தமிழ்நாடு செய்திகள்

டி.ஆர்.பாலு எம்.பி. தொடர்ந்த அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு- குறுக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published On 2025-12-24 13:00 IST   |   Update On 2025-12-24 13:00:00 IST
  • வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
  • டி.ஆர்.பாலு, அண்ணாமலை இருவரும் நேரில் ஆஜராகவில்லை.

சென்னை:

பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த போது அண்ணாமலை, 'தி.மு.க. பைல்ஸ்' என்ற பெயரில் தி.மு.க. அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார்.

அதில், தி.மு.க. பொருளாளரும், எம்பி.யுமான டி.ஆர்.பாலு, அவரது மகனும் அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் டி.ஆர்.பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தன்னுடைய பெயருக்கும் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கில் டி.ஆர்.பாலுவின் 21 நிறுவனங்கள், சொத்துக்கள் தொடர்பாக அண்ணாமலை தரப்பில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஆர்.பாலு, அண்ணாமலை இருவரும் நேரில் ஆஜராகவில்லை.

இதையடுத்து இரு தரப்பிலும் ஆஜராகி இருந்த வக்கீல்கள் குறுக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளி வைக்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதி, குறுக்கு விசாரணையை ஜனவரி 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

Similar News