என் மலர்tooltip icon

    இந்தியா

    • சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர்.
    • ஒவ்வொருவராக தூக்கிச் சென்று சபையிலிருந்து வெளியேற்றினர்.

    கர்நாடக சட்டமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த 18 உறுப்பினர்களை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டுள்ளார்.

    அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு தரும் மசோதா இன்று கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசியல்வாதிகள் மீதான ஹனி டிராப் மோசடி முயற்சிகள் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர். 

    சில பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர். மேலும் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து சட்டமன்ற விதி 348 இன் கீழ், அவை நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காகவும், உத்தரவைப் பொருட்படுத்தாமல், ஒழுங்கற்று மரியாதைக் குறைவான முறையில் நடந்து கொண்டதற்காகவும் 18 பாஜக எம்எல்ஏக்களை 6 மாத காலத்திற்கு அவையில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

    இடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர்களை சபாநாயகர் கூறிக் கொண்டிருந்தபோது, அவர்கள் வெளியேறாததால், பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை ஒவ்வொருவராக தூக்கிச் சென்று சபையிலிருந்து வெளியேற்றினர்.

    • ரூ.2000 கோடியில் தரமான லேப்டாபை வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்கு தக்க விளக்கம்.
    • கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் திமுக அரசின் தரம் பற்றி.

    யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்த துறையையும் விட்டுவிடாத all-round TNBudget2025 என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தென்னரசு அவர்கள்.

    கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் கழக அரசின் தரம் பற்றி!

    யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round #TNBudget2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரூ.2021.51 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு தற்போது வரை ரூ.239.27 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதியை விடுவிப்பதில் எந்த காலதாமதமும் இல்லை என்றும் 26 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் யாதவ் பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    மேலும், " ரூ.2021.51 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு தற்போது வரை ரூ.239.27 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஜப்பானை சேர்ந்த நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி திட்டத்தை 2026 அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    • ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொழியை நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் இந்திய மொழியை நீங்கள் விரும்பவில்லை.
    • மொழியின் பெயரால் உங்கள் ஊழலையும் மறைக்க முயற்சிக்கிறீர்கள். நாங்கள் உங்களை அம்பலப்படுத்துவோம்.

    இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது தேசிய கல்விக்கொள்கையில் (NEP) உள்ள மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு என குற்றம்சாட்டி, தமிழ்நாடு ஏற்க மறுப்பது குறித்து காட்டமான கருத்துக்களை அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    அவையில் அமித் ஷா கூறியதாவது, அவர்கள் தங்கள் ஊழலை மறைக்க மொழியின் பெயரால் கடை விரிக்கிறார்கள். ஒவ்வொரு மொழியும் நாட்டின் ரத்தினம் போன்றது. நாங்கள் தென் மாநில மொழிகளுக்கு எதிரானவர்கள் என அவர்கள் சொல்ல விரும்புகிறீர்களா?..

    மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்கள், தனிக்கப்பட்ட உள்நோக்கம் கொண்டிருக்கிறார்கள். பொறியியல் மற்றும் மருத்துவத் தேர்வுகளை தமிழில் நடந்த (தமிழ்நாடு அரசுக்கு) தைரியம் இல்லை.

     

    அவர்கள் மொழியின் பெயரால் விஷத்தைப் பரப்புகிறார்கள். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொழியை நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் இந்திய மொழியை நீங்கள் விரும்பவில்லை.

    மொழியின் பெயரால் நாட்டைப் பிரிக்கக் கூடாது. உங்கள் தவறுகளையும், மொழியின் பெயரால் உங்கள் ஊழலையும் மறைக்க முயற்சிக்கிறீர்கள். நீங்கள் வளர்ச்சி பற்றிப் பேச வேண்டும். நாங்கள் உங்களை அம்பலப்படுத்துவோம், உங்கள் தவறுகளை அம்பலப்படுத்த ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்வோம் என்று பேசியுள்ளார்.

    மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான ரூ.2000 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை பணி நாளாக செயல்படும்.
    • வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணைப்படி செயல்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.

    சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் நாளை அரசு, தனியார் உள்பட அனைத்துக் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் ((அரசு/ அரசு உதவிபெறும் / ஆதி திராவிட /சென்னை/ தனியார் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி ) நாளை (மார்ச் 22) அன்று பணி நாளாக செயல்படவும் மற்றும் வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணைப்படி செயல்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.
    • பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள்

    இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தின்போது மாநிலங்களவையில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அவர் பேசியதாவது, முதலில், நான் காஷ்மீரைப் பற்றிப் பேசுகிறேன். அண்டை நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்தனர். அவர்கள் இங்கு குண்டுவெடிப்புகளையும் கொலைகளையும் அரங்கேற்றினர். எந்த கவலையும் இல்லாமல் ஒரு பண்டிகையைக் கூட காஷ்மீர் மக்கள் கொண்டாட முடியவில்லை.

    இந்த விவகாரத்தில் முந்தைய மத்திய அரசு நெகிழ்வான அணுகுமுறையைக் கொண்டிருந்தது. அவர்கள் அமைதியாக இருந்தனர், பேசுவதற்கு பயந்தனர். அவர்கள் தங்கள் வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்பட்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் காட்டினோம்.  

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் உரி மற்றும் புல்வாமாவில் தாக்குதல்கள் நடந்தன. 10 நாட்களுக்குள், நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.

     

    எங்களின் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை அங்கிருந்து தொடங்கியது. காஷ்மீரில் பிரிவினைவாதத்திற்கான அடிப்படையாக பிரிவு 370 இருந்தது. ஆனால் பிரிவு 370 ஆகஸ்ட் 5, 2019 அன்று எங்கள் அரசால் நீக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைப்பதை உறுதி செய்தது. தற்போதைய நிர்வாகம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எந்தவொரு அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.

    நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைகளை வலுப்படுத்த உயர்ந்த தியாகத்தைச் செய்த ஆயிரக்கணக்கான மாநில காவல்துறை மற்றும் மத்திய துணை ராணுவப் படை வீரர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும்  பேசிய அமித்ஷா "தான் பயங்கரவாதிகளை தூரத்திலிருந்து கூட பார்க்கிறேன்" என்று ஒருவர் (ராகுல் காந்தி காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது) கூறினார். பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள் என்று விமர்சித்தார். மேலும் நக்சல் பிரச்சனை குறித்து பேசிய அமித் ஷா, இடதுசாரி பயங்கரவாதம், மார்ச் 31, 2026க்குள் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

    போதைப்பொருள், சைபர் குற்றம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் ஹவாலா போன்ற மாநிலங்களுக்கிடையேயான மற்றும் வெளிநாட்டில் இருந்து நடக்கும் குற்றங்களை தடுக்க உள்துறை அமைச்சகத்தில் (அதிகார வரம்பில்) பல மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்றும் அமித் ஷா பேசினார்.

    • ஏற்கனவே அரசு டெண்டர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இருந்து வருகிறது.
    • பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர்.

    அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது கடும் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு மசோதா நகலை கிழித்து சபாநாயகர் யுடி காதர் மீது வீசி பரபரப்பை கிளப்பினர்.

    கடந்த மாதம், முஸ்லிம் எம்எல்ஏக்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி முதல்வர் சித்தராமையாவிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தது. இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் சித்தராமையாவின் காங்கிரஸ் அரசு இதுதொடர்பாக புதிய மசோதாவை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்துள்ளது.

    ஏற்கனவே அரசு டெண்டர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இருந்து வரும் நிலையில் அதோடு சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடும் சேர்க்கப்பட்டுள்ளதில் எந்த தவறும் இல்லை என அரசு வாதிடுகிறது. ஆனால் எதிர்க்கட்சியான பாஜக, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று போராடி வருகிறது.

     

    இந்த நிலையில்தான் இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதரின் இருக்கை முன்பு திரண்டு கோஷமிட்டனர்.

    அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் வழங்கும் மசோதா நகலை கிழித்து அவர் மீதுவீசினர். சில பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர். இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் பாஜக எம்எல்ஏக்களை வலுக்கட்டமையாக அவையை விட்டு வெளியேற்றும் சூழல் ஏற்பட்டது.

    • மத்திய அரசு கூறியபடி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் 1 அல்லது குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.
    • வட இந்தியாவில் உள்ளவர்களோ பன்னி குட்டி போடுவதை போல குழந்தைகளை பெற்று மக்கள் தொகையை உயர்த்தினர்.

    வட இந்திய சகோதர, சகோதரிகளை அவமானப்படுத்தும் விதமாக அமைச்சர் அன்பரசன் பேசியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு கூறியபடி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் 1 அல்லது குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். ஆனால் வட இந்தியாவில் உள்ளவர்களோ பன்னி குட்டி போடுவதை போல குழந்தைகளை பெற்று மக்கள் தொகையை உயர்த்தினர் என்று அமைச்சர் அன்பரசன் பேசியுள்ளார்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன் பேசிய வீடியோவை தனது எக்ள் தள பக்கத்தில் பதிர்ந்துள்ள அண்ணாமலை பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

    எல்லை நிர்ணயம் குறித்த தனது மாயையான நாடகத்தை நடத்தும்போது, திமுக அமைச்சர் த.மு. அன்பரசனின் இந்த உரையை தனது இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டாளிகளுக்கு அவர் ஒளிபரப்புவார் என்று நம்புகிறோம்.

    இது வட இந்திய சகோதர சகோதரிகளை அவமதிக்கவும் துஷ்பிரயோகம் செய்யவும் திமுக அமைச்சர்கள் கூட்டு முடிவை எடுத்தது போல் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    • சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.
    • கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது.

    உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் சதார் பஜாரில் சமீபத்தில் 100 வருட பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழும் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது.

    இந்த வீடு சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.

    இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், பஜார் வழியாக மக்கள் நடந்து செல்வதும், அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்து, அந்த இடத்தில் புகை மேகம் சூழ்வது பதிவாகி உள்ளது.

    கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இடிபாடுகளில் சிக்கி அந்த நாய் உயிரிழந்தது. இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.     

    • டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • ஹோலி கொண்டாட்டத்தின் போது நீதிபதி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் யஸ்வந்த் வர்மா. இவர் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இதனால் அவர் டெல்லியில் ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    சமீபத்தில் நீதிபதி யஸ்வந்த் வர்மா வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது அவரது வீட்டில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவி மாடிக்கும் பரவியது. இதனால் அவர்கள் குடும்பத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு படை வீரர்கள் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. பிறகு தீயணைப்பு படை வீரர்கள் நீதிபதி வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று முழுமையாக தீ அணைக்கப்பட்டு விட்டதா? என்று ஆய்வு செய்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் ஆய்வின்போது அறைகளில் சில பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதை கண்டதும் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இதுபற்றி விசாரணை நடத்தினார். பிறகு கொலிஜியம் உறுப்பினர்களுடனும் ஆலோசனை செய்தார்.

    அதன் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து யஸ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டார். மீண்டும் அவர் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.

    இதற்கிடையே, நீதிபதி வீட்டில் எரிந்து பணத்தின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    தீயை அணைக்கும் பணியின்போது நீதிபதியின் வீட்டில் கத்தை, கத்தையாக பணம், நகைகளும் இருந்தது தெரியவந்துள்ளது.

    மேலும், தீயணைப்பு வீரர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதில், நீதிபதி வீட்டில் ரூ.11 கோடி பணம் எரிந்து விட்டதாகவும், மேலும் ரூ.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தமிழக டிஜிபிக்கு புகார் அளித்திருந்தார்.

    அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஆனால் அவருடைய பேச்சு அரசியலமைப்பு சட்ட விரோத பேச்சாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • 3 கடைகளில் விற்பனை செய்த தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது.
    • கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    தளி:

    கோடை காலம் தொடங்கி விட்டதால் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் ஆகிய பொருள்கள் பொது மக்களுக்கு தரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என சோதனைகளை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

    அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓசூர், சூளகிரி, தளி கெலமங்கலம் போன்ற பகுதிகளில் உணவு பொருட்கள், பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.

    அதன் தொடர்ச்சியாக தேன்கனிக்கோட்டை பகுதியில் ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முத்து மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் பிரகாஷ் மற்றும் சந்தோஷ் மற்றும் உணவு பகுப்பு ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் இருந்த 3 கடைகளில் விற்பனை செய்த தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைகளில் இருந்து சுமார் 8 டன் அளவில் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து, அதன் கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். 

    ×