என் மலர்tooltip icon

    இந்தியா

    • சிறுவர்கள் கூட அதில் என்னதான் இருக்கிறது? என்று ருசி பார்க்கும் அளவுக்கு மது கலாசாரம் பெருகிவிட்டது.
    • இந்தியர்களின் குடிப்பழக்கம் முன்பைவிட நிதானமாகவும், ஆரோக்கியம் சார்ந்து மாறி வருவதாகவும் சொல்லப்பட்டு உள்ளது.

    சென்னை:

    உலகளவில் "ஜென்-சி" இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை முற்றிலும் தவிர்ப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    "மது வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு". "மது நாட்டுக்கும், வீட்டுக்கும். உயிருக்கும் கேடு", "மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர்" என்பது போன்ற பல விழிப்புணர்வு வாசகங்களை பெரும்பாலான இடங்களில் பார்க்கிறோம். இவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

    சிறுவர்கள் கூட அதில் என்னதான் இருக்கிறது? என்று ருசி பார்க்கும் அளவுக்கு மது கலாசாரம் பெருகிவிட்டது. இப்படி இருக்கும் சூழலில் "யூரோமானிடர் இன்டர்நேஷனல்" என்ற சந்தை ஆய்வு மற்றும் நுகர்வோர் நுண்ணறிவு நிறுவனம் 'மதுபானங்களுக்கான உலக சந்தை' மற்றும் 'நுகர்வோரின் குரல்' என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.

    இந்த ஆய்வறிக்கை பல விஷயங்களை இந்த உலகத்துக்கு எடுத்துச் சொல்லியுள்ளது. அதிலும் இன்றைய இளம் தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்களா? என்பதற்கான விடையையும் கொடுத்திருக்கிறது.

    இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரேசில், பிரிட்டன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முக்கிய நாடுகளில் இருக்கும் மதுபான சந்தைகளில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. அந்த ஆய்வறிக்கையில், உலகளவில் சட்டப்பூர்வமாக மது அருந்தும் வயதை எட்டியுள்ள 'ஜென்-சி' இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மதுவை அறவே தவிர்க்கிறார்கள். மதுவை தொட்டுக்கூட பார்த்தது இல்லை. மீதமுள்ள 64 சதவீதம் பேர் ஏதாவது ஒரு வகையில் மதுவை ருசிபார்த்தவர்களாகவே இருக்கிறார்கள். மது அருந்துபவர்களில் 53 சதவீதம் பேர் தாங்கள் வாங்கி பருகும் மதுவின் நுகர்வை குறைக்க முயற்சிக்கிறார்கள்.

    இதுமட்டுமல்லாமல், மதுவையும், மதுவற்ற குளிர்பானங்களையும் மாறி, மாறி குடிக்கும் 'ஜீப்ரா ஸ்டிரைபிங்' என்ற கலாசாரத்தை இன்றைய இளைஞர்கள் கையில் எடுத்து இருக்கின்றனர். சமூக ஊடகங்களில் தங்களை பற்றிய பிம்பம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 85 சதவீதம் இளைஞர்கள் பொது இடங்களில் மது குடிப்பதை தவிர்த்து வருகின்றனர்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுமட்டுமல்லாமல், வாரம் ஒருமுறை மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 2020-ல் 23 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ல் அது 17 சதவீதமாக குறைந்திருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. மதுவை தவிர்ப்பவர்களில் 87 சதவீதம் பேர் நீண்டகால உடல்நல அபாயங்களை தவிர்க்க மதுவை அறவே தவிர்ப்பதாகவும், சேமிப்புக்காக 30 சதவீதம் பேர் அதனை தவிர்ப்பதாகவும் கூறியுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இது ஒருபுறம் இருக்க, ஆல்கஹால் இல்லாத பீர் மற்றும் பானங்களின் விற்பனை உலக சந்தையில் ஆண்டுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து வருவதாக புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆய்வறிக்கை உலகளவில் மதுபானங்களை பயன்படுத்துவோரின் சந்தை எண்ணிக்கை குறைந்து வருவதை சுட்டிக்காட்டினாலும், இந்தியாவில் அதன் பாதிப்பு உடனடியாக தெரியவில்லை. ஆனால் இந்தியர்களின் குடிப்பழக்கம் முன்பைவிட நிதானமாகவும், ஆரோக்கியம் சார்ந்து மாறி வருவதாகவும் சொல்லப்பட்டு உள்ளது.

    • அரசு உறுதி அளித்தபடி தலா 2 சென்ட் வீட்டு மனை வழங்குவதற்கு கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும்.
    • மனுதாரர்களுக்கு வீடு கட்டித்தர உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    மதுரை விமானநிலையத்துக்கு கையகப்படுத்திய நிலத்தில் இருந்து மக் கள் 2 வாரத்தில் வெளியேற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    மதுரை அவனியாபுரம் சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த சந்திரா உள்ளிட்ட 130 பேர், மதுரை ஐகோர்ட்டில் 2024-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எங்கள் பகுதியில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான இழப்பீடும் வழங்கினார்கள். ஆனால் விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு நடவடிக்கையை எடுப்பது அரசின் கடமை.

    இதற்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே எங்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்களுக்கு மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, சின்ன உடைப்பு மக்களை அங்கிருந்து வெளியேற்ற தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

    ஆனால் 2008-ம் ஆண்டிலேயே விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கி, பயனாளிகளுக்கு இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்பட்டுவிட்டன. தற்போது 64 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் வீட்டுமனைகள் வழங்கி அதில் வீடுகள் கட்டித்தரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மதுரை விமானநிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்து சின்ன உடைப்பு மக்கள் (அதாவது இந்த வழக்கு தொடர்ந்தவர்கள்) 2 வாரத்தில் வெளியேற வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களை வெளியேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவர்களுக்கு ஏற்கனவே அரசு உறுதி அளித்தபடி தலா 2 சென்ட் வீட்டு மனை வழங்குவதற்கு கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும். அதன்பேரில் மனுதாரர்களுக்கு வீடு கட்டித்தர உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • தி.மு.க. தரப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட 25 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தி.மு.க. வட்டாரங்களில் அறியப்படுகிறது.
    • தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளும் தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

    இதில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகிய 4 பேர் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர்.

    தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே உடல்நலக் குறைவால் பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு. அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை காங்கிரஸ் முன்னிறுத்தி வரும் நிலையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தரப்பில் பேச இருக்கும் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் குறைந்தபட்சம் 35 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்பார் என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. தரப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட 25 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தி.மு.க. வட்டாரங்களில் அறியப்படுகிறது. எனவே, இந்த பேச்சுவார்த்தை இன்றுடன் எளிதாக முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • ஹாலிவுட்டின் மிக பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி.
    • பாராமவுண்ட் ஸ்கைடான்ஸ் நிறுவனம் வாா்னா் பிரதா்ஸை வாங்குவது கிட்டத்தட்ட உறுதியானது.

    புதுடெல்லி:

    ஹாலிவுட்டின் மிக பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் திரைப்பட, தொலைக்காட்சிப் பிரிவுகளையும் அதன் ஸ்ட்ரீமிங் பிரிவையும் வாங்குவதற்காக ஒப்பந்தம் போடப்படும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த ஒப்பந்தம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய்.

    இந்நிலையில், வாா்னா் பிரதா்ஸ் டிஸ்கவரி தயாரிப்பு நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இருந்து விலகுகிறோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

    இதனால், பாராமவுண்ட் ஸ்கைடான்ஸ் நிறுவனம் சுமாா் 11,100 கோடி டாலா் மதிப்பிலான ஒப்பந்தத்தின் மூலம் வாா்னா் பிரதா்ஸை வாங்குவது கிட்டத்தட்ட உறுதியானது. சிஎன்என் உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்பட ஸ்டுடியோக்கள் இனி பாராமவுண்ட் ஸ்கைடான்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    பாராமவுண்ட் நிறுவனம் தற்போது குறிப்பிட்டுள்ள விலைக்கு வாா்னா் பிரதா்ஸை வாங்குவது லாபகரமாக இருக்காது. எங்கள் நிறுவனத்தின் நிதிநிலையைச் சரியாகக் கையாள வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்தோம் என நெட்பிளிக்ஸ் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் எல்சிஎச் பிரசாந்த்.
    • ராணுவ ஹெலிகாப்டரான பிரசாந்தில் ஜனாதிபதி முர்மு பயணம் செய்தார்.

    ஜெய்ப்பூர்:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விமானப் படைத்தளத்தில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்தில் பயணம் மேற்கொண்டார். குரூப் கேப்டன் நயான் சாந்திலால் பஹுவா உடன் முர்மு ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.

    ஜனாதிபதி முர்மு போர் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றார்.

    இதையடுத்து, இந்தப் பயணம் குறித்து பார்வையாளர் புத்தகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுதிய குறிப்பில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்தில் பறந்து சென்றது சிறந்த அனுபவத்தை அளித்தது. இந்தப் பயணம் நாட்டின் பாதுகாப்புத் திறன் மீது ஒரு புதிய பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த இந்திய விமானப்படை மற்றும் ஜெய்சால்மர் விமானப் படைத்தளத்தின் குழுவுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு அக்டோபரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ரபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
    • இதுதொடர்பாக பேசிய கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் முழு டெல்லியும் பாழடைந்துவிட்டது என்றார்.

    புதுடெல்லி:

    டெல்லி முன்னாள் முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அரசுத்தரப்பு அதன் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது என தீர்ப்பில் குறிப்பிட்டது.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தலைநகர் டெல்லியில் மீண்டும் தேர்தலை நடத்த பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கிறேன். இப்போது தேர்தல் நடந்து, அதில் பா.ஜ.க. 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுவேன் என தெரிவித்தார்.

    பா.ஜ.க. ஆட்சியில் முழு டெல்லியும் பாழடைந்துவிட்டது. இன்று நான் மோடிக்கு சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், டெல்லியில் மீண்டும் தேர்தலை நடத்துங்கள். பா.ஜ.க. 10-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுவேன். நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரும் முழு நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க, அவர்கள் ஒன்றாக இந்த சதியை செய்தனர் என தெரிவித்தார்.

    • மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
    • நாடு முழுவதிலும் 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் ஏப்ரலில் காலியாகின்றன.

    கொல்கத்தா:

    பாராளுமன்றத்தில் மக்களவை, மேல்சபை என 2 அவைகள் உள்ளன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களவை எம்.பி. ஆகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் மூலம் மேல்சபை எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

    மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன.

    இதற்கிடையே, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஒடிசா, அசாம், பீகார், சத்தீஸ்கர், அரியானா, இமாச்சல பிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 37 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் மார்ச் மாதம் 16-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முன்னாள் டிஜிபி ராஜிவ்குமார், மேனகா குருசாமி, கோயல் மாலிக் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    • ஓ.பி.எஸ் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.
    • ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    சென்னை அண்ணா அறிவாலயம் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதை தொடர்ந்து அவர் தலைமை செயலகம் சென்று சட்டசபை செயலாளரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். இவருடன் ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், அவரது காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படமும், காரின் முன்பகுதியில் திமுக கொடியும் பொருத்தப்பட்டுள்ளது.

    • தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ரூ. 200 தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

    குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான கட்டணம் செலுத்தாத சில தேர்வர்களுக்கு வரும் மார்ச் 5ம் தேதி வரை தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதன்மைத் தேர்விற்குத் தகுதி பெற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ரூ. 200 தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

    இந்நிலையில், தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்ட விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

    எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது ஒரு கூடுதல் அவகாசம் என்பதால், கடைசி நேரத் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்க முன்கூட்டியே பணிகளை முடிப்பது நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனைவரும் 200 சதவீதம் தேர்தல் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
    • விசைத்தறி 100 யூனிட் மின்சாரம் நிறைவேற்றியுள்ளோம்.

    கோவை மாவட்டம் நீலாம்பூரில் நடைபெறும் மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாசக்கார கோவை மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சந்தித்த அனைவரும் நாம் தான் வெற்றி பெறுவோம் என கூறினார்.

    நான் இன்று சந்தித்த கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் 200 சதவீதம் தேர்தல் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

    செந்தில் பாலாஜியின் ஆற்றல் தான் எதிரிகளின் தூக்கத்தை கெடுக்கிறது. இவர் எதிராளிகளுக்கு சிம்மசொப்பனம்.

    நெருக்கடிகளுக்கு அடிபணியாமல் நெஞ்சுரத்துடன் கட்சிக்கும் நாட்டிற்கும் செந்தில் பாலாஜி பணியாற்றுகிறார்.

    நான் இங்கு வந்தது உங்களை உற்சாகப்படுத்த மட்டுமல்ல உங்களை பார்த்து நான் உற்சாகமடையத்தான்.

    திமுக கூட்டணி வெற்றி பெற்றது என வாக்கு எண்ணிக்கை நாளில் Flash News வரவேண்டும்.

    பல்வேறு இடர்பாடுகளை கடந்து அத்திக்கடவு- அவினாசி திட்டம், அவினாசி சாலை மேம்பாலம், விசைத்தறி 100 யூனிட் மின்சாரம் நிறைவேற்றியுள்ளோம்.

    கடந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, அதனை இம்முறை மாற்றிக்காட்ட வேண்டும்.

    உலகத்தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம், தொல்லியல் ஆய்வு, தோழி விடுதி, புதிய இ-பஸ் திட்டங்கள் வரவிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குற்றவாளிகள் இருவரும் ஆத்திரமடைந்தனர்.
    • உங்கள் வீடு எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும், உங்களை விடமாட்டோம்.

    2024 ஆம் ஆண்டு கார் ஏற்றி ஒருவரை கொலை செய்த வழக்கில், உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நிஜேந்திர குமார் இன்று தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெய்தீப் மற்றும் பிந்து சவுகான் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தவுடன், குற்றவாளிகள் இருவரும் ஆத்திரமடைந்து நீதிமன்ற அறையிலேயே நீதிபதியை மிரட்டனர்.

    "உங்கள் வீடு எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும், உங்களை விடமாட்டோம்" என்று அவர்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர்.

    குற்றவாளிகளின் இந்த மிரட்டலைத் தொடர்ந்து, நீதிபதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சங்க்ராம் சிங் தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றதிலேயே நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள் மீது கூடுதல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.   

    • தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக அதிகாரிகள் நிலநடுக்கத்தால் பீதியடைந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர்
    • சிக்கிம் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    வங்கதேசத்தில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் மேற்கு வங்கத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது.

    இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் சுமார் 1:30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டாக்காவிலிருந்து 188 கி.மீ தொலைவில், 9.8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் நில அதிர்வு காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

    நிலநடுக்கத்தின் போது வீடுகளில் இருந்த மின்விசிறிகள், சோபாக்கள் ஆடியதாகவும், மேஜையில் இருந்த பாட்டில்கள் கீழே விழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

    கொல்கத்தாவில் மாநில தலைமை செயலகம், சட்டமன்றம் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிலநடுக்கத்தால் பீதியடைந்தனர். அச்சத்தில் அவர்கள் தெருக்களுக்கு ஓடி வந்தனர்.

    மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

    முன்னதாக மதியம் 12:02 மணியளவில் சிக்கிம் மாநிலத்தின் நாமச்சி பகுதியிலும் ரிக்டர் அளவில் 2.7 கொண்ட சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, இந்த நிலநடுக்கங்களால் பெரிய அளவிலான உயிரிழப்புகளோ அல்லது கட்டிட சேதங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.  

    ×