தமிழ்நாடு

கேரளாவுக்கு எதிரான போராட்டத்தை தடுக்க தமிழக அரசு திட்டம்

Published On 2024-05-26 04:30 GMT   |   Update On 2024-05-26 04:30 GMT
  • தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம்.
  • கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

கூடலூர்:

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணை பலம் இழந்து வருவதாகவும், அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கு தமிழக அரசு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு கேரள அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் அணை பலமாக இருப்பதாகவும், அதனை இடித்து புதிய அணை கட்டத் தேவையில்லை எனவும் உத்தரவிட்டனர். மேலும் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும் அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும் உத்தரவிட்டது.

அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் நீர்வரத்து, தண்ணீர் திறப்பு, கசிவு உள்ளிட்டவற்றை பார்வையிட மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகளை உள்ளடக்கிய மூவர் குழுவும், அவர்களுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழுவும் உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் அவ்வப்போது அணை பகுதியை பார்வையிட்டு அதன் அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த கேரள சட்டசபைக் கூட்ட தொடரில் முல்லைப்பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்க கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை நிபுணர் குழுவுக்கு அறிக்கை அளித்தது.

இதன் மீதான விசாரணை நாளை மறுநாள் (28-ந் தேதி) வர உள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த விவகாரம் வெளியில் தெரியாத நிலையில் தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசின் கடிதம் விசாரணைக்கு வர உள்ள தகவல் தமிழக விவசாயிகளிடம் தெரிய வந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீரினை பயன்படுத்தும் 5 மாவட்ட விவசாயிகள் நாளை (27-ந் தேதி) மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் ஒன்று திரண்டு விவசாயிகள் அங்கிருந்து கேரள எல்லையான குமுளிக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் வருகிற ஜூன் 4-ந் தேதி வரை அமலில் இருப்பதால் எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி நாளை லோயர் கேம்ப்பில் விவசாயிகள் போராட்டத்துக்கு திரண்டால் அதனை தடுத்து நிறுத்தி கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் எந்தவித அமைப்பினரோ, குழுவினரோ போராட்டம் நடத்தக்கூடாது. இது வரை விவசாயிகள் அமைப்போ, வேறு எந்த அமைப்போ போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடிதம் அளிக்கவில்லை. அவ்வாறு கடிதம் அளித்தாலும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்றனர்.

இது குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. இது தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம். எங்கள் எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் மட்டுமே தெரிவிக்க முடியும். தமிழக அரசு கடிதம் எழுதி விட்டால் அனைத்தும் நடந்து விடும் என்று நினைக்கின்றனர். இது தவறு. கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காதவர்கள். எனவே அவர்களிடம் கடிதம் எழுதினால் நடந்து விடும் என்று தமிழக அரசு நினைப்பது தவறு. விவசாயிகள் போராட்டத்தை தடுத்தால் அது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்றனர்.

இதனிடையே பேரணிக்கு திட்டமிட்டுள்ள லோயர் கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags:    

Similar News