என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி விவகாரம்"

    • தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா, மாநிலத்தின் நெல் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்கிறது.
    • காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற வேண்டும்.

    சென்னை:

    பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல், தமிழ்நாடு, குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள், தென்மேற்கு பருவமழையின் போது மிகக் குறைவான மழைப்பொழிவைப் பெறுகிறது. குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப்பும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை, குறிப்பாக கர்நாடகாவிலிருந்து வரும் நீரை மட்டுமே சார்ந்துள்ளது.

    மாதாந்திர அட்டவணைப்படி, பிலிகுண்டுலுவில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இந்த உத்தரவை கர்நாடகம் முழுமையாக மதிக்கவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கவில்லை.

    2023-2024-ம் ஆண்டில், 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. கர்நாடகாவில், 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி.-யில், 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு தற்போது உள்ளது. என்ற போதிலும், கர்நாடக அரசு 28.8 டி.எம்.சி அளவிற்கு பற்றாக்குறையாக தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட்டுள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    காவிரி டெல்டாவின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில், 2023, ஆகஸ்ட் 2-ம் நாளன்று நிலவரப்படி, 26.6 டி.எம்.சி. அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. இது குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். குறுவை நெற்பயிர் முதிர்ச்சியடைந்து, அதிக மகசூல் பெற, இன்னும், 45 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது.

    இத்தகைய ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரிடம் கடந்த ஜூலை 5 மற்றும் 19 தேதிகளில் இப்பிரச்சனையை எடுத்துச் சென்று, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த விநியோக அட்டவணையைக் கடைப்பிடிக்க கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறும், இதனை முறையாக கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தினை அறிவுறுத்துமாறும் வலியுறுத்தினோம்.

    இருப்பினும், கர்நாடக அரசு இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், முழுமையாக நிரம்பிய கபினி அணையில் இருந்து மட்டுமே தண்ணீரைத் திறந்து விட்டது. கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் 80 விழுக்காடு அளவிற்கு நிரம்பியுள்ள சூழ்நிலையிலும், அவற்றிற்குத் தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ள சூழ்நிலையிலும், அந்த நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் ஏதும் திறக்கப்படவில்லை.

    தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா, மாநிலத்தின் நெல் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்கிறது. ஏற்கெனவே அரிசித்தட்டுப்பாட்டால், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ள தற்போதைய சூழலில், காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற வேண்டும்.

    அதோடு, உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளபடி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவும் கர்நாடக அரசுக்கு பிரதமர் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இதனை உறுதி செய்வதற்குத் தேவையான அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

    • காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்து இருந்தார்.
    • தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றி முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சித்தராமையாவுக்கு கடிதம்.

    காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது.

    அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. எனினும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இருந்த போதிலும், கர்நாடகா தரப்பில் தண்ணீர் திறந்து விடுவதில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

     

    முன்னதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றி, அம்மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பசவராஜ் பொம்மை அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    அதில், "கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க வேண்டாம். கர்நாடக அணைகளில் உள்ள நீர், பெங்களூரு மற்றும் காவிரி விவசாயிகளுக்கே போதுமானதாக இல்லை. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டால், கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • வருகிற புதன்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை உரிய வாதங்களுடன் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

    பெங்களூரு:

    காவிரி டெல்டா பாசனத்துக்காக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம், 38 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு திறக்கும்படி, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.

    இதற்கு கர்நாடக அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    இந்த நிலையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றியும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதற்காக கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் மந்திரி சபை கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். அவரிடம் தமிழக அரசின் மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி கர்நாடக அணைகளின் நிலவரம் உள்ளிட்டவை குறித்து நாளை(திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இதனிடையே காவிரி நீர் பிரச்சினை, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்துள்ளார்.

    இந்த கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று அறிவித்தார். கூட்டத்தில் மூத்த எம்.பி.க்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

    • டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    • காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்றார்.

    தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க இருந்தனர்.

    இந்நிலையில், காவிரி விகாரம் தொடர்பாக இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-

    காவிரி விவகாரம் தொடர்பாக இன்று மாலை சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, நாளை காலை 9 மணியளவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் சந்திப்பு நடைபெறும்.

    காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் கூறுவதை கூட கர்நாடக ஏற்க மறுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை டெல்லி செல்கிறார்.
    • அவருடன் துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமாரும் நாளை டெல்லி செல்ல உள்ளார்.

    பெங்களூரு:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், காவிரியிலிருந்து கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தர வேண்டிய நீர் குறித்து மத்திய மந்திரியிடம் விளக்கிக் கூறினோம். காவிரியில் கர்நாடக மாநிலத்திடம் போதுமான தண்ணீர் இருந்தும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் நாளை டெல்லி செல்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆலோசிக்கின்றனர். காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தையும் சந்திக்க முடிவு செய்துள்ளனர். கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை பிரதமரிடம் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு வலியுறுத்த உள்ளது.

    • கர்நாடகத்தில் மழை இல்லாதது தான் காவிரி பிரச்சினைக்கு காரணம்.
    • காங்கிரஸ் ஆட்சிக்கும் காவிரி பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை.

    சென்னை:

    கர்நாடக மாநில கைவினை பொருள்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவிரி-கர்நாடக மாநில கலை மற்றும் கைவினை பொருள்கள் விற்பனை மையம் தொடக்க விழா நடைபெற்றது.

    தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மற்றும் கர்நாடக அரசின் சிறு தொழில்கள், பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் சரணபசப்பா தர்ஷனபுர ஆகியோர் கலந்து கொண்டு புதிய கடையை தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து கர்நாடக அமைச்சர் சரணபசப்பா தர்ஷனபுர நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் மழை இல்லாதது தான் காவிரி பிரச்சினைக்கு காரணம்.

    இரண்டு மாநிலங்களும் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக கர்நாடகாவில் 19 மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் ஆட்சிக்கும் காவிரி பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை. கடந்த ஆண்டு மழை இருந்தது. தண்ணீர் பிரச்சினை இல்லை. இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மழை இல்லை. இது தான் பாதிப்புக்கு காரணம்.

    தண்ணீர் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை இரு மாநிலங்களும் அணுகி உள்ளோம். நீதி மன்ற உத்தரவை பின்பற்றுவோம்.

    காவிரி பிரச்சினை தொடர்பாக இரு மாநில அரசுகள் பேச வேண்டிய அவசியம் இல்லை.

    காவிரி பிரச்சினை குறித்து இரண்டு மாநிலங்களுடன் பேச வேண்டியதும், தீர்க்க வேண்டியதும் மத்திய அரசின் கடமை. அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். அந்த பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கே.ஆர்.எஸ். அணையின் நீர்தேக்கத்தை முன்னாள் முதலமைச்சர் குமாரசுவாமி பார்வையிட்டார்.
    • நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில விவசாயிகள் தொடர் போராட்டம்.

    தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடும் விவகாரத்தில், கர்நாடக அரசு காவிரி நீர் மேலான்மை ஆணையத்தை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு தவறி விட்டது என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசுவாமி குற்றம்சாட்டி உள்ளார்.

    இதன் காரணமாகவே காவிரி நீர் மேலான்மை ஆணையம், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கே.ஆர்.எஸ். அணையின் நீர்தேக்கத்தை பார்வையிட்ட குமாரசுவாமி, அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "நீர்தேக்கத்தில் உள்ள நீர் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. இங்குள்ள பயிர்களை காக்க இருமடங்கு நீரை திறந்துவிட வேண்டிய நிலைதான் நிலவுகிறது. எங்களது விவசாயிகள் இதன் காரணமாக எதிர்காலத்தில் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். இங்குள்ள நிலைமை கைமீறிவிட்டது."

    "காவிரி நீர் மேலான்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு அரசு சரியான தகவல்களை வழங்கவில்லை. இந்த அரசாங்கம் காவிரி நீர் மேலான்மை ஆணையத்தை முதல் நாளில் இருந்தே, சமாதானப்படுத்த தவறிவிட்டது. அவர்கள் இந்த விவகாரத்தை எளிதாக நினைத்துவிட்டனர்," என்று தெரிவித்து உள்ளார்.

    தமிழகத்திற்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் கிடைப்பது சிரமமாகவே உள்ளது.
    • தனித்தீர்மானத்தை ஆதரிக்கிறோம். கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெற அதிமுக துணை நிற்கும்.

    காவிரி விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினை 50 ஆண்டுகால பிரச்சினை. காவிரி நீரை பெறுவதற்கான பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் தமிழகத்தின் ஜீவநதி, தமிழகத்தின் உயிர் நாடி.

    20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி உள்ளது. காவிரி நீரை பெறுவதற்காக பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றார்கள்.

    உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும். நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா உரிய முறையில் திறந்து விடுவது தான் நியாயமானது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற வார்த்தையை தீர்மானத்தில் இணைக்க வேண்டும்

    பயிற்கள் கருகிவிட்டது. அதற்கு யார் பொறுப்பு. திமுக எம்.பி.க்கள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றபோது நட்பின் அடிப்படையில் கேட்டிருக்கலாம். எங்களிடம் இருந்த துணிச்சல் ஏன் உங்களிடம் இல்லை.

    தேசிய கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். அதிகமான அழுத்தத்தை கொடுத்தால் தான் தீர்வு கிடைக்கும் என சொல்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    ஒரு ஹெக்டருக்கு ரூ.13,500தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அது போதாது. கர்நாடகாவில் தேசிய கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி புரிகின்றன. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் கிடைப்பது சிரமமாகவே உள்ளது.

    தனித்தீர்மானத்தை ஆதரிக்கிறோம். கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெற அதிமுக துணை நிற்கும்.

    கவனமாக இருந்து தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு மனதோடு செயல்பட்டால் தான் தண்ணீர் கிடைக்கும். அடுத்த 6 மாத குடிநீர் தேவைக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
    • தனித்தீர்மானம் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது.

    தமிழக சட்டசபையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

    இதைதொடர்ந்து, காவிரி நீர் விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

    தீர்மானத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.

    • காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
    • காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழக பாஜக அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2018-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி முயற்சியால் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைத்து வந்தது.

    கர்நாடக மாநிலத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் காவிரி நதி நீரைத் திறந்து விடாமல், திட்டமிட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

    தமிழகத்துக்கும், கேரளா, கர்நாடகா அண்டை மாநிலங்களுக்குமிடையே தீர்க் கப்படாத நதி நீர் பங்கீடு, அணை கட்டும் பிரச்சினை, கடந்த 50 ஆண்டுகளாக நிலவி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சிக்கல்களும், பிரச்சினைகளும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவானவை. இவற்றுக்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முயற்சிக்காமல் வீண் நாடகமாடி நீண்ட காலமாக தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றி வருகிறது.

    கர்நாடகா அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் இருந்தும் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் தி.மு.க. அரசு தண்ணீரைப் பெற்றுத்தர திறனின்றி நடத்துகின்ற போராட்டம் கண்டனத்துக்குரியது.

    பா.ஜ.க.வின் சார்பில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காக கும்பகோ ணத்தில் வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) ஒருநாள் அடையாள உண் ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்.

    இந்த போராட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்குகிறார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

    சென்னை:

    காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கடந்த 9-ம் தேதி அரசின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து நிறைவேற்றிய அந்த தீர்மானத்தில் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பால் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை இப்பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இந்த தீர்மானம் நிறைவேறிய அன்றைய தினமே சட்டசபை செயலகத்தில் இருந்து தலைமைச் செயலாளருக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது.

    அதன்பிறகு தீர்மானத்தின் நகலை முறைப்படி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    • டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் கூடியது.
    • கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

    தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதி நீர் பங்கீடு குறித்து நீண்டகாலமாக சிக்கல் நீடித்து வருகிறது.

    கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா, வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் இன்று தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது

    இந்த கூட்டத்தில், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

    மேலும், இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    ×