உள்ளூர் செய்திகள்

தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கும் அண்ணாமலையின் முயற்சி பலிக்காது- ஆர்.எஸ்.பாரதி

Published On 2022-07-06 06:22 GMT   |   Update On 2022-07-06 07:28 GMT
  • தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார். அது நடக்காது.
  • தி.மு.க. கட்டுக்கோப்பான இயக்கம். அவர் பப்ளிசிட்டிக்காக இப்படி பேசுகிறார். அவரது பேச்சை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.

சென்னை:

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டிப்பதாக கூறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை பேசும்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்-அமைச்சராக இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைச்சரவைக்குள் கொண்டு வந்தார்.

அதனால் அங்கே பிளவு ஏற்பட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய ஆட்சி உருவானது. அதேபோல் தமிழகத்திலும் முதல்-அமைச்சரின் மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவரும் அமைச்சரவைக்குள் வருவார் என்று பேசப்படுகிறது.

அப்படி நடந்தால் தி.மு.க.வில் இருந்தும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என்று பேசினார்.

சிவசேனாவையும், தி.மு.க.வையும் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுபற்றி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார். அது நடக்காது. தி.மு.க. கட்டுக்கோப்பான இயக்கம். அவர் பப்ளிசிட்டிக்காக இப்படி பேசுகிறார். அவரது பேச்சை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.

பிள்ளை பிடிக்கிற கட்சி தான் பி.ஜே.பி. ஆரம்பத்தில் சஞ்சய் காந்தியின் மகன் வருண்காந்தியை பாரதிய ஜனதாவுக்கு இழுத்தார்கள். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த குமரிஅனந்தனின் மகள் தமிழிசை சவுந்தரராஜனை பா.ஜ.க. வில் சேர்த்து பதவி கொடுத்தனர்.

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை பா.ஜ.க.வில் சேர்த்தனர். இப்படி பிள்ளை பிடிக்கும் பணியைதான் பாரதிய ஜனதா கட்சி செய்து கொண்டிருக்கிறது.

இனிமேல் எந்த பிள்ளையும் அங்கு போகாது. அண்ணாமலையின் முயற்சி பலிக்காது.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

Tags:    

Similar News