என் மலர்tooltip icon

    இந்தியா

    பயங்கரவாதிகளை கண்களில் வைத்திருப்பவர்கள்... காஷ்மீர் விவகாரம் குறித்து அவையில் அமித் ஷா காரசாரம்!
    X

    பயங்கரவாதிகளை கண்களில் வைத்திருப்பவர்கள்... காஷ்மீர் விவகாரம் குறித்து அவையில் அமித் ஷா காரசாரம்!

    • நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.
    • பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள்

    இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தின்போது மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அவர் பேசியதாவது, முதலில், நான் காஷ்மீரைப் பற்றிப் பேசுகிறேன். அண்டை நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்தனர். அவர்கள் இங்கு குண்டுவெடிப்புகளையும் கொலைகளையும் அரங்கேற்றினர். எந்த கவலையும் இல்லாமல் ஒரு பண்டிகையைக் கூட காஷ்மீர் மக்கள் கொண்டாட முடியவில்லை.

    இந்த விவகாரத்தில் முந்தைய மத்திய அரசு நெகிழ்வான அணுகுமுறையைக் கொண்டிருந்தது. அவர்கள் அமைதியாக இருந்தனர், பேசுவதற்கு பயந்தனர். அவர்கள் தங்கள் வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்பட்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் காட்டினோம்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் உரி மற்றும் புல்வாமாவில் தாக்குதல்கள் நடந்தன. 10 நாட்களுக்குள், நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.

    எங்களின் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை அங்கிருந்து தொடங்கியது. காஷ்மீரில் பிரிவினைவாதத்திற்கான அடிப்படையாக பிரிவு 370 இருந்தது. ஆனால் பிரிவு 370 ஆகஸ்ட் 5, 2019 அன்று எங்கள் அரசால் நீக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைப்பதை உறுதி செய்தது. தற்போதைய நிர்வாகம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எந்தவொரு அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.

    நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைகளை வலுப்படுத்த உயர்ந்த தியாகத்தைச் செய்த ஆயிரக்கணக்கான மாநில காவல்துறை மற்றும் மத்திய துணை ராணுவப் படை வீரர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அமித்ஷா "தான் பயங்கரவாதிகளை தூரத்திலிருந்து கூட பார்க்கிறேன்" என்று ஒருவர் (ராகுல் காந்தி காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது) கூறினார். பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள் என்று விமர்சித்தார். மேலும் நக்சல் பிரச்சனை குறித்து பேசிய அமித் ஷா, இடதுசாரி பயங்கரவாதம், மார்ச் 31, 2026க்குள் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

    போதைப்பொருள், சைபர் குற்றம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் ஹவாலா போன்ற மாநிலங்களுக்கிடையேயான மற்றும் வெளிநாட்டில் இருந்து நடக்கும் குற்றங்களை தடுக்க உள்துறை அமைச்சகத்தில் (அதிகார வரம்பில்) பல மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்றும் அமித் ஷா பேசினார்.

    Next Story
    ×