சென்னையில் 214 இடங்களில் இலவச நவீன கழிப்பிட வசதி
- ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் தனித்தனியாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டு சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
- மாநகராட்சி பூங்காக்கள், மயான பூமிகள் உள்ளிட்ட இடங்களிலும் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை மாநகர பகுதியில் பொதுமக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தருதல், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கும் நோக்கில் ஏற்கனவே உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரித்தல் மற்றும் புதிய கழிப்பறைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகரின் பல பகுதிகளில் பொதுக் கழிப்பிடம் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 260 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் 3271 கழிப்பிட இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக மேலும் 214 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் 1905 கழிப்பிட இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு இந்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது வரை மொத்தமாக 474 இடங்களில் இலவச ஒப்பனைகள் 5176 கழிப்பிட இருக்கைகளுடன் பயன்பாட்டில் உள்ளது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1262 இடங்களில் இலவச ஒப்பனைகள் 10,437 கழிப்பிட இருக்கைகளாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கழிப்பறைகள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் எளிதாக பயன்படுத்தும் வகையிலும் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளுடன் இந்த கழிப்பிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் தனித்தனியாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டு சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கழிப்பிடங்களில் மக்களின் கருத்துக்களை பெறவும் குறைகள் இருப்பின் அவற்றை விரைந்து நிவர்த்தி செய்யவும் கியூ ஆர் கோடு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர மக்களின் தேவைக்கேற்ப மாநகராட்சி பூங்காக்கள், மயான பூமிகள் உள்ளிட்ட இடங்களிலும் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கழிப்பறை கட்ட மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்திடும் தகவல்களின் அடிப்படையில் சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு கழிப்பறைகள் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.