செய்திகள்

மழைக்கு பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: கர்நாடக முதல்வர் அறிவிப்பு

Published On 2017-10-15 02:11 GMT   |   Update On 2017-10-15 02:11 GMT
பெங்களூருவில் மழைக்கு பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பூசாரியின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நகரில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி சித்தராமையா நேற்று காலையில் பார்வையிட்டார்.

மேலும் குருபரஹள்ளியில் கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்டு பலியான பூசாரி வாசுதேவ் பட்டின் வீட்டிற்கு சித்தராமையா சென்றார். பின்னர் அவர், வாசுதேவ் பட்டின் மனைவிக்கு ஆறுதல் கூறினார். மேலும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், குழந்தைகளுக்கான படிப்பு செலவை அரசு ஏற்கும் என்றும் வாசுதேவ் பட்டின் மனைவியிடம் முதல்-மந்திரி சித்தராமையா உறுதி அளித்தார்.

அப்போது அங்கிருந்த வாசுதேவ் பட்டின் உறவினர்கள், இப்போதே நிவாரணம் வழங்க வேண்டும் என்று சித்தராமையாவிடம் கூறினார்கள். உடனே அவர், அதிகாரிகள் நிவாரணம் வழங்குவார்கள் என்று வாசுதேவ் பட்டின் உறவினர்களிடம் கூறினார். இதனை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டு, இங்கேயே நிவாரணம் வழங்கும்படி சொல்லிக் கொண்டு இருந்தார்கள். பின்னர் அங்கிருந்த அதிகாரிகள் வாசுதேவ் பட்டின் உறவினர்களை சமாதானப்படுத்தினார்கள்.

இதற்கிடையில், குருபரஹள்ளியில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்-மந்திரி சித்தராமையாவை சில பெண்கள் சூழ்ந்து கொண்டு, மழை வந்தாலே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாகவும், அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. உடனே அங்கிருந்து முதல்-மந்திரி சித்தராமையா வேகமாக புறப்பட்டு சென்றுவிட்டார். முன்னதாக முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் நேற்று இரவு (அதாவது நேற்று முன்தினம்) பெய்த பலத்த மழைக்கு 5 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதுபோன்ற துயர சம்பவம் நடந்திருக்கக்கூடாது. பெங்களூருவில் கடந்த 60 நாட்களில், 47 நாட்கள் விடாமல் மழை பெய்துள்ளது. நான் கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து பெங்களூருவில் வசித்து வருகிறேன். எனது வாழ்நாளில் பெங்களூருவில் இப்படி ஒரு மழையை பார்த்ததில்லை. பெங்களூருவில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

மழைக்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் குருபரஹள்ளியில் கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்ட பூசாரியான வாசுதேவ் பட்டின் மனைவியின் படிப்புக்கு ஏற்ற அரசு வேலை வழங்கப்படும். அவரது பிள்ளைகளின் படிப்பு செலவை அரசு ஏற்கும். மழையால் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூருவில் வரலாறு காணாத மழை பெய்திருப்பதால், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 5 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆனால் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசியல் காரணங்களுக்காக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டுவது சரியல்ல. சாவிலும் அரசியல் செய்வதே பா.ஜனதாவினரின் வேலையாக உள்ளது.

ஏற்கனவே மழையால் பாதித்த சாலைகளை சரி செய்ய உத்தரவிட்டுள்ளேன். மழை தொடர்ந்து பெய்வதால் சாக்கடை கால்வாய்களை சரி செய்யும் பணிகளை செய்ய முடியவில்லை. பெங்களூருவில் மழையால் மக்கள் சிரமப்படுவதும், 5 பேர் பலியாகி இருப்பதும் மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News