செய்திகள்

பள்ளிபாளையத்தில் மில் ஊழியர் கடத்தி கொலை செய்யப்பட்டது எப்படி?: கைதானவர்கள் வாக்குமூலம்

Published On 2017-06-27 11:10 GMT   |   Update On 2017-06-27 11:10 GMT
பள்ளிபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மில் ஊழியர் கடத்தி கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அருகே உள்ள கூத்தம் பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35).

இவர் பள்ளிபாளையம் அருகே நெட்டவேலம் பாளையத்தில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மலர்க்கொடி (30) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி ராமச்சந்திரன் திருச்செங்கோடு நெட்டவேலம்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் தலை நசுங்கியும், கால்கள் துண்டாகியும் கத்தியால் குத்தப்பட்டும் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த வழக்கை பள்ளிப்பாளையம் போலீ சாருக்கு மாற்றப்பட்டு அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராமச்சந்திரன் சம்பவத்தன்று இரவு அவரது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஏ.டி.எம். மையங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் ராமச்சந்திரனின் ஏ.டி.எம் கார்டை வெப்படை சின்னார்பாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி கவுரிசங்கர் என்பவர் பணம் எடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கவுரிசங்கர் திடுக்கிடும் தகவல்களை கூறினார்.

கடந்த 18-ந் தேதி இரவு ராமச்சந்திரன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல பஸ் இல்லாமல் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் லிப்ட் கேட்டு ஏறி திருச்செங்கோட்டுக்கு வந்தார். அங்கிருந்து பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் அவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆனங்கூர் ரெயில்வே கேட்டில் நான் மற்றும் பிளஸ்-2 மாணவர் உள்பட 5 சிறுவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அங்கு வந்த ராமச்சந்திரனை நாங்கள் வழிமறித்து குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டோம்.

அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை தாக்கி எங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு நெட்டவேலாம்பாளையம் ரெயில்வே தண்டவாளம் பகுதிக்கு கொண்டு சென்றோம். அங்கு வைத்து அவரை சரமரியாக தாக்கினோம்.

அப்போது மயக்க நிலையில் கிடந்த அவரிடம் இருந்து அரை பவுன் மோதிரம், செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டும், கார்டின் ரகசிய எண்ணையும் வாங்கி கொண்டு ஐ.சி.எல். அருகே உள்ள ஏ.டி.எம்.மில் ரூ.16 ஆயிரத்து 600 பணத்தை எடுத்து கொண்டேன்.

பின்னர் அங்கிருந்து டாஸ்மாக் சென்று பீர்பாட்டில்களை வாங்கி கொண்டு வந்து 5 பேரும் குடித்தோம்.

பின்னர் நாங்கள் அவரை வெளியில் விட்டால் நடந்த சம்பவத்தை போலீசில் கூறவிடுவார் என்று பயந்து ராமசந்திரனை கத்தியாலும், பீர்பாட்டிலாலும் குத்தி கொலை செய்து உடலை தண்டவாளத்தில் போட்டோம்.

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் ராமசந்திரன் உடல் மீது ஏறியதால் தலை துண்டானது. மேலும் வெறி அடங்காமல் நாங்கள் உடல் மற்றும் முழுமையாக இருந்ததை கண்டு கால்கள் துண்டாகும் வகையில் தண்டவாளத்தில் கிடத்தினோம்.

சிறிது நேரம் கழித்து வந்த மற்றொரு ரெயில் அந்த உடலில் இருந்த 2 கால்களையும் துண்டாகியது. பின்னர் நாங்கள் அங்கிருந்து தப்பி சென்றோம். பணம் எடுக்கும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் நான் மாட்டிக் கொண்டேன்.

இதையடுத்து கவுரிசங்கர் கொடுத்த தகவலின் பேரில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பிளஸ்-2 மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான கவுரிசங்கர், சசிகுமார் ஆகிய 2 பேரையும் சேலம் மத்திய சிறையிலும், பிளஸ்-2 மாணவர் விக்னேஷ், ஜீவா, சேலம் சீர்த்திருத்த பள்ளியிலும், சண்முக சுந்தரத்தை பரமத்திவேலூர் சீர்த்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.
Tags:    

Similar News