செய்திகள்
தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

2004 -2014 பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்ன? ராகுல் காந்தி விளக்கம்

Published On 2019-10-18 12:56 GMT   |   Update On 2019-10-18 12:56 GMT
அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், 2004 -2014 பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சண்டிகர்:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் உள்ளார். கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அவர் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் மே 2-ம் தேதி ஒருநாள் மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி அவர் அந்த தொகுதிக்கு சென்று ஒரே ஒரு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசினார். அதன்பின் எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மீண்டும் சோனியா பொறுப்பேற்றார்.

அரியானா, மகாராஷ்டிரா ஆகிய இரு மாநில சட்டசபை தேர்தலுக்காக சோனியா பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, அரியானா மாநிலம் மகேந்திரகர் நகரில் இன்று பிரச்சாரம் செய்ய சோனியா ஒத்துக்கொண்ட நிலையில், அவரது பயணம் திடீரென ரத்துசெய்யப்பட்டது. அவருக்கு பதில் ராகுல் பங்கேற்று பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அரியானா மாநிலம் மகேந்திரகர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. மோடி தலைமையிலான பாஜக அரசு உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்பி வருகிறது.

2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் 100 வேலை நாள் திட்டம் மற்றும் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டது ஆகியவையே.

இன்றைய ஊடகங்கள் நாட்டில் நடக்கும் உண்மையான நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லை. சொன்னால் அவர்களது வேலை பறிபோய் விடுகிறது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News