search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் 'கே.ஜி.எப் -2'
    • இப்படத்தின் அடுத்த பாகத்திற்கான பணியில் இயக்குனர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.

    பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'கேஜிஎப்-2'. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது.


    கே.ஜி.எப்

    இந்நிலையில், 'கேஜிஎப்-2' திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவுற்றுள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. அந்த பதிவில், 'கேஜிஎப் 2 மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் நம்மை கலைத்துவமிக்க பயணத்தில் அழைத்து சென்றது. ரெக்கார்டுகளை தகர்த்தது. பார்வையாளர்களின் இதயங்களை வென்றது' என குறிப்பிட்டுள்ளது.


    கே.ஜி.எப்

    மேலும், இதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவின் 36-வது நொடியில் '1978-81 வரை ராக்கி எங்கே இருந்தார்?' என அடுத்த பாகத்திற்கு ஹிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    இயக்குனர் பிரசாந்த் நீல் 'கேஜிஎப் -3' திரைக்கதை பணியில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கே.கே’.
    • இப்படத்தின் முதல் பாடலை இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    ரெட்டச்சுழி, சாட்டை திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த யுவராஜா 'கெளுத்தி' என்ற திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து குழந்தைகளின் வாழ்வியலை கதைக்களமாக கொண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார்.


    கே.கே

    கலர் காத்தாடி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு 'கே.கே' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் பேபி.சஞ்சனா மற்றும் மிதுன் ஈஸ்வர் குழந்தை நட்சத்திரங்களாய் களமிறங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலை இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


    கேகே

    இப்பாடலை இயக்குனர் யுவராஜா எழுத, ஜித்தின் கே ரோஷன் இசையமைப்பில் விஜய் டிவி புகழ் ரிஹானா மற்றும் சர்வேஷ் பாடியுள்ளனர். மேலும், 'கே.கே' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பாடலை 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்து செவகாட்டு சீமையிலே என்ற பாடலை பாடிய பின்னணி பாடகர் குரு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம்.
    • இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    டிடி ரிட்டன்ஸ் போஸ்டர்

    ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒஎப்ஆர்ஒ இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'டிடி ரிட்டன்ஸ்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • பார்த்திபன் ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பார்த்திபன்

    இந்நிலையில், இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "புத்தாண்டு வாழ்த்துகள் எனக்கான உங்களுக்கு!ஆனால், புத்துயிர் பிறந்ததே இன்று(14/04/1989)தான் 'உங்கள் பார்த்திபனா'ன எனக்கு! விடியாத பொழுதுகளாய்,பொழுதுகள் விடிந்துக் கொண்டிருந்த அப்பொழுதுகளில்,நல்வாழ்வின் விடியல் பொழுதாய் மலர்ந்தது இப்பொழுது அப்பொழுது மறக்க முடியாத நாள் என் வாழ்வில்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா -2’ திரைப்பட வேலையில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
    • இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    காந்தாரா

    கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இயக்குனர் ரிஷப் ஷெட்டி கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்துள்ளார்.


    ரிஷப் ஷெட்டி - பசவராஜ் பொம்மை

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"கொல்லூரில் முகாம்பிகை தரிசனம் செய்ய சென்ற போது முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்தேன், எனக்கு அரசியல் சாயம் வேண்டாம், காந்தார எழுத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன், உங்கள் அனைவரின் அன்பும் வரமாக அமையட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    வரவிருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக நடிகர் கிச்சா சுதீப் பிரசாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம்.
    • இவர் தற்போது ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தில் நடித்துள்ளார்.

    1990-ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்ரம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த விக்ரம், இரட்டை இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான உல்லாசம் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் தடம் பதித்தார். இதனை தொடர்ந்து பாலா இயக்கிய சேது படத்தில் இவரின் நடிப்பு மூலம் தமிழ் திரையுலகினரை திரும்பி பார்க்க செய்தார்.


    விக்ரம்

    தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் விக்ரம், நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர் என பண்முகத்தன்மை கொண்டவர். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வருகிற 28-ஆம் தேதி வெளியாகவுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    டோனி -விக்ரம்

    இந்நிலையில், நடிகர் விக்ரம், இந்திய கிரிக்கெட் வீரர் டோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "நீங்கள் எப்போதும் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த தவறியதில்லை மகி" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.


    சார்பட்டா பரம்பரை

    1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.



    சார்பட்டா பரம்பரை போஸ்டர்

    இந்நிலையில், 'சார்பட்டா பரம்பரை' சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அதாவது, இப்படம் 2023-ஆம் ஆண்டு மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் இரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பொன்னியின் செல்வன் -2

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படமாக 'பொன்னியின் செல்வன் -2' வெளியாகவுள்ளது.
    பொன்னியின் செல்வன் -2 போஸ்டர்
    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் ஆந்தம் வருகிற 15-ஆம் தேதி அண்ணா பல்கலை கழகத்தில் மாலை 7 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • ஹாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்னால்ட்.
    • இவரின் செயலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஆக்ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய 'டெர்மினேட்டர்' படம் மூலம் பிரபலமான அர்னால்ட் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளார். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள முக்கிய சாலையில் மிக பெரிய குழி ஏற்பட்டிருந்தை சீர் செய்ய உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார்.


    சாலையை சீரமைக்கும் அர்னால்ட்

    ஆனால், நகரின் நிர்வாகம் சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தானே நேரடியாக களமிறங்கி சாலையில் இருந்த பள்ளத்தை சீர் செய்துள்ளார். இந்த சீரமைப்பு பணிகள் தொடர்பான விடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அர்னால்ட், "பல வாரங்களாக கார்கள், சைக்கிள்களை சிதைத்து கொண்டிருக்கும் இந்த பள்ளத்தால் இப்பகுதி மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். நான் எனது குழுவினருடன் சென்று இந்த பள்ளத்தை சீர் செய்துள்ளேன். எப்போதும் புகார் கூறி கொண்டு இருக்க வேண்டாம். அதற்கு பதிலாக நீங்களே ஏதாவது செய்து விடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், "இரத்த அழுத்தத்தை சரி செய்ய இது சிறந்த சிகிச்சை" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • ஓ மை கடவுளே படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்தவர் வாணி போஜன்.
    • தற்போது வாணி போஜன் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    சின்னத்திரை சீரியகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் வாணி போஜன். சீரியலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 2020ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதன்பின்னர் லாக் அப், மிரள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


    வாணி போஜன்

    வாணி போஜன்

    இந்நிலையில் வாணி போஜனின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புடவையில் இருக்கும் வாணி போஜன் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'திருவின் குரல்'.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'திருவின் குரல்'. இப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.


    திருவின் குரல்

    இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான 'வா தாரகையே' பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி்யுள்ளது. இதனை இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.


    திருவின் குரல் போஸ்டர்

    'திருவின் குரல்' திரைப்படம் நாளை (ஏப்ரல் 14 ) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகின.
    • இதைத்தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பை சுந்தர். சி தொடங்கியுள்ளார்.

    சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    அரண்மனை -3

    இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி அரண்மனை -4 திரைப்படத்துக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மூன்றாம் பாகத்தில் நடித்திருந்த ராஷி கண்ணா, இந்த பாகத்திலும் இணைந்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புடப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    அரண்மனை -4 படப்பிடிப்பு தளத்தில் ராஷி கண்ணா 

    அதுமட்டுமல்லாமல் அரண்மை -4 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக இணைந்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து தற்போது தமன்னாவும் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


    ×