செய்திகள்
சபாநாயகர் ரமேஷ்குமார்

கடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு

Published On 2019-07-18 14:02 GMT   |   Update On 2019-07-18 14:02 GMT
காங்கிரஸ், பாஜகவினர் இடையே ஏற்பட்ட கடும் அமளியால் கர்நாடக சட்டசபையை நாளை காலை 11 மணி வரை சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்திவைத்தார்.
பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று கூடிய சட்டப்பேரவையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவின்றி அரசியல் அமைப்புக்கு எதிராக இருப்பதால் விளக்கம் பெறும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது. மேலும் தங்களது எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்தி விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதனால் பாஜகவினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அவை அரைமணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் வேண்டுமென்றே  வாக்கெடுப்பை தாமதம் செய்வதாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அவை கூடியபோது ஆளுநர் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த பரிசீலிக்குமாறும், அவை நம்பிக்கையை எப்போதும் முதலமைச்சர் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் பேரவையில் ஏற்பட்ட கடும் அமளியால் கர்நாடக சட்டப்பேரவையை நாளை காலை 11 மணி வரை சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்திவைத்தார். காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

சபாநாயகர் திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதம் செய்தாக பா.ஜ.க  எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர். இன்று இரவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அறிவுறுத்திய நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News