search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி குமாரசாமி"

    கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை வரைக்கும் பதவியில் இருப்பார் என பா.ஜ.க தலைவர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.
    பெங்களூர்:

    பாராளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 300 இடங்கள் வரையில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 பாராளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. 25 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே கர்நாடாகவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் இடையே பஞ்சாயத்து தொடர்ந்து வரும் நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்பு பா.ஜ.க.வை உற்சாகம் அடைய செய்துள்ளது. 

    மாநிலத்தில் ஆட்சியை கலைப்பதற்கு பாராளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்க பா.ஜ.க. டெல்லி தலைமை கூறியதாகவும், அதனால் எடியூரப்பா அமைதியாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பா.ஜனதா தரப்பு தகவல்கள் வெளியாகியது.



    இதற்கிடையே, நாளை தேர்தல் முடிவு வெளியானதும் மாநிலத்தில் ஆட்சியை கலைக்க ஆப்ரேஷன் தாமரையை பா.ஜ.க. முன்னெடுக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சதானந்த கவுடா கூறுகையில், கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலைவரை தான் பதவியில் இருப்பார் என தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலத்தில் புதிய அரசை அமைக்க பா.ஜ.க. தயார் நிலையில் உள்ளது. முதல் மந்திரியாக இருக்கும் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலைவரை தான் பதவியில் இருப்பார், அவரால் இரவு தூங்கவே முடியாது. அவர்களின் கூட்டணியில் பிளவு ஏற்படுவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.
    கர்நாடகம் மாநில முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமார்சாமியின் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #Kumaraswamy
    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடகம் மாநில முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    அவர்கள் ஹெலிகாப்டரில் இருந்த பைகள் மற்றும் முதல் மந்திரி அமர்ந்துள்ள சீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் சோதனை செய்தனர். #LokSabhaElections2019 #Kumaraswamy
    கர்நாடக அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை கண்டித்து முதல் மந்திரி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #Kumaraswamy #PMModi #ITRaid
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ். கட்சி சார்பில் குமாரசாமி முதல் மந்திரியாக ஆட்சி செய்து வருகிறார். 

    இதற்கிடையே, நுண்ணுயிர் பாசனத்துறை மந்திரி சிஎஸ் புட்டாராஜூ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமான வரித்துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். அவர்கள் எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். இது அரசியல் பழிவாங்கும் செயல். இதனால் எங்களை அடிபணிய வைக்க முடியாது என பதிவிட்டு இருந்தார்.



    இந்நிலையில், கர்நாடகம் மாநிலத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தின் முன்னால் முதல் மந்திரி குமாரசாமி, துணை முதல் மந்திரி பரமேஸ்வரா மற்றும் ஜே.டி.எஸ். கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். #Kumaraswamy #PMModi #ITRaid
    எம்.எல்.ஏ.வுடன் பேரம் பேசிய ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி சவால் விடுத்துள்ளார். #Kumaraswamy #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. தொடர்ந்து சதிசெய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி இருந்தனர்.
     
    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை விலைக்கு வாங்க பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக மிக உயர்ந்த பரிசை அவர்களுக்கு தர பா.ஜ.க. காத்திருப்பதாகவும் முதல் மந்திரி குமாரசாமி, கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.

    இதற்கிடையே, முதல் மந்திரி குமாரசாமி சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவுக்கு மந்திரி பதவியும், ரூ. 50 கோடியும் தருவதாக எடியூரப்பா ஆசை வார்த்தை கூறி பேசிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.



    இந்நிலையில், ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.

    முதல் மந்திரி குமாரசாமி கர்நாடக மாநிலம் தென்பகுதியில் அமைந்துள்ள புனிதத்தலமான தர்மஸ்தலாவுக்கு இன்று சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன். அந்த ஆடியோவில் எடியூரப்பாதான் பேசியுள்ளார். அவர் தான் பேசவில்லை, அது மிமிக்ரி என்பதை நிரூபிக்கட்டும். நான் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன் என தெரிவித்துள்ளார். #Kumaraswamy #Yeddyurappa
    கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaBypoll #Kumarasamy
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி 4 -1 என்ற கணக்கில் வென்றது.  

    இந்நிலையில், கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணிக்கு கிடைத்த தார்மீக வெற்றி. கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி நீடிக்காது எனக்கூறிய பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர்.



    காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலின்போது 28 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு. அதன் முதல் படிதான் இந்த வெற்றி.

    மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த வெற்றியால் அத்துமீறி செயல்படுபவர்களாக மாறமாட்டோம். தங்கள் கூட்டணி தொடர்பான பாஜக குற்றச்சாட்டை மக்கள் நிராகரித்து உள்ளனர் என தெரிவித்துள்ளார். #KarnatakaBypoll #Kumarasamy 
    கர்நாடகம் மாநில தலைநகரான பெங்களூருவுக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில முதல் மந்திரி குமாரசாமியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். #RahulGandhi #Kumaraswamy
    பெங்களுரு:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகம் மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவன ஊழியர்களை சந்திக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், கர்நாடகம் மாநில தலைநகர் பெங்களூருவில் தங்கிய ராகுல் காந்தி, திடீரென அம்மாநில முதல் மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசினார்.

    இருவரும் கர்நாடகம் மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #RahulGandhi #Kumaraswamy
    கர்நாடகத்தில் எங்கள் ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அரசியல் நிலைமை சீராக உள்ளதாகவும் கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூறினார். #Kumaraswamy
    தூத்துக்குடி:

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல் மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் எங்கள் ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும். எங்கள் தரப்பில் இருந்து 18 எம்.எல்.ஏ.க்கள் சென்றதாக கூறுவது தவறான தகவல். கர்நாடக அரசியல் நிலைமை சீராக உள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதா நடத்தும் தாமரை ஆபரேசன் குறித்து எங்களுக்கு கவலை இல்லை.



    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தூத்துக்குடி வந்த முதல் மந்திரி குமாரசாமி விமான நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, உதவி கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    குமாரசாமி வருகையையொட்டி தூத்துக்குடி விமான நிலையம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய பகுதிகளிலும், குமாரசாமி செல்லும் பாதையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி குமாரசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #KarnatakaFlood #PMModi #Kumaraswamy
    புதுடெல்லி:

    கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால், பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இங்குள்ள முக்கொட்லு, காட்டக்கேரி, ஆலேறி, மக்கந்தூர் ஆகிய கிராமங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மண்சரிவால் ஏற்கனவே குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே, ஜோடுபாலா பகுதியில் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், கடலோர காவல்படையினர் உள்பட பலர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முதல் மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி குமாரசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், வெள்ள பாதிப்புகள் குறித்து கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன். வெள்ளம் பாதித்த கர்நாடகாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #KarnatakaFlood #PMModi #Kumaraswamy
    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு விமான கண்காட்சி மாற்றப்படுவது ஏன் என முதல் மந்திரி குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். #Kumaraswamy #AeroShow
    பெங்களூரு:

    உலக அளவில் பிரபலமான இந்திய விமானத் தொழில் கண்காட்சி, 1996-ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூரு ஹெப்பாளில் உள்ள விமானப் படைத் தளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்துள்ளது.

    இதற்கிடையே, இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு மாற்றப்பட  உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த அறிவிப்புக்கு கர்நாடகம் மாநில முதல் மந்திரி குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் ஹுப்ளியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், விமான கண்காட்சியை பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவுக்கு இடம் மாற்றுவது சரியல்ல. இதன்மூலம் கர்நாடக மாநிலத்தை அலட்சியப்படுத்துவது ஏற்புடையதல்ல. 

    பெங்களூருவில் விமான கண்காட்சியை நடத்துவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நிறைந்துள்ளது. இந்த கண்காட்சியை மாற்றும் முடிவை மத்திய அரசு எடுத்தது ஏன் என தெரியவில்லை. இங்குள்ள பாஜக சகோதரர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றார் குமாரசாமி. #Kumaraswamy #AeroShow
    கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார். #KeralaFloods #KeralaRain #Kumarasamy
    பெங்களூரு:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 22-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கேரளாவில், கனமழை பெய்துவரும் இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணையான இடுக்கி அணை திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், மழையால் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மழை வெள்ள நிவாரணங்களுக்காக அம்மாநிலத்துக்கு ரூ.10 கோடி அளிக்கப்படும். மேலும் கேரளா மாநிலத்துக்கு தேவையான நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #Kumarasamy
    விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி குமாரசாமி, ஆலகால விஷத்தை விழுங்கிய சிவபெருமானை போல் தவிக்கிறேன் என கண் கலங்கியப்டி பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #Kumaraswamy
    பெங்களூரு:

    சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அளித்தது.

    இதையடுத்து, மதச்சார்பற்ற கட்சி தலைவர் குமாரசாமி காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி குமாரசாமி, ஆலகால விஷத்தை விழுங்கிய சிவபெருமானை போல் தவிக்கிறேன் என கண் கலங்கியப்டி பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் விவசாய கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல் மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    சிவபெருமான் ஆலகால விஷத்தை விழுங்கி விட்டு தவிப்பது போல் நானும் தவித்து வருகிறேன். நான் முதல் மந்திரியாக இருப்பதில் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை.

    முதல் மந்திரி பதவியால் எனக்கு நெருக்கடிகள் அதிகமானால் எந்த நேரத்திலும் பதவி விலக நான் தயாராக உள்ளேன். ஆட்சி, அதிகாரத்துக்காக நானில்லை. விவசாயிகளையும் அவர்களது கடனையும் தள்ளுபடி செய்யவே முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளேன்.

    விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் எந்த மாநிலத்துக்கும் விருப்பம் இல்லை, அக்கறை இல்லை. ஆனால் நான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

    குமாரசாமி பேசியபோது அவரது கண்கள் கலங்கியது. அடிக்கடி அவர் கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு பேசியதை கண்ட கூட்டத்தினர், உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    காவிரி விவகார ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. #Kumaraswamy #KarnatakaAllparty #CauveryIssue
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இதில் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்தார். அதன்படி  பெங்களூரு விதான சவுதாவில் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், நீர்வளத்துறை சார்ந்த அதிகாரிகள், எம்.பி.க்கள், காவிரி படுகையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், கர்நாடக மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    இதுமட்டுமில்லாமல் ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் கர்நாடகா தரப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்படும். காவிரி ஆணையம் அமைக்கவும், மாற்றவும் நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது என கர்நாடகா அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும், வரவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கர்நாடகாவின் அனைத்து எம்.பி.க்களும் காவிரி விவகாரம் குறித்து பிரச்சனை எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக முதல் மந்திரி குமாரசாமி கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகத்திற்கு பாதகமான விதிமுறைகளுக்கு எதிராக போராடுவோம் என தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், கூட்டணி கட்சியின் முக்கிய தலைவருமான சித்தராமைய்யா கலந்து கொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kumaraswamy #KarnatakaAllparty #CauveryIssue
    ×