தமிழ்நாடு செய்திகள்

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் கோவை விமான நிலையத்தில் இருந்து 3.09 லட்சம் பேர் பயணம்

Published On 2026-02-28 09:57 IST   |   Update On 2026-02-28 09:57:00 IST
  • கோவை விமான நிலையத்தில் ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,871 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
  • கடந்தாண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் 8.3 சதவீதம் குறைவாகும்.

கோவை:

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், புனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே கோவை விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற விமான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி கோவை விமான நிலையத்தில் ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,871 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இது கடந்தாண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் 8.3 சதவீதம் குறைவாகும்.

இந்த மாதத்தில் கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு நகரங்களுக்கு 26 ஆயிரத்து 733 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட 9.3 சதவீதம் குறைவாகும். அதேசமயம் உள்நாட்டு நகரங்களுக்கு 2 லட்சத்து 82 ஆயிரத்து 731 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட 7.4 சதவீதம் அதிகமாகும்.

ஜனவரி மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 464 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.7 சதவீதம் அதிகமாகும். விமான இயக்கங்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதேபோன்று கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டு நகரங்களுக்கு 130.5 மெட்ரிக் டன் சரக்குகளும், உள்நாட்டு நகரங்களுக்கு 830 மெட்ரிக் டன் சரக்குகளும் என மொத்தம் 960.5 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News