செய்திகள்

பாராளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்

Published On 2019-01-31 01:34 GMT   |   Update On 2019-01-31 01:34 GMT
பாராளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட்டை தற்போது நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் நிதி மந்திரி பியூஸ் கோயல் தாக்கல் செய்கிறார். #Budget #PiyushGoyal
புதுடெல்லி:

முழு பட்ஜெட்டா, இடைக்கால பட்ஜெட்டா?

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்தது.

மத்திய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடும் என ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.

உடனே காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. மத்திய அரசு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்தால், அதை எதிர்ப்போம் என காங்கிரஸ் கட்சி கூறியது. அது மட்டும் இன்றி இதில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஏற்கனவே 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது.

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படக்கூடும் என வெளியான ஊடக தகவல்களை மத்திய அரசு நேற்று மறுத்து விட்டது.



இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் நேற்று கூறும்போது, ‘‘ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்தான்’’ என்று தெரிவித்தன.

நிதி மந்திரி பொறுப்பை கவனித்து வந்த அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவால் அமெரிக்கா சென்று, நியூயார்க் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது அங்கு ஓய்வில் இருந்து வருகிறார்.

எனவே தற்போது நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் பியூஸ் கோயல் நாளை (பிப்ரவரி 1-ந் தேதி) பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

முழு பட்ஜெட் என்றால் அரசு பெரிய அளவில் தனது கொள்கை முடிவுகளை அறிவிக்க முடியும், நலத்திட்டங்களை வெளியிட இயலும். உத்தேச வரவுகளை பதிவு செய்ய முடியும். செலவினங்களை கணித்துக்கூற இயலும்.

இடைக்கால பட்ஜெட்டில் அதற்கு வாய்ப்பு இல்லை.

தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள புதிய அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். #Budget #PiyushGoyal
Tags:    

Similar News