செய்திகள்

பலவீனமான பிரதமர் மோடி - ராகுல் காந்தி நேரடி குற்றச்சாட்டு

Published On 2017-07-05 10:03 GMT   |   Update On 2017-07-05 10:03 GMT
அமெரிக்காவுக்கு சென்று இந்தியர்களின் விசா பிரச்சனை குறித்து டொனால்ட் டிரம்ப்புடன் பேச தவறிய நரேந்திர மோடி இந்தியாவின் பலவீனமான பிரதமர் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது காஷ்மீரை இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள பகுதி என அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கைக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டிருந்தது. ஆனால், டொனால்ட் டிரம்ப் - மோடி இடையிலான சந்திப்பின்போது இது தொடார்பாக அவர் எதுவும் பேசாததை காங்கிரசார் கண்டித்து வருகின்றனர்.

மேலும், இந்தியர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்த விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி H-1B விசா நடைமுறைகளை எளிமைப்படுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுதொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறாததால் காங்கிரஸ் கட்சி கொதிப்படைந்துள்ளது.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை கிண்டலடிக்கும் வகையில் முன்னர் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் தலைமை நிலையத்தின் இணையதளம், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணமானது.., மூலப் பிரச்சனைகள் புறந்தள்ளப்பட்டு ஒரு புகைப்படம் எடுக்கும் விழாவாகவே முடிந்தது என்று குறிப்பிட்டிருந்தது.

அஜய் மாக்கென்

கடந்த மூன்றாண்டுகளில் மோடி 64 முறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார், இதன் மூலம் வெளிநாடுகளில் அவர் பேசிய காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அவரது இந்திய ரசிகர்களுக்குதான் தீனியாக அமைந்ததேயொழிய நாட்டுக்கு ஆக்கப்பூர்வமான  ஆதாயங்கள் ஏதும் ஏற்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் அஜய் மாக்கென் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், மோடியின் அமெரிக்க பயணம் தோல்வியில் முடிந்ததாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தனது கருத்தை பதிவிட்டுள்ள அவர், மோடி-டிரம்ப் பேச்சில் H-1B விசா பிரச்சனை இடம்பெறவில்லை. இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் என்ற சொற்றொடரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியா மிக பலவீனமான பிரதமரை பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News