருவதாக கூறியும், திருச்சபை கட்டிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
    • கலெக்டர் வினீத், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மண்ணரையை சேர்ந்தவர் அருண் அந்தோணி. கிறிஸ்தவ மதபோதகர். இவர் அந்த பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி அதில் திருச்சபை கட்ட சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த சிலர் கட்டுமான பணியை நிறுத்தியதுடன் அருகில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்தனர்.

    1½ ஆண்டுகளாக இதுவரை கட்டுமான பணி தொடங்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும், தங்களுக்கு திருச்சபை கட்ட உரிய அனுமதி வழங்குமாறும் கூறி அருண் அந்தோணி தலைமையில் கிறிஸ்தவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி காலை முதல் விடிய, விடிய தர்ணாவில் ஈடுபட்டனர். 2-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு அருகில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டது.

    திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்தில் முடிவு தெரிவிப்பதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறி நேற்று காலை அருண் அந்தோணி தலைமையில் கிறிஸ்தவ மக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவை தொடங்கினார்கள்.

    அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வருவதாக கூறியும், திருச்சபை கட்டிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    பின்னர் கலெக்டர் வினீத், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 2 வாரத்துக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் தங்களுக்கு இனிமேலும் காலம் கடத்தாமல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி தர்ணாவை நேற்று இரவு 9 மணிக்கு மேலும் தொடர்ந்தனர். குழந்தைகளுடன் போராட்டம் நடத்தியதால் வீரபாண்டி போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    திருப்பூர்:

    சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் தீ தடுப்பு பயிற்சி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முன்னதாக கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ள தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி கருவிகள் கண்காட்சியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-



    பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்து கொள்ள எச்சரிக்கை மிக அவசியம் என்பதை உறுதிபடுத்தவே இந்த தீ தடுப்பு மற்றும் பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொது மக்களும் மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆறு மற்றும் குளங்களை கடக்கும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டும். அதே போல் தண்ணீர் சூழ்ந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்து வைக்க வேண்டும்.

    மேலும் தரை பாலங்களில் தண்ணீர் செல்லும் போது அதை கடப்பதை தவிர்க்க வேண்டும். மற்றும் இடி, மின்னல் காலங்களில் மின்சாதன பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். மழை வெள்ளங்களில் எந்த அளவிற்கு தங்களை பாதுகாத்து கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு எச்சரிக்கையுடன் இருந்து விபத்து மற்றும் இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் அர்ப்பணிப்புடனும் மற்றும் துரிதகதியிலும் செயல்பட்டு விபத்தை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பேரிடர் காலத்தில் மழை, வெள்ளத்தின் போது தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் முதலுதவி சிகிச்சை வழங்குதல், தீ மற்றும் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுப்பது, உயரமான கட்டிடங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்பது, கால்நடைகளை மழை வெள்ளத்தின் போது பாதுகாப்பது குறித்த தகவல்களை கூறியதுடன், தீயணைப்பு வீரர்கள் இதுகுறித்து ஒத்திகையும் நடத்தி காண்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன், உதவி ஆணையர் (கலால்) சக்திவேல், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, உதவி அலுவலர் வெங்கட்ராமன், நிலைய அலுவலர்கள் பாஸ்கரன், சண்முகம், தாசில்தார்கள் கனகராஜ் (பேரிடர் மேலாண்மை), ரவிச்சந்திரன் (திருப்பூர் தெற்கு), ராஜகோபால், அம்சவேணி, முருகதாஸ், உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
    ×