search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain"

    • தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
    • சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 5 தினங்களுக்கு பல்வேறு இடங்களில் பலத்த மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தூத்துக்குடியில் இன்று காலையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதே போல ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காலை முதலே மிதமான மழை பெய்தது.

    இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர். கார்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    தொடர்ந்து கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஏரல் பகுதியில் இன்று சுமார் 1 மணி நேரமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது.
    • கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதனால் பொது மக்கள் குழந்தைகள் தவிப்பிற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஆனால் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் தொடர்ந்து வெயில் அடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இன்று அதிகாலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. அதன் பிறகு காலை 9 மணி முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாகவே காணப்பட்டது. அதன் பிறகு மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்தது. இடி மின்னலுடன் கொட்டிய மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது.

    கொட்டாரம், சாமிதோப்பு, சுசீந்திரம், குளச்சல், குழித்துறை, தக்கலை, மார்த்தாண்டம், தடிக்காரன்கோணம், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பேச்சிபாறை அணையை பொருத்தமட்டில் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.16 அடியாக உள்ளது. அணைக்கு 122 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.75 அடியாக உள்ளது.

    அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • ஏரியில படகு சவாரி செய்வது மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
    • மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கோடைகாலம் தொடங்கியது முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. தற்போது ரம்ஜான் பண்டிகை முதல் தொடர் விடுமுறை வருவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் நகரின் அனைத்து இடங்களிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது. தரைப்பகுதியை போலவே கொடைக்கானலிலும் பகல் பொழுதில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இருந்த போதும் ஏரியில படகு சவாரி செய்வது மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் கொடைக்கானலில் நேற்று நள்ளிரவு முதல் நகர் பகுதியிலும், மலை கிராமங்களிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் பிடியில் சிக்கி தவித்த உள்ளூர் மக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானலில் பல்வேறு வனப்பகுதியிலும், தனியார் பட்டா இடங்களிலும் கோடைகாலம் தொடங்கியது முதல் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மரங்கள், மூலிகை செடிகள் கருகி வந்தன.

    தற்போது பெய்துவரும் மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏரிச்சாலை, கலையரங்கம், மூஞ்சிக்கல், கல்லறைமேடு, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன.

    • தமிழ்நாட்டில் நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.
    • அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், வயதானவர்கள், கர்ப்பிணிகள் பகல் நேரத்தில் வெளியே செல்லவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    தமிழ்நாட்டில் நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது.

    குறிப்பாக, திருப்பத்தூர் - 106.88, ஈரோடு - 104, சேலம் - 103.28, கரூர் பரமத்தி - 102.56, தருமபுரி, நாமக்கல் - 102.2, மதுரை விமான நிலையம் - 101.12, திருத்தணி - 100.94, வேலூர் - 100.76, திருச்சி - 100.58, மதுரை நகரம் - 100.4 ஆகும்.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தஞ்சை, நெல்லை, திருவாரூர், கன்னியாகுமரி, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    • சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
    • தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த கடுமையான வெயிலின் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் கொளுத்திய நிலையில், இன்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை முதலில் மிதமாக பெய்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் கனமழையாக பொழிந்தது.

    தூத்துக்குடி நகர் பகுதியான முத்தையாபுரம், பழைய காயல், ஆறுமுகநேரி, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக இந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் அடித்த நிலையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த கோடை மாதங்களில் தான் உப்பு உற்பத்தி தாராளமாக நடைபெறும். ஆனால் இந்த நேரத்தில் மழை பெய்துள்ளதால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பெய்துள்ள மழையின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்கு உப்பு உற்பத்தி பணியை மேற்கொள்ள முடியாது என உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    அதேநேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேல தட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, தளவாய்புரம், வாகைகுளம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 40 மில்லிமீட்டரும், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 13 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன் கோவில், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் வெயில் அடித்தது.

    நெல்லையில் நேற்று மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளை, சமாதானபுரம், மார்க்கெட் பகுதி, பாளை பஸ் நிலைய பகுதிகளில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் சிறிது நேரம் குளிர்ந்த காற்று வீசியது.

    • ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் 2 மாவட்டங்களிலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    மேலும் பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்த தோடு குளிர்ந்த காற்றும் வீசியது. தொடர்ந்து நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரையிலும் ஒருசில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. தூத்துக்குடியில் மாநகர பகுதி, கடற்கரையோரங்கள் மற்றும் உப்பளங்கள் உள்ள பகுதிகளில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டர், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. காக்காச்சி மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டில் தலா 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக ராதாபுரத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்து ள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குலசேரகன்பட்டினத்தில் 10 மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. பாபநாசம் அணையில் நீர் இருப்பு 68.45 அடியாகவும், சேர்வலாறில் 80.90 அடியாகவும், மணி முத்தாறில் 97.31 அடியாகவும் நீர் இருப்பு குறைந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது பெய்த லேசான மழை தண்ணீர் இருப்பை அதிகரிக்காவிட்டாலும், பூமியை சற்று குளிர செய்யும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கூறுகின்றனர்.

    • கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.
    • அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெயில் கொளுத்தும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அவர்கள் குளிர்பானங்களை நாடி செல்கிறார்கள். இதற்காக பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு தர்பூசணி, இளநீர், மோர், கம்பங்கூழ், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காலை 7.30 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    இரவு நேரங்களிலும் கடும் வெப்பம் நிலவி வந்தது. கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீர் இன்றி வறண்டது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதலே நெல்லை மாநகர பகுதிகளான சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்ச நல்லூர், டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.

    நேற்று மதியம் சுமார் ½ மணி நேரம் மழை பெய்த நிலையில் இன்று காலை மீண்டும் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதேபோல களக்காடு, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, சேர்வலாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்தது. காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது.

    அந்த வகையில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    இதேபோல் திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகள் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலன இடங்களின் இன்று பரவலாக மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று பெய்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான கால நிலையை ஏற்படுத்தியது. இதனால் வெப்பத்தில் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
    • ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.

    இங்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்துவைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது.

    கடந்த ஆண்டு மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டி தீர்த்ததால் கிருஷ்ணா கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம்தோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.

    மேலும் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பும் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் வருகிற கோடைமாதங்களில் சென்னை நகரில் குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணாகால்வாய் கரை சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து கண்ட லேறு அணையில் இருந்து தண்ணீரை பெற திட்டமிட்டு இருப்பதாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி ஆகும். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 2.580 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் வினாடிக்கு 150 அடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    • பல வீடுகள் இன்னும் தண்ணீருக்குள்ளே இருக்கின்றன.
    • வெள்ளாளன்விளை மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 16, 17,18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக உடன்குடி அருகே உள்ள சடையநேரிகுளத்தில் கீழ்புறம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் வெள்ளாளன்விளை, வட்டன்விளை, செட்டிவிளை என்ற சிதம்பரபுரம், மருதூர் கரை, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், சீயோன்நகர், லட்சுமிபுரம், செட்டியாபத்துபோன்ற பகுதிகளெல்லாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது.

    பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டது. தற்போது தண்ணீர் வடிந்து போக்குவரத்து சீரானாலும் வெள்ளாளன்விளை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாளன்விளை நயினார்புரம் வட்டன்விளை, சிதம்பரபுரம் என்ற செட்டிவிளை ஆகிய பகுதியில் உள்ள மக்கள் இன்னும் வெள்ளநீருடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்.


    வெள்ளாளன்விளையில் பல வீடுகள் இன்னும் தண்ணீருக்குள்ளே இருக்கின்றன. 60 நாட்களை கடந்தும் தண்ணீரில் மூழ்கி விட்டது. இந்த வீட்டில் உள்ளவர்கள் அருகில் உள்ள கோவில்களிலும், உறவினர்கள் வீட்டிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த தண்ணீரை இன்னும் அப்புறப்படுத்த முடியவில்லை, இதனால் வெள்ளாளன்விளை மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

    பனைமரத் தொழிலாளர்கள், தென்னை, வாழை விவசாயம் மற்றும் பல்வேறு விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் தோட்டத்திற்கு எப்படி போவது? தோட்டத்தில் உள்ள நீர் இறைக்கும் பம்பு செட் மோட்டார் பயன்படுமா? என வருத்தத்தில் உள்ளனர்.

    அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் ஆலோசனையின் படி உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங் வெள்ளாளன்விளை ஊராட்சி மன்ற தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் நீர் இறைக்கும் பம்புசெட் மோட்டார் மூலமாக கடந்த 5 நாட்களாக இரவு பகலாக 2 மின் மோட்டார் முலம் தண்ணீரை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னும் தண்ணீர் குறைந்தபாடு இல்லை.

    மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் 2 மாதங்களை கடந்து தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

    • கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
    • அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.19 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 287 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,000 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முதல் 1,800 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39. 61 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.42 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது.
    • தனியார் நிறுவன காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடு சரியாக இல்லை.

    ஈரோடு:

    வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழ் பெயர் பலகை இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.

    பின்னர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோட்டில் தொடங்கி இருக்கும் இந்த விழிப்புணர்வு பேரணி மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக பேரணிகள் நடத்தி வணிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மீதும் தமிழ் பெயர் வைக்க வலியுறுத்துவோம். 60 சதவீதம் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என வணிகர்களிடம் கூறி உள்ளோம்.

    இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது. வணிகர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு கேட்டிருந்தோம். அது குறித்து எதுவும் இல்லை. ஜி.எஸ்.டி வரி விலக்கில் மாற்றங்கள் கேட்டிருந்தோம், ஒரே முறை வரியாக கேட்டிருந்தோம், வரியை குறைத்தால் வரி ஏய்ப்பு இருக்காது என்பதையும் வலியுறுத்தி இருந்தோம்.

    ஜி.எஸ்.டி சட்ட ரீதியான பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பார்த்து ஜி.எஸ்.டி சட்டத்தை தெரிந்து கொள்வதாக இருக்கிறது. இதனை எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். காலாவதியான சுங்கச்சாவடிகளை 6 மாத காலத்தில் அகற்றுவதாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக துறையின் அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

    ஆனால் இன்னும் எதுவும் அகற்றப்படவில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சாலைகளில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று எதுவும் செய்யாத பட்ஜெட்டாக இருக்கிறது.

    சோலார் பயன்படுத்து பவர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் தருவதையும் ஒரு லட்சம் கோடி வட்டி இல்லா கடன் தருவதையும் வரவேற்கிறோம். ஆனால் அது யாருக்கு தரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றோம். அவர்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுத்து வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.

    இந்தியாவில் வணிகவரி அதிகம் கட்டுவது தமிழ்நாட்டில் தான். இதில் சிறு சிறு குறைபாடுகளை கூட அதிகாரிகள் கையில் எடுத்துக்கொண்டு அபராதம் விதிக்கின்றனர். ஏற்கனவே நசிந்து வரும் தொழிலை மேலும் நசுக்க வேண்டாம்.

    தனியார் நிறுவன காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடு சரியாக இல்லை. விரைவில் அதன் உண்மை தன்மையை அம்பலப்படுத்துவோம். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். வணிகர் சங்க மாநில மாநாட்டில் பல்வேறு பிரகடன தீர்மானத்தை வெளியிட இருக்கின்றோம். இந்த ஆண்டு சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மேயர் நாகரத்தினம் தமிழ் பெயர் பலகையை திறந்து வைத்தார். பேட்டியின் போது அமைச்சர் முத்துசாமி, இளைஞரணி மாவட்ட தலைவர் நெல்லை ராஜா, பேரமைப்பின் மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் உதயம் செல்வன், இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • 3 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
    • வெள்ள நீர் வராமல் பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18-ந் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது.

    இந்நிலையில் உடன்குடி அருகே உள்ள சடையநேரி குளத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக லெட்சுமிபுரம், மாணிக்கபுரம் பகுதி சாலைகளில் கடந்து பத்தாங்கரை வழியாக செட்டிவிளை, வட்டன்விளை, வெள்ளான்விளை, பரமன்குறிச்சி கஸ்பா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.

    கடந்த 45 நாட்களாக குடியிருப்பு பகுதிகளையும், சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து வெள்ளாளன்விளை, வட்டன்விளை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    24 மணிநேரமும் ஜெனரேட்டர் உதவியுடன் இரவு, பகலாக தொழிலாளர்கள் பரமன்குறிச்சி வெள்ளாளன்விளை சாலையில் சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ள நீரை சீயோன்நகர் தேரிப்பகுதியில் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றி வந்த நிலையில் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சி தோல்வியடைந்தது.

    மேலும் பரமன்குறிச்சி-வெள்ளாளன்விளை, சீயோன்நகர், தண்டுபத்து, உடன்குடிக்கு நேரடியாக செல்ல முடியாமல் சுற்றி சென்று வந்தனர்.


    இதனையடுத்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்ற முடியாமல் தற்காலிகமாக அந்த திட்டம் கைவிடப்பட்டு பல ஆயிரம் டன் ராட்சத கற்களை கொண்டு சாலையை சீரமைத்தனர்.

    இதனால் போக்குவரத்து மட்டுமே நடந்து வருகிறது. எனினும் வெள்ளான்விளை, வட்டன்விளை பகுதியில் இன்றளவும் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளான்விளையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்கள் உறவினர்கள் வீடுகளிலும், ஆலயத்தின் பகுதியிலும் தங்கியிருந்து வருகின்றனர்.

    விவசாயிகள் தென்னை, பனை, வாழை போன்ற தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர், விவசாய பணியை தொடங்க முடியாமலும் உள்ளனர்.

    இந்நிலையில் தொடர்ந்து அந்த வெள்ளாளன்விளை, வட்டன்விளை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் அளித்து வந்தனர். இச்சூழ்நிலையில் முதல்வரின் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடங்கப்பட்டு திருச்செந்தூர் பகுதியில் மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் ஒருபகுதியாக வெள்ளாளன்விளை பகுதியில் அவர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பொது மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் வெள்ள நீர் வராமல் பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

    அப்போது அவருடன் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உலகநாதன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., குருச்சந்திரன், வெள்ளாளன்விளை ஊராட்சி மன்றதலைவர் ராஜரெத்தினம் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×