search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
    X

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    திருப்பூர்:

    சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் தீ தடுப்பு பயிற்சி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முன்னதாக கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ள தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி கருவிகள் கண்காட்சியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-



    பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்து கொள்ள எச்சரிக்கை மிக அவசியம் என்பதை உறுதிபடுத்தவே இந்த தீ தடுப்பு மற்றும் பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொது மக்களும் மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆறு மற்றும் குளங்களை கடக்கும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டும். அதே போல் தண்ணீர் சூழ்ந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்து வைக்க வேண்டும்.

    மேலும் தரை பாலங்களில் தண்ணீர் செல்லும் போது அதை கடப்பதை தவிர்க்க வேண்டும். மற்றும் இடி, மின்னல் காலங்களில் மின்சாதன பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். மழை வெள்ளங்களில் எந்த அளவிற்கு தங்களை பாதுகாத்து கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு எச்சரிக்கையுடன் இருந்து விபத்து மற்றும் இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் அர்ப்பணிப்புடனும் மற்றும் துரிதகதியிலும் செயல்பட்டு விபத்தை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பேரிடர் காலத்தில் மழை, வெள்ளத்தின் போது தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் முதலுதவி சிகிச்சை வழங்குதல், தீ மற்றும் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுப்பது, உயரமான கட்டிடங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்பது, கால்நடைகளை மழை வெள்ளத்தின் போது பாதுகாப்பது குறித்த தகவல்களை கூறியதுடன், தீயணைப்பு வீரர்கள் இதுகுறித்து ஒத்திகையும் நடத்தி காண்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன், உதவி ஆணையர் (கலால்) சக்திவேல், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, உதவி அலுவலர் வெங்கட்ராமன், நிலைய அலுவலர்கள் பாஸ்கரன், சண்முகம், தாசில்தார்கள் கனகராஜ் (பேரிடர் மேலாண்மை), ரவிச்சந்திரன் (திருப்பூர் தெற்கு), ராஜகோபால், அம்சவேணி, முருகதாஸ், உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×