உள்ளூர் செய்திகள்

ஆற்றில் தண்ணீரை கண்டதும் ஆனந்த குளியலிட்ட யானை- சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

Published On 2024-04-29 09:55 GMT   |   Update On 2024-04-29 09:55 GMT
  • தெப்பக்காடு கும்கி யானைகளை பாகன்கள் தினமும் ஆற்றுக்கு அழைத்துச்சென்று குளிப்பாட்டி அழைத்து வருகின்றனர்.
  • தண்ணீரை கண்டதும் குதூகலம் அடைந்த யானைகள், ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தன.

ஊட்டி:

கோடை மழை பெய்யாததால் நீலகிரி மாவட்டம் முழுவதுமே கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. இதன் ஒரு பகுதியாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் நீர்நிலைகளை தேடி இடம் பெயர தொடங்கி உள்ளன. மேலும் முதுமலை புலிகள் காப்பகம் தற்போது வறண்டு காணப்படுகிறது. அங்கு பச்சைப்பசேல் பசுமையை பார்ப்பது அரிதாக உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கும்கி யானைகள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கட்டிடம் கட்டுமான பணிகள் காரணமாக அங்குள்ள 4 பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நீலகிரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், தெப்பக்காடு கும்கி யானைகளை பாகன்கள் தினமும் ஆற்றுக்கு அழைத்துச்சென்று குளிப்பாட்டி அழைத்து வருகின்றனர். அதன்படி நேற்று கும்கி யானைகள் மாயார் ஆற்றுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது தண்ணீரை கண்டதும் குதூகலம் அடைந்த யானைகள், ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தன.

மேலும் அவை ஆழமான பகுதிகளுக்குள் சென்று, தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி உடல் முழுவதும் வாரி இறைத்து உற்சாக குளியல் போட்டன. முதுமலை மாயார் ஆற்றுக்கு பாகனை சுமந்து வந்த யானை, ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போடுவது தொடர்பாக வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News