இந்தியா

NEET-PG தகுதி மதிப்பெண்கள் அதிரடியாக குறைப்பு: SC, ST பிரிவினருக்கு -40 ஆக நிர்ணயம்!

Published On 2026-01-14 16:23 IST   |   Update On 2026-01-14 16:23:00 IST
  • 9,000 முதல் 10,000 வரையிலான மருத்துவ மேற்படிப்பு இடங்கள் வீணாவதை நாம் அனுமதிக்க முடியாது
  • SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு, இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், மருத்துவ மேற்படிப்புக்கான காலியிடங்கள் ஏராளமாக இருப்பதால் NEET-PG 2025-க்கான தகுதி மதிப்பெண்களை (Cut-off) மத்திய அரசு செவ்வாய்க்கிழமை குறைத்துள்ளது. 

"மாற்றியமைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, பொதுப்பிரிவு மற்றும் EWS (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்) மாணவர்களுக்கான தகுதித் தேர்ச்சி சதவீதம் 50-லிருந்து 7-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 45-லிருந்து 5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு, இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்மறை மதிப்பெண் முறை உள்ளதால், அவர்களுக்கான தகுதி மதிப்பெண் 800-க்கு -40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு மற்றும் சேர்க்கைக்கான தகுதியை விரிவுபடுத்துவதற்காக, மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வுகள் வாரியம் அனைத்துப் பிரிவினருக்குமான தகுதித் தேர்ச்சி சதவீதத்தை மாற்றியமைத்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு சுமார் 2.4 லட்சம் மாணவர்கள் NEET-PG தேர்வெழுதிய போதிலும், தகுதி மதிப்பெண் அதிகமாக இருந்த காரணத்தால் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சுமார் 65,000 முதல் 70,000 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. இதில் ஏழில் ஒரு பங்கு இடங்கள் காலியாக விடப்பட்டால், அது போதனா மருத்துவமனைகளை (மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும் மருத்துவமனைகள்) பலவீனப்படுத்தும் என்றும், குறிப்பாகப் பயிற்சி மருத்துவர்களை பெரிதும் நம்பியுள்ள அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவையைப் பாதிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெருமளவிலான இடங்கள் காலியாவதைத் தவிர்க்க, தகுதி மதிப்பெண்களை முறையாக மாற்றியமைக்கக் கோரி இந்திய மருத்துவச் சங்கம் கடந்த ஜனவரி 12-ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனையொட்டி தொடர்ந்தே இந்தத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரிய அதிகாரிகள், "இந்த நுழைவுத் தேர்வு ஒரு தரவரிசைப் பட்டியலை உருவாக்குவதற்காகத்தானே தவிர, ஏற்கனவே MBBS மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களின் தகுதியை மறுமதிப்பீடு செய்வதற்காக அல்ல" என்று கூறினர்.

மேலும், "9,000 முதல் 10,000 வரையிலான மருத்துவ மேற்படிப்பு இடங்கள் வீணாவதை நாம் அனுமதிக்க முடியாது" என்றும் தெரிவித்தார். தகுதிச் சதவீதத்தை இவ்வளவு அதிகமாகக் குறைப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்பதை ஒப்புக்கொண்ட அதிகாரி, அதே சமயம் மாணவர் சேர்க்கை சுழற்சி ஏற்கனவே தாமதமாகிவிட்டதைச் சுட்டிக்காட்டினார்.

"முன்பெல்லாம் தகுதி மதிப்பெண்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. ஆனால் இந்த முறை நாம் தாமதமாக இருக்கிறோம். இப்போது எங்களின் முக்கிய நோக்கம் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதும், நாட்டின் மருத்துவ வளங்கள் வீணாவதைத் தடுப்பதும் தான்" என்று அவர் தெரிவித்தார்.

"தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம்", தகுதி மதிப்பெண் மாற்றம் என்பது தேர்வு மதிப்பெண்களையோ அல்லது தரவரிசையையோ மாற்றாது என்றும், யார் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்கள் என்பதை மட்டுமே தீர்மானிக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கனவே தகுதி பெற்ற மருத்துவர்களை வரிசைப்படுத்தவே இந்த 'பெர்சென்டைல்' முறை பயன்படுத்தப்படுகிறது. அனைத்து மேற்படிப்பு இடங்களையும் நிரப்புவதற்கு போதுமான விண்ணப்பதாரர்கள் இருப்பதை உறுதி செய்யவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News