தமிழ்நாடு

பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

Published On 2024-05-26 05:00 GMT   |   Update On 2024-05-26 05:00 GMT
  • வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
  • மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்:

தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே கோடை வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக 112 டிகிரி வரை ஒரு சில மாவட்டங்களில் வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கோடை வெயிலை தாங்க முடியாமல் தவித்து வந்தனர்.

இதனை தணிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கோடை மழை குளிர்வித்தது. ஒரு சில இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் அளவிற்கு மழை பெய்ததோடு உயிர்பலியையும் ஏற்படுத்தியது. டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பருவம் தவறிய பலத்த மழையால் கடுமையான சேதங்களை சந்தித்தன.

இதற்கிடையே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. ரீமால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுவடையக்கூடும் என்றும், நள்ளிரவில் வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அவ்வாறு புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசும் என்றும் கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில் புயல் கரைக்கு நெறுங்கும் நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாகவும், தகுந்த இடைவெளியுடனும் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News