இந்தியா

கெஜ்ரிவாலுக்கு எதிராக என்ஐஏ விசாரணைக்கு டெல்லி கவர்னர் பரிந்துரை: சதி என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Published On 2024-05-06 14:03 GMT   |   Update On 2024-05-06 14:03 GMT
  • தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து நிதி பெற்றதாக கவர்னருக்கு புகார் வந்துள்ளது.
  • பா.ஜனதாவின் கட்டளையின்படி மேலும் ஒரு சதி- ஆம் ஆத்மி

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் கிடைக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (Sikhs for Justice) இடம் இருந்து அரசியல் நிதி பெற்றதாக வந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் என்ஐஏ விசாரணைக்கு டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்துள்ளார்.

இது பா.ஜனதாவின் உத்தரவு அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு எதிரான சதி என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கவர்னர் மாளிகை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், "கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தேவேந்திர பால் புல்லர் விடுதலையை எளிதாக்குவதற்கான காலிஸ்தான் குரூப்பிடம் இருந்து 16 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றதாக, கவர்னருக்கு புகார் வந்துள்ளது. புகார்தாரரால் சமர்ப்பிக்கப்பட்ட மின்னணு ஆதாரங்களுக்கு தடயவியல் பரிசோதனை உட்பட விசாரணை தேவைப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தேவேந்திர பால் புல்லர். இவருக்கு தண்டனை வழங்கப்பட்டு அமிர்தசரஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தடா நீதிமன்றம் இவருக்கு 2001-ம் ஆண்டு மரண தண்டனை வழங்கியது. அதை உச்சநீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனையாக குறைத்தது.

Tags:    

Similar News